Last Updated : 08 Mar, 2020 10:58 AM

 

Published : 08 Mar 2020 10:58 AM
Last Updated : 08 Mar 2020 10:58 AM

குளத்தில் விளக்கு; திருக்கோஷ்டியூர் தெப்ப பிரார்த்தனை! 

குளத்தில் விளக்கேற்றி விட்டு வழிபட்டால், குலம் தழைக்கும், சந்ததி சிறக்கும், நினைத்த காரியம் யாவும் நடந்தேறும் என்பது ஐதீகம். திருக்கோஷ்டியூர் தெப்போத்ஸவத்தில், குளத்தில் விளக்கேற்றி விடுவது ஐதீகம்.
நவகிரகங்களில் ஒருவரான புதனின் மைந்தன் புருரூபன், மகா சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். ஒருமுறை புருரூப சக்கரவர்த்தி திருக்கோஷ்டியூர் வந்தபோது, மாசி மகாமகம் வந்தது.
மகா மகத்தன்று மகாவிஷ்ணுவை, கங்கையில் நீராடி தரிசிக்க விரும்பினார் புருரூப சக்கரவர்த்தி. அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், திருக்கோஷ்டியூர் தலத்தின் வடகிழக்கு திசையில் உள்ள கிணற்றில் இருந்து கங்கை நதி பொங்கிவர, அதன் மத்தியில் மகாவிஷ்ணு காட்சி தந்தார். தற்போது ஆலய பிராகாரத்தில் அமைந்துள்ள இந்தக் கிணறு, ‘மகாமக கிணறு’ என்று அழைக்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது திருக்கோஷ்டியூர் திருத்தலம். இங்கே திருப்பத்தூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம். இங்கே பெருமாளின் திருநாமம் & ஸ்ரீசௌம்ய நாராயண பெருமாள்.
இரண்யகசிபு என்ற அரக்கனை அழிப்பதற்காக சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மதேவர் ஆகிய மும்மூர்த்திகளும் சேர்ந்து கூடிப் பேசி புதிய அவதாரம் ஒன்றை உருவாக்கினார்கள். அந்த அவதாரமே நரசிம்ம அவதாரம் ஆகும். அந்த அவதாரத்தை உருவாக்கும் நோக்கில் மும்மூர்த்திகளும் அமர்ந்து பேசிய இடமே கோஷ்டியூர் என்ற திருக்கோஷ்டியூர் ஆனது.
பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என ஐந்து ஆழ்வார்பெருமக்கள் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைஷ்ண திருத்தலம் இது! 108 வைஷ்ணவ தலங்களில் முக்கியமான தலம் என்று போற்றப்படுகிறது.
திருமாமகள் தாயாருக்கு தனிச்சந்நிதி இருக்கிறது. இவளுக்கு திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் என்றும் பெயர்கள் உண்டு. பேரழகு கொண்டவர் பெருமாள். எனவே, இங்கு உள்ள பெருமாளுக்கு ஸ்ரீசௌம்யநாராயண பெருமாள் எனும் திருநாமம் கொண்டார்.
பொதுவாக கோயில்களில் உற்ஸவர் விக்கிரகங்களை பஞ்சலோகத்தால் அமைப்பது வழக்கம். ஆனால், தூய்மையான வெள்ளியால் ஆன விக்கிரகம் இங்கே உள்ளது. இதை தேவலோக இந்திரனே தந்தருளியதாக ஐதீகம்.
மகாவிஷ்ணு இரண்யனை வதம் செய்யும் வரையில், இந்தத் தலத்தில் தங்கியிருந்த இந்திரன், தான் தேவலோகத்தில் பூஜித்த சௌம்ய நாராயணரின் விக்கிரகத் திருமேனியை, கதம்ப மகரிஷிக்கு கொடுத்தார். இந்த மூர்த்தியே இந்தக் கோயில் உற்ஸவராக காட்சி தருகிறார்.
இந்த ஊரில், கோயிலுக்கு அருகில் வசித்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் திருமந்திர உபதேசம் பெறுவதற்காக, வைணவ ஆச்சார்யரான ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டு நடந்தே வந்தார். நம்பியின் இல்லத்திற்கு சென்ற அவர் வெளியில் இருந்து அழைத்தார்.
திருக்கோஷ்டியூர் நம்பி, ‘யார்?’ என்று கேட்க, ‘நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்’ என்றார். நம்பி வீட்டிற்குள்ளிருந்தபடியே, ‘நான் செத்து வா!’ என்றார். இதைப் புரியாத ராமானுஜரும் சென்றுவிட்டார். இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பியும் இதே பதிலைச் சொன்னார்.
அடுத்த முறை சென்ற ராமானுஜர் ‘அடியேன் வந்திருக்கிறேன்’ என்றார். அவரை அழைத்த நம்பி, ‘ஓம் நமோநாராயணாய’ என்ற மந்திர உபதேசம் செய்தார். மேலும், மந்திரத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும், மீறி சொன்னால் அவருக்கு நரகம் கிடைக்கும் என்றும் கூறினார்.
ஆனால், ராமானுஜரோ உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்துவிட்டார். கோபம் கொண்ட நம்பி, ராமானுஜரை கடிந்து கொண்டார்.
அவரிடம் ராமானுஜர் பணிவுடன், தனக்கு நரகம் கிடைத்தாலும், மக்கள் நன்றாக வாழ்வார்களே, அதுபோதும்’ என்றார். இதைக் கேட்டு நெகிழ்ந்த நம்பி, ‘நீ என்னிலும் பெரியவர், எம்பெருமானார்’ என்று சொல்லி கட்டித் தழுவிக்கொண்டார். இந்தக் கோயிலில் நம்பி, ராமானுஜர் இருவருக்கும் தனி சந்நிதிகள் உள்ளன.
இங்கு நடைபெறும் திருவிழாக்களில் மாசி தெப்பத்திருவிழா மிகவும் பிரசித்தம். அப்போது பக்தர்கள் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள படிகட்டுகளில் அகல்விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்வார்கள். புதிதாக வேண்டிக் கொள்பவர்கள் இந்த விளக்குகள் எரிந்து முடியும்வரை காத்திருந்து பிறகு அந்த விளக்கை எடுத்துச் செல்வார்கள்.
அந்த விளக்குகளை தங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டி, வீட்டில் வைத்து தினமும் சூடம் காட்டி பிரார்த்தனை செய்து வருவார்கள்.
மறுவருடம் அவர்கள் கோரிக்கை நிறைவேறியவுடன் அந்த விளக்கை கொண்டு வந்து தெப்பக்குளத்தில் ஏற்றிவைத்து விட்டு செல்வது வழக்கம். குறிப்பாக திருமணம் வேண்டி வருவோர் ஏராளமானவர்கள். இதனால் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் பெண்கள் கூட்டம் அன்று அதிகம் நிறைந்திருக்கும்.
இங்கு வந்து தெப்ப விளக்கு ஏற்றினால், நல்ல மண வாழ்க்கை ஏற்படுவது உறுதி. மேலும் ஏராளமான பக்தர்கள், தெப்ப மண்டபத்தை சுற்றி கொட்டகை அமைத்து அன்னதானம் வழங்குவார்கள்!
மாசி மாத தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் சிறப்பு அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள், திருவீதியுலா ஆகியன நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான மாசி தெப்பத் திருவிழாவும் விளக்கேற்றி வழிபடும் வைபவத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். குளத்தில் விளக்கேற்றுவார்கள். விளக்கை எடுத்து வந்து வீட்டுப் பூஜையறையில் வைத்து வழிபடுவார்கள்.
**************************************************

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x