அகத்தியரின் ஞானதிருஷ்டி

அகத்தியரின் ஞானதிருஷ்டி
Updated on
1 min read

ஆடி அமாவாசை ஆகஸ்ட் 14

திருநெல்வேலியிலிருந்து சுமார் அறுபது கிலோ மீட்டர் தூரத்தில் படர்ந்திருக்கின்ற மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனத்திற்கு நடுவே பாய்ந்தோடி வருகிறது தாமிரபரணி. இந்நதிக்கரையில் எழுந்தருளியிருக்கிறது காரையார் சொரிமுத்து அய்யனார் திருக்கோயில்.

சிங்கம்பட்டி சமஸ்தானத்துக்குட்பட்ட, இக்கோயில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறுகின்ற ஆடி அமாவாசை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. சுற்று வட்டார பக்தர்கள் குடும்பம் குடும்பமாக விழா நடப்பதற்கு ஒரு வாரம் காலம் முன்பாகவே மாட்டுவண்டி மற்றும் டிராக்டர்களில் வந்து காரையாறில் குவியத் தொடங்கிவிடுவர்.

அய்யனாரும் பரிவார தேவதைகளும்

இத்திருத்தலத்தில் பிரதான மூர்த்தியாக சொரிமுத்து அய்யனார், மார்க பூர்ணா மற்றும் புஷ்கலா சமேதராகக் காட்சி அளிக்கிறார். சங்கிலி பூதத்தார், தளவாய் மாடசாமி, தூசி மாடசாமி, கரடி மாடன், காத்தவராயர் ஆகியோர் இங்கு குடிகொண்டுள்ளனர். பரிவார தேவதைகளாகப் பேச்சியும், பிரம்ம ராட்சசியும் வீற்றிருக்கிறார்கள்.

புராண காலத்தில் சிவபெருமான் - பார்வதி திருமணக் காட்சியைக் காண்பதற்கு தேவர்கள், முனிவர்கள் முதலானோர் வடதிசைக்குச் சென்றுவிட, இதன் காரணமாகத் தென்திசை தாழ்ந்து வடதிசை உயர்ந்தது. இந்த நிலையில் தென்திசையைச் சமப்படுத்த விரும்பிய சிவபெருமான் அகத்தியரைத் தென்திசைக்கு அனுப்பினாராம்.

அவ்வாறே தென்திசைக்கு வந்த அகத்தியர், தென்பகுதி மலையைச் சமப்படுத்திவிட்டுப் பல்வேறு தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்ட பிறகு பொதிகை மலைக்கு வந்தாராம். அப்போது சொரிமுத்து அய்யனார் கோயிலில் தங்கினாராம். அவரது ஞான திருஷ்டியில் தோன்றிய ஜோதியை வழிபட்ட நாளே ஆடி அமாவாசைத் திருநாள் என்கிறார்கள்.

வணிகர்களால் கட்டப்பட்ட ஆலயம்

நாணயங்கள் புழக்கத்தில் வராத காலகட்டத்தில், பாண்டிய நாட்டைச் சேர்ந்த வணிகர்கள், பொதி மாட்டின் மேல் சுமையேற்றி பொதிகை மலையில் சேரநாட்டு வணிகர்களுடன் பண்டமாற்று மூலம் வணிகம் செய்துவந்த சமயத்தில், அந்த மாடுகளின் அடிச்சுவடுகள் ஒரு கல்லின் மேல் பட்டபோது, அக்கல்லிலிருந்து ரத்தம் கொட்டியது.

வணிகர்கள் ரத்தம் கொட்டும் கல்லைப் பார்த்து அதிசயித்து நிற்க, அசரீரி ஒன்று ஒலித்ததாம். அகத்திய முனிவர் ஞான திருஷ்டியில் உணர்ந்த மகாலிங்கர், சொரிமுத்து அய்யனார் மற்றும் பரிவார தேவதைகள் இவ்விடத்தில் எழுந்தருளி இருப்பதால், ஆலயமொன்றை நிர்மாணித்து ஆகம விதிப்படி பூஜைகள் நடத்த வேண்டும் என்றதாம் அந்த அசிரீரி. இதனையடுத்து அவ்வணிகர்களால் இங்கு ஆலயம் எழுப்பப்பட்டதாம்.

ஆடி அமாவாசை தினமானது, மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடும் தினமாகவும் கருதப்படுகிறது. பூர்விகத் தொழிலான விவசாயத்தை விட்டு விலகியும், கற்ற கல்விக்கேற்ற வேலையைத் தேடியும், புலம்பெயர்ந்து கிடக்கின்ற தென்மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை தங்கள் சொந்த மண்ணுக்கு மீட்டுவருகின்றது ஆடி அமாவாசை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in