

நாகப்பட்டினத்திற்கு வடக்கில் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நாகூர் தர்கா ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. மத, இன பேதமின்றி தினமும் அலையலையாக மக்கள் நாகூர் நாயகரைத் தரிசிக்க வருகிறார்கள். அதிகாலையில் கதவு திறக்கப்படுவதிலிருந்து நாள் முழுதும் மக்கள் திரள்கின்றனர். நேர்ச்சைக்காக சில நாள் தர்காவில் பலர் தங்குகிறார்கள். நாகூர் தர்காவின் பரப்பளவு ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 790 சதுரஅடி.
நாகூர் நாயகர் ஷாஹூல் ஹமீது அவர்கள் உத்தரப் பிரதேசத்திலுள்ள மாணிக்கப்பூரில் கி.பி 1490-ல் (ஹிஜ்ரி 910) பிறந்தார். தந்தையார் சையிது ஹசன் குத்துாஸ். தாயார் சையிது பாத்திமா. மகனுக்கு சையது அப்துல் காதிர் என்று பெயரிட்டார்கள்.அவருக்கு அண்ணனும் தம்பியிமாக இரு சகோதரர்கள் இருந்தனர்.
ஷாஹூல் ஹமீது எட்டு வயதிலேயே குர்ஆனை மனப்பாடம் செய்து அரபு மொழி இலக்கணம், இலக்கியங்களைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். 18 வயதில் அவருக்கு ஆன்மிக ஆவல் அதிகரித்ததால் ஞான குருவைத் தேடி குவாலியருக்குப் புறப்பட்டார். அந்த நகரில் சற்குரு சையிது முஹம்மதுவுடன் 10 ஆண்டுகள் தங்கி ஞான, ஆன்மீகப் பயிற்சிபெற்றார்.
கல்வித்திறன் மிக்க அவருக்குத் தங்கள் புதல்வியைத திருமணம் செய்துவைக்க குருவின் குடும்பத்தினர் விரும்பினர். மண வாழ்க்கையில் தமக்கு விருப்பம் இல்லை எனத் தெரிவித்துப் பிரியாவிடை பெற்றார்.
தாயகத்துக்கு வந்த நாயகர்
பிறகு, ஷாஹூல் ஹமீது மாணிக்கப்பூரில் பெற்றோருடன் சில காலம் தங்கிவிட்டு 27-ம் வயதில் புனித மக்காவுக்குப் புறப்பட்டார் ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான், அன்றைய பாரசீகமான ஈரான் ஆகிய நாடுகளின் வழியாகப் பயணம் நடைபெற்றது. பிறகு துருக்கிக்குச் சென்று சமய போதனை செய்தார். பெற்றோரின் ஜீவியம் முடிவடையப் போவதை உணர்ந்து பத்து ஆண்டுகளுக்குப்பிறகு 37-ம் வயதில் தாயகத்துக்கு வந்தார் நாயகர். ஞானமேதையான புதல்வரைப் பார்த்த பிறகு சில தினங்களில் அவரைப் பெற்றோர் காலமானார்கள்.
நாற்பது நாட்களுக்குப் பிறகு அடுத்த கட்டப் பயணத்தைத் தொடங்கினார். முதலில் சீனாவுக்குச் சென்றார். அதையடுத்து ஒன்பது ஆண்டுகள் அரேபியாவிலும், அதைச் சுற்றியுள்ள ஏமன், ஈராக், ரோம்,சிரியா நாடுகளில் சஞ்சாரம் செய்தார்.
பிறகு ஜித்தாவில் கப்பலேறி கேரளம் வழியாகத் தென்னகப் பயணம் செய்தார் நாயகர். மலபாரிலுள்ள பொன்னானி முதலான இடங்களில் தங்கிவிட்டு மாலத் தீவுக்குச் சென்று போதனை புரிந்தார். இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு காயல்பட்டினம், கீழக்கரை,தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர் முதலான நகர்கள் வழியாக நாகூருக்கு வந்தார் ஷாஹூல் ஹமீது நாயகர். அங்கேயே நிலையாகத் தங்கி வாழ்ந்த காலம் 28 ஆண்டுகள்.
நாகூர் நாயகர் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும் பாலநாயகர் என அழைக்கப்பட்ட யூசுப் சாஹிபை வளர்ப்பு மகனாக்கிக் கொண்டார்.
