Published : 04 Feb 2020 07:05 PM
Last Updated : 04 Feb 2020 07:05 PM

மாமன்னன் இராசராசனும் உய்யக்கொண்டான் கால்வாயும்...

உய்யக்கொண்டான் கால்வாய்

தமிழர்தம் வீரத்தையும், பெருமையையும் அப்பெருமக்களின் வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றியவர் மாமன்னன் இராசராச சோழன் என்றால் அது மிகையன்று. அம்மன்னன் பெற்றி வெற்றிகள், வென்ற நாடுகள், அவரது கொடை உள்ளம், பொறியியல் நுட்பம் மிக்க கோயில்கள், இசை, ஓவியம், நாட்டியம் எனப் பல்வேறு கலைகளுக்கு அவர் அளித்த ஆக்கம் எண்ணிலடங்காதவை.

அதனால் வளர்ந்த அக்கலைச் சின்னங்கள் இன்றும் நம் முன்னே சோழ மண்டலத்தின் பல இடங்களிலும் நின்று நிலைத்திருப்பததைக் காணமுடிகிறது. அருங்கலைகளை வளர்த்ததோடு நில்லாமல், நிர்வாகத்திலும் மிகச்சிறந்த ஆற்றல் பெற்று விளங்கினார் மாமன்னர் இராசராச சோழன்.

அதனாலயே இம்மன்னன் கொண்ட பட்டப் பெயர்கள் அதிகம். அபய குலேசகரன், அழகிய சோழன், இரவிகுல மாணிக்கம், இரவிவம்ச சிகாமணி, இராஜசர்வஞ்ஞன், இராஜமார்த்தாண்டன், இராஜவிநோதன், உத்துங்க துங்கன், உலகளந்தான், உய்யக்கொண்டான், கேரளாந்தகன், சிங்களாந்தகன், சிவபாதசேகரன், சோழகுல சுந்தரன், திருமுறைகண்ட சோழன், தெலிங்க குலகாலன், நிகரிலிச் சோழன், நித்த விநோதன், பண்டித சோழன், பாண்டிய குலாசனி, மும்முடிச்சோழன், ஜனநாதன் ஆகிய சிறப்பு பட்டப் பெயர்களில் அழைக்கப்பெற்றார்.

ஒருநாட்டின் வளர்ச்சிக்கும், வளமைக்கும் அடிப்படையாய் திகழ்வது நீர் ஆதாரமேயாகும். இதை நன்கு உணர்ந்த இராசராச சோழன் தன் ஆட்சிக் காலத்தில் நீர் ஆதாரங்களான எண்ணற்ற ஏரிகள், குளங்கள், கால்வாய்களை வெட்டி, அதை முறையாகப் பராமரிக்க நிதி ஆதாரங்களையும் ஏற்படுத்தி நிர்வாகம் செய்ய பல்வேறு நிர்வாகக் குழுக்களை நியமனம் செய்து வேளாண் பொருளாதாரம், கால்நடைச் செல்வங்கள் பெருக வழிவகை செய்தார் என்பதை அவருடைய மெய்க்கீர்த்திகள் (கல்வெட்டுகள்) எடுத்துக் காட்டுகின்றன.

நீர் அறுவடை, நீர் சேமிப்பு, நீர்ப் பங்கீடு என்ற வகையில் அதிகமான பணிகளைச் செய்தவர் இராசராச சோழன். இருந்தபோதும், நீர்நிலைகளைக் காப்பவனே தன் குடிப்பெருமையைக் காப்பான் என்ற புறநானூற்று வரிகளுக்கு ஏற்ப, தன்னுடைய பட்டப் பெயரான உய்யக்கொண்டான் என்ற பெயரில் ஒரு கால்வாயை வெட்டி அதன் மூலம் நீர் மேலாண்மையை நிறைவேற்றியுள்ளார்.

பரந்துபட்ட சோழ மண்டலத்தை மாமன்னன் இராசராச சோழன் (கிபி.985- 1014) தான் சூடிய பட்டப் பெயர்களால் பல வளநாடுகளாகப் பிரித்தார். அவற்றில் ஒரு வளநாடு பாண்டிய குலாசனி வளநாடு என்பதாகும். இவ்வளநாட்டில் பல நாடுகளும், கூற்றங்களும் அடங்கியிருந்தன. அவ்வாறு திகழ்ந்த பாண்டிய குலாசனி வளநாட்டு நாடுகளில் ஒன்று ஏரியூர் நாடு என்பதாகும்.
தஞ்சை இராசராசேச்சுவரத்துக் கல்வெட்டு, வல்லம் ஏகெளரியம்மன் கோயில் கல்வெட்டு போன்ற இராசராச சோழன் காலத்துச் சாசனங்களில் இந்த ஏரியூர் நாடும் அதில் அடங்கியிருந்த சில ஊர்களும் குறிக்கப்பெறுகின்றன. கருவுகுலவல்லம் (வல்லம்), விண்ணணேரி எனும் மும்முடிச்சோழநல்லூர்(விண்ணணூர்ப்பட்டி), விக்கிர சோழ சதுர்வேதிமங்கலம், புலிக்களம், இடைக்குடி போன்ற ஊர்கள் குறிக்கப்பெறுகின்றன. ஏரியூர் நாடு என்பது காரணப் பெயராகும். ஏரிகள் அதிகம் இப்பகுதியில் இருந்ததால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது.

