

வி.ராம்ஜி
சப்தமி என்றால் ஏழாவது நாள். தை மாதம் வளர்பிறையின் ஏழாம் நாள் பூமி, சூரியனை நெருங்க ஆரம்பிக்கும் முதல் நாள். இந்தக் குறிப்பிட்ட நாளில் சூரியனிடமிருந்து ஒரு விசேஷ ஒளி ஆற்றல் வெளிப்படுகிறது.. இந்த விசேஷ ஒளிஆற்றலை நாம் கிரகித்துக்கொண்டால் அடுத்து வரக்கூடிய கோடைகாலத்தில் ஏற்படும் வெம்மையிலிருந்து நமது உடலைக் காப்பாற்றிக்கொள்ளலாம்.
இந்த விசேஷ ஒளி ஆற்றலை எப்படி கிரகிப்பது?
அன்று காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து உடலில் யோகச்சக்கரங்கள் இருக்கும் இடங்களில் எருக்க இலைகளை வைத்து நீராடவேண்டும். காரணம் சூரியனுடைய விசேஷ ஒளிஆற்றலைக் கிரகிப்பதற்கான நாடிகளில் இருக்கும் தடைகளை எருக்க இலை வெளியேற்றிவிடும்.
பொதுவாக எருக்கம் இலைக்கு துர்கதிர்வீச்சுகளை வெளியேற்றக்கூடிய சக்தி உண்டு. இது பீஷ்மருக்கு வேத வியாசரால் உபதேசிக்கப்பட்டது. ரத சப்தமியில் உத்திராயனம் பிறந்த பிறகே, பீஷ்மர் தன் உயிரைத் துறந்தார் என்கிறது மகாபாரதம்.
உலக நலனுக்காக பீஷ்மர் பிரம்மச்சர்ய விரதம் ஏற்றவர். அவருக்கு பித்ரு தர்ப்பணம் செய்ய சந்ததி இல்லை. அதனால் ரத சப்தமிக்கு மறுநாள் பீஷ்மருக்கு எல்லா மக்களும் தர்ப்பணம் செய்யலாம்; தர்ப்பணம் செய்கிறார்கள். அதுவே பீஷ்மாஷ்டமி! நாளை மறுநாள் 2.2.2020 ஞாயிற்றுக்கிழமை பீஷ்மாஷ்டமி.
பிதாமகன் என்று போற்றப்படும் பீஷ்மர் இறந்த திதி நாளே பீஷ்டாஷ்டமி. எனவே சந்ததி இல்லாத பிதாமகனுக்கு, பீஷ்மருக்கு இந்தநாளில் எவர் வேண்டுமானாலும் தர்ப்பணம் கொடுக்கலாம். வழக்கமாக எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்வோம். ஆனால், பீஷ்மருக்கும் வெறும் அர்க்யமாக, அதாவது தண்ணீரை மட்டுமே விட்டு, தர்ப்பணம் செய்யவேண்டும்.
பீஷ்மருக்குச் செய்யப்படும் தர்ப்பணம் என்பது, குருவுக்குச் செய்யும் தர்ப்பணம். நம் பித்ருக்கள் அனைவருக்கும் செய்யப்படுகிற தர்ப்பணம். எனவே 2.2.2020 ஞாயிற்றுக்கிழமை பீஷ்ம தர்ப்பணத்தை மறக்காமல் செய்வோம். மகா புண்ணியத்தைப் பெறுவோம். ஒட்டுமொத்த குருமார்களின் ஆசியையும் பித்ருக்களின் ஆசியையும் பெறுவோம்!