வடலூரில் 149-வது தைப்பூச ஜோதி தரிசன விழா: ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம்

ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம், படம்: எம்.சாம்ராஜ்
ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம், படம்: எம்.சாம்ராஜ்
Updated on
2 min read

வடலூரில் சத்திய ஞான சபையில் 149-வது தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் வள்ளலார். இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞான சபையை வள்ளலார் நிறுவினார். மேலும் ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சத்தியஞான சபை அருகிலேயே தர்மசாலையை நிறுவினார். அங்கு, அன்று முதல் இன்று வரை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் வள்ளலார் மேட்டுக்குப்பத்தில் சித்திபெற்றார்.

இதனைத் தொடர்ந்து, தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழாவாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படும்.

ஜோதி தரிசனம் 7-ம் தேதி வெள்ளிக் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இன்று (பிப்.8) காலை 6 மணிக்கு முதல்கால ஜோதி தரிசனம் தொடங்கியது. ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. அப்போது அதிகாலையிலேயே காத்திருந்த பக்தர்கள், 'அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை' என்ற மகா மந்திரத்தை முழங்கி ஜோதி தரிசனம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து காலை 10 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெற்றது. பிற்பகல் 1 மணிக்கும் தொடர்ந்து இரவு 7 மணிக்கும், 10 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. தொடர்ந்து நாளை ஞாயிற்றுக் கிழமை காலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

பக்தர்கள் தரிசனம்
பக்தர்கள் தரிசனம்

தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு வடலூர் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜோதி தரிசனத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டதுடன், மது மற்றும் இறைச்சிக் கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தவறவிடாதீர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in