Published : 04 Feb 2020 06:10 PM
Last Updated : 04 Feb 2020 06:10 PM

கருவூர் தேவரும்...  இராஜராஜ சோழனும்..!

தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள கருவூர்த் தேவர் மற்றும் இராஜராஜன் ஓவியம் - கருவூர்த் தேவர் சன்னதிக்கு அருகே உள்ள வேப்பமரத்தில் மரப்பல்லியை பார்க்கும் பொதுமக்கள்.

மாமன்னன் இராஜராஜ சோழன் தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டி முடித்துவிட்டுச் சிவலிங்கத்தைச் எழுந்தருளச் செய்து, ஆதி சைவர்களைக் கொண்டு மருந்து சாத்திப் பந்தனம் செய்யச் சொன்னார்.

ஆனால், மருந்து இளகிப் போய் பந்தனம் ஆகவில்லை. இதனால் இராஜராஜ சோழன் மனம் நொந்து போன நேரத்தில் பொன்மணித் தாட்டார் என்ற சிவயோகியார், கருவூர்த் தேவர் இங்கு வந்தால் காரியம் கை கூடும் எனக் கூறியுள்ளார்.

உடனடியாக கருவூர்த் தேவரை கூப்பிடுங்கள் என மன்னன் கூறியுள்ளார். அவர் எங்கிருக்கிறார், எப்படி அழைப்பது என அனைவரும் சிந்தனையில் ஆழந்த நேரத்தில், வேறு உருவத்தில் அங்கு வந்திருந்த போகநாதரே, சீட்டு ஒன்றை எழுதி அதனை காக்கையின் காலில் கட்டிப் பொதிகை மலைக்கு அனுப்பி, பின்னர் கருவூர்த் தேவரை வரவழைத்துள்ளனர். கருவூர்த் தேவர் 10-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பதினெண் சித்தர்களில் ஒருவர். பல கலைகளைப் பயின்று போகநாதர் என்ற யோகியாரிடம் உபதேசம் பெற்று, பொதிகை மலையில் அகத்திய முனிவரை தரிசித்துவிட்டு அங்கேயே சில ஆண்டுகள் இருந்தவர்.

பெரிய கோயிலுக்கு கருவூர்த் தேவர் வந்து மன்னன் இராஜராஜ சோழனுக்கு உறுதுணையாக இருந்து, சைவத்தை பரப்பும் பெரும் சீலராக விளங்கினார். தஞ்சாவூர் பெருவுடையாரின் அருளாகிய அருமருந்தினைப் பருகிப் பிறவிப்பிணி நீங்கப்பெற்று, பிறரும் ஓதி சிவபதம் அடைய வேண்டுமென்ற அருள் உள்ளத்தால் திருவிசைப்பாடலை இயற்றியுள்ளார்.

கருவூர்த் தேவர் பெருவுடையாரை மனமுருக வேண்டிய இடத்திலேயே, அதாவது கோயிலுக்குப் பின்னால் இவருக்கு திருச்சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. மாமன்னன் இராஜராஜ சோழன் அருகில் நிற்க, கருவூர்த் தேவர் மருந்து இடித்து பந்தனம் செய்யும் காட்சி சிலை வடிவில் உட்பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மன்னனும் கருவூர் சித்தரும் சேர்ந்து இருக்கும் காட்சி உட்பிரகாரத்தில் காணப்படும் சிறப்பான ஓவியமாகும்.

- வி.சுந்தர்ராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x