மன்னரின் நோயைத் தீர்த்தவர்
மக்களின் பிணி தீர்க்கும் செம்மலாகத் திகழ்ந்த அவர்களின் சாதனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரார்த்தனை மூலம் பலருடைய நோய்களைக் குணப்படுத்தினார்.. தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் அச்சுதப்ப நாயக்கர் தீராத நோயிலிருந்து நிவாரணம் பெற்றவர்களில் ஒருவர்.
ஞான மேதை ஷாஹூல் ஹமீது நாகூர் கடற்கரையோரத்தில் காட்டுப் பகுதியில் சீடர்களுடன் தங்கியிருந்த செய்தியை அறிந்த அச்சுதப்ப நாயக்கர் நாகூருக்கு வந்தார். அவர்கள் வசதியாகத் தங்குவதற்கு 200 ஏக்கர் நிலத்தை மானியமாக அளித்தார் அந்த இடத்தில்தான் நாகூர் தர்கா அமைந்துள்ளது.
வளர்ப்பு மகன் யூசுபுக்குத் திருமணம் செய்துவைக்க நாகூர் நாயகர் விரும்பினார். அப்போது நாகப்பட்டினத்திலிருந்து ஜாவா தீவுகளைச் சேர்ந்த பத்தாவியாவுக்கு ஒரு கப்பல் புறப்பட்டதால் அதில் அவர் பயணம்செய்தார். அந்தக் கப்பல் தற்செயலாக பர்மாவிலுள்ள மோல்மீன் பகுதிக்குச் சென்றது. அதனால் நாகூர் நாயகர் அங்கேயே தங்கி ஆன்மிக, மருத்துவப் பணிகளில் ஈடுபட்டார். அரசரின் பிணியையும், மக்களின் நோய் நொடிகளையும் நீக்கிய அவர் அங்கேயே தங்கிவிட வேண்டும் என்று அனைவரும் வற்புறுத்தினார்கள். புதல்வரின் திருமணத்தை நடத்துவதற்காக அங்கிருந்து நாகூருக்குத் திரும்பினார் நாயகர்.
கந்தூரி விழா
நாகூர் ஷாஹூல் ஹமீது நாயகர் 68 ஆண்டுகள் வாழ்ந்தார். கி.பி 1558- ஹிஜ்ரி 978 ஜமாதுல் ஆகிர் மாதம் பத்தாம் நாள் வெள்ளிக்கிழமை இரவு காலமானார். அவருடன் தங்கியிருந்த 404 சீடர்கள் வெவ்வேறு பகுதிகளுக்குப் பிரிந்து சென்றார்கள்.
நாகூர் நாயகரின் நினைவாக ஆண்டுதோறும் கந்துாரி விழா நடைபெறுகிறது. முதலாவது கந்துாரி விழா கி.பி 1559-ம் ஆணடில்கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டிலும் ஜமாதுல் ஆகிர் மாதம் முதல் பிறையிலிருந்து பத்தாம் நாள் வரை அந்த விழா நடத்தப்படுகிறது.
தர்காவுக்கு இந்து சமய அன்பர்களின் உபயம் அதிகம். நாகூர் நாயகரின் நல்லாசியினால் கடன் சுமையிலிருந்து விடுபட்ட வணிகர் பழனியாண்டிப் பிள்ளை, நாகூரார் சமாதி மீது போர்வை போர்த்தி மரியாதை செலுத்தத் தொடங்கினார். தனக்கு ஏற்பட்டிருந்த 19 லட்ச ரூபாய் கடனை ஷாஹூல் ஹமீது நாயகர் தீர்த்து வைத்ததன் நினைவாக தர்காவின் 19 வாசல்களையும் அவர் அமைத்தார்.
திருமலைச் செட்டி என்ற செல்வந்தர் அளித்த பொருள்களைக் கொண்டு தர்காவின் பல பகுதிகள் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தஞ்சையை ஆண்டுவந்த பிரதாப் சிங் பிள்ளைப் பேறு இல்லாமல் இருந்தார். நாகூரார் ஆசியினால் ஒரு மகன் பிறந்ததால் மானியங்களை வழங்கி காணிக்கை செலுத்திவந்தார். மிக உயரமான ஒரு மினாராவையும் கட்டினார். அவருக்குப் பிறகு ஆட்சிசெய்த துளசி மன்னர் 15 கிராமங்களை தர்காவுக்கு மானியமாகக் கொடுத்தார்.
நாகூர் நாயகர் பயன்படுத்திய பொருள்கள் தர்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவரைச் சிறப்பித்து குணங்குடி மஸ்தான் சாஹிபு முதலான புலவர்கள் இயற்றிய தமிழ் இலக்கியங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.