

உலகில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களுக்கும் தலைமைப் பீடமாகத் திகழ்வது காஞ்சி காமாட்சி ஆலயம். காஞ்சியம்பதியை சக்தியின் தலைமைப் பீடம் என்றே போற்றுகிறது காஞ்சி புராணம்.
மூக பஞ்ச சதியில் ... ஸ்ரீகாமாக்ஷி அம்மனைத் துதிக்கும் மிக அற்புதமான ஸ்தோத்திரம் உள்ளது. இந்த ஸ்லோகம் குறித்து, காஞ்சி மகா பெரியவா நமக்கெல்லாம் அருளிச்சென்றுள்ளார். இந்த ஸ்லோகத்தை எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். சொல்லி அம்பாளை வீட்டிலிருந்தே வழிபடலாம் என்கிறார் காஞ்சி காமாட்சி அம்பாள் கோயிலின் நடராஜ சாஸ்திரிகள்.
செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில், பண்டிகை முதலான நாட்களில், மனசஞ்சலத்தால் குழம்பித் தவிக்கும் தருணங்களில் மூக பஞ்ச சதியில் உள்ள காமாட்சி அன்னையின் ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். துர்விஷயங்கள், கடன் தொல்லைகள், குடும்பத்தில் சஞ்சலங்கள், மனதில் தேவையில்லாமல் தோன்றும் பயம் முதலான தருணங்களில், வீட்டில் விளக்கேற்றி காமாட்சி அம்பாளை ஆத்மார்த்தமாக நினைத்து ஸ்லோகத்தைச் சொல்லி வந்தால், பூரண நலம் பெறுவாள். உலகின் தலைமைப் பீட நாயகியான காஞ்சி காமாட்சி, அகிலத்தையும் அகிலத்து மக்களையும் காத்தருள்வாள்!
ச்ரியம் வித்யாம்தத்யாத்ஜனனி நமதாம் கீர்த்திமமிதாம்
ஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி காமாக்ஷி! கருணா
த்ரிலோக்யாமாதிக்யம் த்ரிபுரபரிபந்திப்ரணயினி
ப்ரணாமஸ்த்வத்பாதே ஸமிததுரிதே கிம் ந குருதே
அதாவது, காமாக்ஷி அன்னையே... உன்னை வணங்குபவர்களுக்கு உனது கருணையானது தனம், வித்தை, அளவற்ற கீர்த்தி, நல்ல புத்திரன், மூவுலகிலும் மேன்மையாக இருக்கும் தன்மை, ஆரோக்கியம், ஆயுள் ஆகியவற்றை வெகு விரைவிலேயே வரமாகத் தருகிறது.
திரிபுர சம்ஹாரம் செய்த பரமேஸ்வரரின் பத்தினியே... பக்தர்களது பாவத்தைப் போக்கும் தங்களின் சரணத்தில் செய்த நமஸ்காரமானது, எங்களுக்கு எதைத்தான் கொடுக்காது? எனச் சொல்லி வேண்டுகிறது.
பௌர்ணமி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், அம்பாளுக்கு உகந்த திருநாட்களிலும், அம்பாளுக்கு செவ்வரளி முதலான சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து, இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபட, சகல நன்மைகளும் உண்டாகும் என்கிறார் காஞ்சி காமாட்சி கோயிலின் நடராஜ சாஸ்திரிகள்.