

மனமும் எண்ணமுமே முக்கியம். செல்வம் முக்கியமில்லை என்பதையும் அவருடைய பக்தியையும் உலகுக்கு உணர்த்த விரும்பினார் சிவபெருமான். அவர் மிகச் சிறந்த சிவபக்தர். எண்ணமும் செயலும் எப்போதும் சிவ சிந்தனையிலேயே இருந்தது. எப்போதும் சிவநாமத்தையே சொல்லிக் கொண்டிருந்தார் அந்த பக்தர். அவர் பூசலார்!
ஒருநாள்... ’சிவனுக்கு ஒரு ஆலயம் கட்டினால் என்ன?’ என்று பூசலாருக்குத் தோன்றியது. கையில் ஒரு சூடம் வாங்கக் கூட காசில்லை. செல்வந்தர்களிடம் கேட்டார். சிவ பக்தர்களிடம் கேட்டார். ஆனால் கிடைக்கவில்லை. எவரும் தரவில்லை. நொந்துபோனார்.
அப்போதுதான் அவருக்கு அந்த யோசனை வந்தது. பிரமாண்டமான சிவாலயத்தை, தன் மனதுக்குள்ளேயே கட்டுவோம் என முடிவெடுத்தார். ஆகம விதிப்படி ஒரு கோயில் எப்படி கட்டவேண்டுமோ அதன்படி, மனதுக்குள் கட்ட ஆரம்பித்தார். ஓரிடத்தில் அமர்ந்து கொண்டார். கண்கள் மூடி, சிவனாரை வேண்டினார். மளமளவென மனதுக்குள்ளேயே வேலைகளை முடுக்கிவிட்டார். கோபுரம், விமானம், பலிபீடம், கொடிமரம் என பார்த்துப்பார்த்து மனதாலேயே கட்டி முடித்தார். கும்பாபிஷேகம் செய்ய நாளும் குறித்தார் பூசலார்.
அதே வேளையில்... காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜசிம்ம பல்லவ மன்னன், சிவனாருக்கு அழகிய, கருங்கல்லால் ஆன ஆலயத்தைக் கட்டி முடித்திருந்தான். கும்பாபிஷேகம் நடத்துவதற்கு அவனும் நாள் குறித்தான்.
பூசலார் குறித்த நாளும் மன்னன் குறித்த நாளும் ஒரேநாளாக அமைந்ததுதான் இறைவனின் விளையாட்டு. அங்கே... சிவனாரின் திருவிளையாடல் துவங்கியது!
மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், ‘கும்பாபிஷேகத் தேதியை மாற்ற முடியுமா? திருநின்றவூரில் என் பக்தர் ஒருவர் எனக்காக, மிகச் சிறப்பாக கோயில் கட்டியிருக்கிறார். அங்கே நாளைய தினம் கும்பாபிஷேகம். நான் அங்கேதான் இருப்பேன். ஆகவே தேதியை மாற்ற முடியுமா?’’ என்று கேட்டார்.
அதைக் கேட்டு அதிர்ந்துபோனான் மன்னன். ராஜாவான நாம் கட்டிய ஆலயத்தை விட, அந்தக் கோயிலுக்கு முக்கியத்துவம் தருகிறாரே இறைவன் என சிந்தித்தான். கலங்கினான். கோபமானான். தன் படைகளுடன் திருநின்றவூருக்கு உடனே கிளம்பினான்.
அங்கே, அந்த ஊரில் எந்தக் கோயிலும் புதிதாகக் கட்டப்படவில்லை. ஊர்மக்களும் ‘இங்கே யாரும் கோயிலும் கட்டலையே’ என்றார்கள். அப்படியே விசாரித்தபடியே வந்தவர், பூசலாரிடம் விஷயத்தைச் சொல்லிக் கேட்க, ‘ஆமாம், கோயில் கட்டி முடித்து, நாளைய தினம் கும்பாபிஷேகம் நடக்கப் போகிறது’ என்றார். அதைக் கேட்டு குழம்பிய மன்னன், ‘அந்த ஆலயம் எங்கே’ என்று கேட்க, தன் நெஞ்சுப் பகுதியைத் தொட்டு, ‘இங்கேதான் இருக்கிறது கோயில்’ என்று, கோயில் கட்டுமானத்தின் முழுப்பணிகளையும் எடுத்துரைத்தார்.
அதைக் கேட்டு அதிசயித்த மன்னர், பூசலாரின் காலில் விழுந்து வணங்கினார். அவரின் பக்தியைக் கண்டு நெகிழ்ந்து போனார்.
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில் உள்ள திருக்கோயிலின் இறைவன் இருதயாலீஸ்வரர். பூசலாரின் இறைபக்தியை உணர்ந்த மன்னன், அவரது வேண்டுகோளின் படி மனதில் கட்டிய ஆலயம் இது.
பூசலார் நாயனார் உருவாக்கிய திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோயிலுக்கு வந்து தரிசித்தால், இதயம் தொடர்பான நோய்களும் பிரச்சினைகளும் விரைவில் நீங்கப்பெறலாம் என்பது ஐதீகம்!