Published : 04 Feb 2020 06:50 PM
Last Updated : 04 Feb 2020 06:50 PM

பெரிய கோயில் கட்டுமானம்: பொறியியல் துறையின் அற்புதம்

தஞ்சை மாநகருக்கு அடையாளமாகத் திகழ்வது உலகப் புகழ்பெற்ற ராஜராஜேச்சுவரம் எனும் பெருவுடையார் கோயில். தென்னிந்திய கோயில்களில் மிகவும் பெரியதும், புகழ் பெற்றதுமான இக் கோயிலை ‘தட்சிண மேரு’ என்றழைக்கின்றனர். வடக்கில் மிக உயர்ந்த சிகரம் மேரு மலை, இந்தக் கோயில் அதைப்போல வானுயர்ந்து நிற்பதால் தென்னகத்து மேரு எனும் பொருளில் இக் கோயிலை அழைக்கின்றனர்.

கடைச்சோழ வம்சத்தில் உதித்த விஜயாலயன் பரம்பரையினர் வழியில் வந்த மாமன்னன் ராஜராஜன் 1003-ம் ஆண்டுக்கும் 1010-ம் ஆண்டுக்கும் இடையே எழுப்பிய கோயில் இது. சோழ நாட்டில் அமைந்துள்ள இதர கோயில்களுடன் ஒப்பிடும்போது இக் கோயில் பல்வேறு வகைகளாலும் மாறுபட்டிருப்பதைக் காணலாம்.

கோயிலுக்குள் நுழையும் வாயிலின் மீது கட்டப்படுவது கோபுரம் எனப்படும். கோயிலின் மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு மேலே எழுப்பப்படுவதை விமானம் என்பர். இக்கோயிலுக்குள் எழுப்பப்பட்டிருக்கும் விமானம் மிக உயரமானது. அமைப்பில் உட்புறம் கூடாக அமைந்திருப்பதையும் காணமுடியும். இக் கோயிலின் கட்டுமானம் பொறியியல் துறையில் ஓர் அற்புதம் என்று போற்றப்படுகிறது. கருங்கற்கள் சிறிதும் இல்லாத செம்மண் வெளியில் அமைந்துள்ள இக் கோயிலுக்கான கற்கள் புதுக்கோட்டை பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு கட்டப்பட்டதாகத் தெரிகிறது.

மாமன்னன் ராஜராஜன் இங்குள்ள சிவலிங்கத்தை மிகவும் பெரிதாக அமைத்திருப்பது இக்கோயிலின் சிறப்பு. இங்குள்ள கல்வெட்டுகளில் இருந்து, மாமன்னனின் செல்வம், அவரது மூத்த சகோதரி கொடுத்த செல்வம் ஆகியவற்றைக் கொண்டு இக் கோயில் எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது. இக் கோயில் முழுக்க முழுக்க மாமன்னன் தன்னுடைய முழு ஈடுபாட்டால் முறையாகக் கட்டியதாகும்.

தங்களுக்கும் கோயில் எழுப்பிய புண்ணியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ராஜராஜ சோழனின் மனைவி திருவையாறில் அமைந்துள்ள ஐயாறப்பர் கோயிலில் தென் கைலாயம் எனும் கோயிலைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது. இவருடைய புதல்வர் ராஜேந்திர சோழனின் மனைவி, தன் பங்குக்கு அதே கோயிலில் வட கைலாயம் என்றொரு கோயிலை எழுப்பியிருக்கிறார்.

முதலில் இக்கோயிலின் மூலஸ்தானத்தில் அமைந்துள்ள பிரம்மாண்டமான சிவலிங்கம், நந்தி, சண்டிகேசுவரர் சன்னதி ஆகியவற்றை மட்டுமே எழுப்பியிருக்கிறார் என்பது தெரிகிறது. முற்காலத்தில் ஆறு பிரிவுகளாக ‘ஷண்மதம்’ எனும் முறையில் சைவம் சிவனுக்கும், வைணவம் மகாவிஷ்ணுவுக்கும், சாக்தம் சக்திக்கும், காணாபத்யம் என்பது விநாயகர் அல்லது கணபதிக்கும், கெளமாரம் என்பது முருகன் வழிபாட்டுக்கும், செளரம் என்பது சூரியனை வழிபடுவதற்குமாக பழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. அந்தந்த கோயில்களில் அதற்குரிய மூர்த்தங்களே முற்காலத்தில் நிறுவப்பட்டிருக்கின்றன.

