

வி.ராம்ஜி
தை மாத அமாவாசைக்குப் பிறகு ஏழாம் நாள் சப்தமி. ரத சப்தமி. சூரிய பகவானுக்கு உரிய நாள் ரத சப்தமி. ஏழு வண்ணங்களைக் கொண்ட ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் சூரிய பகவான் வானத்தில் வலம் வருவதாக ஐதீகம்.
சூரிய ஒளி இல்லாவிடில் பூவுலகில் எதுவுமே இருக்க முடியாது. எனவேதான் உயிர்களைக் காக்கும் திருமாலும் சூரியனும் ஒன்றாகக் கருதப் படுகின்றனர். சூரிய பகவானின் ரதத்திற்கு அருணன் சாரதியாக உள்ளார்.
ரதசப்தமியன்று எருக்க இலைகளை சிரசின் மேல் வைத்துக்கொண்டு, கிழக்கு நோக்கி நின்று நீராட வேண்டும்.ரதசப்தமி திருநாளில் சூரியனின் கிரணங்கள் எருக்க இலைகள் மூலம் ஈர்க்கப்பட்டு, உடலில் ஊடுருவிச் சென்று, வியாதிகளைப் போக்கி குணம் தருகின்றன. அதேபோல், இந்த தினத்தில் ஆறு அல்லது குளம் முதலான நீர்நிலைகளில் நீராடுவது சிறப்பு!
ரதசப்தமியன்று வீட்டு வாசலை மெழுகி, தேர்க்கோலம் போட்டு அலங்கரிக்க வேண்டும். பிறகு, சூரிய பகவானுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பூஜிக்க வேண்டும். இந்தப் புண்ணிய தினத்தில், வீட்டு பூஜையறையிலும் சூரிய ரதம் போன்று கோலம் வரைந்து, உரிய ஸ்லோகங்கள் கூறி சூரியனை வழிபடுவதால், சகல நலன்களும் உண்டாகும்.
தன்னுடய சுழற்சிப் பாதையில் ஆறு மாதமாகச் சூரியனிடமிருந்து தொலைவில் சுற்றிக் கொண்டிருந்த பூமி அடுத்த ஆறு மாதங்கள் சூரியனுக்கு நெருக்கமான பாதையில் சுற்ற ஆரம்பிக்கிறது. இதை தட்சிணாயனம், உத்திராயனம் என்கிறோம்.
ரத சப்தமி நாளில் (1.2.2020) சூரியனைப் போற்றுவோம். வணங்குவோம். ரதசப்தமி தர்ப்பணம் செய்து வழிபடுவோம். இந்தத் தர்ப்பணம் என்பது எள்ளும் தண்ணீரும் விடுவதல்ல. வெறுமனே தண்ணீர் அர்க்யம் விடுவது!