ஏன்? இங்குள்ள ஏரியூர் நாட்டுக்கு மாயனூரிலிருந்து கால்வாய் வெட்டி நீரைக் கொண்டு வர வேண்டும். வெண்ணாற்றிலிருந்து கால்வாய் வெட்டக்கூடாதா?, ஏன் காவிரியிலிருந்து கால்வாய் வெட்ட வேண்டும் என்ற கேள்வி எழலாம்.

இங்குதான் மாமன்னர் இராசராசனின் நிலவியல் அறிவு (புவி அறிவு) அவர் பல்துறை வித்தகர் என்பதை பறைசாற்றுகிறது. வெண்ணாற்றின் தென்கரையில் உள்ள இந்நாட்டுப் பகுதிக்கு காவிரி ஆற்றின் நேரடி பாசனம் இல்லாமலிருந்தது. இதற்குக் காரணம், காவிரி மற்றும் வெண்ணாறு ஆகிய ஆறுகள் ஓடும் பகுதியிலிருந்து இந்நாடு நிலமட்டத்தில் உயரமான இடத்தில் உள்ளதால் பாசனத்துக்கு வசதி பெற வழியில்லாமல் இருந்தது. அதனால் நாடு முழுவதும் பல ஏரிகள் வெட்டப்பெற்றும் அவ்வேரிகளில் தேங்கும் நீரால் இப்பகுதியில் வேளாண்மை நடைபெற்றது. தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு மிக அதிகமான ஏரிகள் கொண்ட வேறு ஒரு பகுதி கிடையாது என்றே கூறலாம்.

மாமன்னன் இராசராசனின் மகத்தான சாதனைகளில் ஒன்று காவிரியின் தென்கரையில் குளித்தலைக்கு மேற்கே பத்துகல் தொலைவிலுள்ள மாயனூர் என்னும் இடத்திலிருந்து ஒரு கால்வாயை வெட்டி அதன் மூலம் திருச்சி மாவட்டத்திலுள்ள காவிரியின் தென்கரை ஊர்களான பழையூர், அணலை, புலிவலம், சோமரசம்பேட்டை போன்ற ஊர்களுக்குப் பாசன வசதி செய்ததோடு அந்த கால்வாயை ஏரியூர் நாட்டுப்பகுதிக்கு கொண்டு வந்து அங்கு திகழ்ந்த பெரிய ஏரிகளுக்கு இணைப்பு தந்து அந்த ஏரிகளுக்கு பாசன வசதி செய்துள்ளார்.

இராசராசன் வெட்டிய கால்வாய்க்கு அவரது பட்டப் பெயரான உய்யக்கொண்டான் என்ற பெயரையே சூட்டினார். இன்றளவும் அந்த பெயர் நிலைக்கப் பெற்றுள்ளது.
உய்யக்கொண்டான் கால்வாயை வெட்டியதுடன் இல்லாமல், அதன் வழி வரும் நீரைத் திறம்பட நிர்வாகம் செய்த மாமன்னனின் செயல்பாடு, தொழில்நுட்பத்தால் வெண்டையம்பட்டி ஏரிக்குத் தண்ணீர் சென்றது. இந்த ஏரி 360 ஏக்கர் பரப்பளவுடன் விளங்குகிறது.

காவிரி நீர் உய்யக்கொண்டான் வாய்க்கால் வழியே வந்து இராயமுண்டான்பட்டி ஏரியை முதலில் நிரப்புகிறது. அந்த ஏரி நிரம்பியவுடன் அடுத்து வெண்டையம்பட்டி ஏரிக்குத் தண்ணீர் செல்கிறது. இந்த ஏரி வெண்டையம்பட்டியில் கழனி முழுவதற்கும் பாசனவசதி தருகிறது. ஏரி நீரைப் பாசன வாய்க்கால்களுக்கு கொண்டு செல்ல பண்டைக்காலத்தில் நீர் மதகு அமைப்பான குமிழி ஒன்றுள்ளது.

உய்யக்கொண்டான் என்ற தன் பட்டப் பெயரில் ஒரு கால்வாயை வெட்டி, அக்கால்வாய் வரும் வழியில் உள்ள பல ஊர்களிலும் பெரிய ஏரிகளை வெட்டி, அதன் மூலம் அந்தந்தப் பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டத்தைக் காத்து, பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறவும், கால்நடை வளம் பெருகவும் வழிகை செய்த மாமன்னன் இராசராச சோழனை எவ்வளவு போற்றினாலும் தகும்.

-முனைவர் மணி.மாறன்,
தமிழ்ப் பண்டிதர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x