Published : 26 Mar 2020 03:50 PM
Last Updated : 26 Mar 2020 03:50 PM

பிரம்மாவும் சரஸ்வதியும் திருக்கண்டியூரில்! 


ஒரே தலத்தில் பிரம்மாவையும் தரிசிக்கலாம்; அவரின் துணைவியார் சரஸ்வதிதேவியையும் வழிபடலாம்.


தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது திருக்கண்டியூர் எனும் அற்புதமான திருத்தலம். பிரம்மாவுக்கு அமைந்துள்ள இத்தனை புராணச் சிறப்புமிக்க கோயில்களில் இதுவும் ஒன்று.


இந்தக் கோயிலில் உள்ள சிவனாரின் திருநாமம் - பிரம்ம சிரகண்டீஸ்வரர். தேவ கோஷ்டத்தில் தனியே வீற்றிருக்கிறார் பிரம்மா. ஆனால், இத்தலத்தில் பிரம்மாவும், சரஸ்வதியும் தம்பதி சமேதராக வீற்றிருக்கும் சந்நதி வெகு அழகு. .


பிரம்மாவின் தலையை சிவனார் கொய்தார் என்பதால், சிவனாருக்கு பிரம்ம சிரகண்டீஸ்வரர் எனும் திருநாமம். அழகிய இந்த ஆலயத்திற்கு அருகில் இன்னொரு கோயிலும் உள்ளது. அது பெருமாள் கோயில். இங்கே உள்ள பெருமாளின் திருநாமம் சாப விமோசனப் பெருமாள்.
சிவாலயத்தில் கோஷ்டத்தில், பிரம்மாவையும் சரஸ்வதிதேவியையும் தரிசிக்கலாம். படைத்த பிரம்மா அவரே படைத்துக் கொண்டாரோ என்று திணறடிக்கும் அழகு. நான்கு முகங்களிலும் ஞானத்தின் பூரிப்பு பரவிக் கிடக்கிறது. பேரானந்தச் சிரிப்பொன்று உதட்டில் பொங்குகிறது. இப்படியொரு சிலை மிக அரிது.


அழகிய ஜடையின் அலங்காரமும், மார்பின் மேல் பரவியிருக்கும் ஹாரங்களும், பூணூலின் மெல்லிய நுணுக்கமும் சிற்ப நுட்பப் பேரழகு. தனது கணவனோடு சாந்தமாகி அமர்ந்திருக்கும் சரஸ்வதி நான்கு கரங்களோடு வீற்றிருக்கிறாள்.


கல்வியும், ஞானமும் சேர்ந்திழைத்துத் தரும் ஞானவாணி. பிரம்மனின் படைப்பில் தம் சக்தியின் நீட்சியைச் செலுத்தி கலைச் செல்வத்தை வாரியிறைக்கும் வெண்ணிறநாயகி. இருவரின் திருமுகங்களையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.


படைப்புக் கடவுளையும் ஞான நாயகியையும் வீட்டில் விளக்கேற்றி, பால் பாயச நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். வீட்டில் நிம்மதியும் அமைதியும் நிலவும். ஆனந்தமும் குதூகலமும் குடிகொள்ளும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x