வீணா தட்சிணாமூர்த்திக்கு சுண்டல்!  

வீணா தட்சிணாமூர்த்திக்கு சுண்டல்!  
Updated on
1 min read

வியாழக்கிழமையில், வீணா தட்சிணாமூர்த்தியை வீட்டில் விளக்கேற்றி வேண்டிக்கொள்ளுங்கள். சுண்டல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். குழந்தைகள் கல்வி கேள்வியிலும் இசை முதலான கலைகளிலும் சிறந்துவிளங்குவார்கள்.

தஞ்சாவூருக்கு அருகில் உள்ளது திருப்பூந்துருத்தி. மிகப் பிரமாண்டமான திருத்தலம் இது. அஷ்ட வீரட்டான ஸ்தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் தலத்தில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில், 4 கி.மீ. தொலைவிலும், திருவையாற்றில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் திருப்பூந்துருத்தி இருக்கிறது.


திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் ஆறாவது தலமாகும். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் புஷ்பவன நாதர். அம்பாள் - செளந்தர்யநாயகி. அழகால் அமர்ந்த நாயகி எனும் திருநாமமும் உண்டு.


இத்தலத்தின் சிறப்பம்சம் இங்குள்ள வீணாதட்சிணாமூர்த்தி. ஒலி எனும் நாதத்தின் உற்பத்தி ஸ்தானமான நாதப்பிரம்மம் எத்தகையது என கந்தவர்களும், தேவர்களும், நாரதரும் கேட்க... பூந்துருத்திக்கு வருக எனப் பணித்தார் சிவனார்.


குருவும் எழுந்தருளி வீணையை ஏந்தி மீட்டினார். நாதத்தின் மையத்தோடு அனைவரும் கலந்தனர். இந்தக் கோலம் வேறெங்கும் காணமுடியாத அற்புதம். இசையில் தேர்ச்சிபெற இந்தத் தல தட்சிணாமூர்த்தியை வணங்குவார்கள். .


இந்தத் தலத்துக்கு இன்னும் இன்னுமாகப் பல பெருமைகள் உள்ளன. பல அற்புதங்கள் இந்தத் தலத்தில் நிகழ்ந்திருக்கின்றன என்கிறது ஸ்தல புராணம்.


திருவையாறில் தியாக பிரம்ம இசை விழா நடைபெறும் போது, இங்கே திருப்பூந்துருத்தி திருத்தலத்துக்கு வந்து வீணை தட்சிணாமூர்த்தியை வணங்கி வழிபட்டுச் செல்வார்கள் பக்தர்கள்.


அதேபோல், பங்குனியிலும் சித்திரையிலும் வந்து வணங்கினால், கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்! வியாழக்கிழமைகளில், வீட்டில் விளக்கேற்றி, சுண்டல் நைவேத்தியம் செய்து, வீணா தட்சிணாமூர்த்தியை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். குழந்தைகள் கல்வி கேள்வியில், இசை முதலான கலைகளில் சிறந்துவிளங்குவார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in