தஞ்சை பெரிய கோயில் விமானம் தென் இந்தியாவிலேயே மிக உயர்ந்த விமானமாகும். அது கட்டப்பட்ட காலத்தில் இந்த அளவுக்கு உயரமான கட்டடம் உலகிலேயே எங்கும் கட்டப்படவில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தென்னிந்தியாவில் கோயில் எழுப்பும் கலை சாளுக்கிய மன்னர்கள் காலத்தில் தொடங்கி பல்லவர் காலத்தில் தொடர்ந்து வந்துள்ளது. சோழ நாட்டில் அடுத்தடுத்து பல்வேறு ஊர்களிலும் கோயில்கள் எழுப்பப்பட்டன. ராஜராஜ சோழன் பதவியேற்ற காலத்திலும் அவருடைய காலத்துக்கு முன்பிருந்த கண்டராதித்த சோழர் காலத்திலும் சோழ நாட்டில் ஏராளமான கோயில்கள் எழுந்தன. அவை இன்றளவும் பெருமையோடும் புகழோடும் பாதுகாக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன.

உலகத்தார் கண்டு வியக்கும் இம்மாபெரும் கோயிலை நிறுவிய மாமன்னன் ராஜராஜ சோழனை வரலாற்றிலும், இலக்கியங்களிலும் வானளாவப் புகழ்கின்றனர்.

திருமுறை கண்ட சோழன் என்ற பெருமை உடைய, உலகம் வியக்கும் முறையில் ராஜராஜேச்சுவரம் கோயிலையும் எழுப்பிய மாமன்னனை இன்றும் உலகம் போற்றக் காரணமாயிருப்பது இந்த தட்சிண மேரு கோயில்.

இந்தக் கோயிலைச் சுற்றி கோட்டை மதிலும், அதன் வெளிப்புறம் அகழியும் இதற்குப் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கில் அகழியின் மீது பாலம் அமைத்து கோயிலின் உள்ளே நுழையும் முன்வாயில் கோபுரம் ‘கேரளாந்தகன் வாயில்’ என்ற பெயரோடு ராஜராஜனின் காந்தளூர்ச் சாலைப் போர் வெற்றியைக் குறிப்பிட்டு அழைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து இடைவெளி விட்டு அமைந்த அடுத்த கோபுரம் ‘ராஜராஜன் வாயில்’ என்ற பெயரில் விளங்குகிறது.

இந்தக் கோபுரத்தின் மேல், உட்புறமாக முருகனுக்கு ஒரு சன்னதி இருக்கிறது. அருணகிரிநாதர் தஞ்சைக்கு வந்தபோது முருகக் கடவுளுக்கு இந்த ஒரு சன்னதி மட்டுமே இருந்திருக்கிறது. அதனால்தான் அவர் தஞ்சை திருப்புகழில் ‘தஞ்சையில் மேவிய பெருமானே’ என்று பாடியிருக்கிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சையை ஆட்சிபுரிந்து கொண்டிருந்த சரபோஜி மன்னர் தன்னுடைய வம்சத்தைப் பற்றிய வரலாற்றை கோயிலின் தெற்கு திருச்சுற்று மாளிகையில் ‘போன்ஸ்லே வம்சத்து வரலாறு’ என்று எழுதி அதை கல்வெட்டில் பதித்திருக்கிறார்.

இரண்டாம் உலகப் போரின்போது இக்கோயிலுக்குள் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட ஒரு படை அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அந்தப் படை இக் கோயிலுக்குள் முகாமிட்டிருந்ததாகச் சொல்கிறார்கள்.

இக் கோயிலுக்கு ராஜராஜன் காலத்துக்குப் பிறகு குடமுழுக்கு நடந்த விவரங்கள் தெரியவில்லை. ஆனால், சோழ்், பாண்டிய, நாயக்க, மராட்டிய மன்னர்கள் இக்கோயில் திருப்பணியில் ஈடுபட்டதற்கு சான்றுகள் உண்டு. கங்கப்பா தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த காலத்தில் இக் கோயிலுக்கு குடமுழுக்கும் பிறகு 1997-ல் ஒரு குடமுழுக்கும் நடந்த பிறகு, இப்போது குடமுழுக்கு நடைபெறுகிறது.

- தஞ்சை வெ.கோபாலன்,
இயக்குநர்
பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x