

வி.ராம்ஜி
ரத சப்தமி என்பது மிக மிக முக்கியமான நாள். இந்தநாளில், சூரிய உதயத்தின் போது விரதத்தை மேற்கொள்ளவேண்டும். வீட்டில் அல்லது நதிக்கரைகளில் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். அங்கே சூரிய ரதத்தை கோலமாக வரைந்து கொள்ளவேண்டும். அந்த ரதத்தில் சூரிய சந்திரர்கள் அமர்ந்து பவனி வருவதாக பாவித்துக் கொள்ளவேண்டும்.
அடுத்து, அந்த ரதக் கோலத்திற்கு, சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, செந்நிற மலர்களைக் கொண்டு அலங்கரிக்கவேண்டும். பிறகு மலர்களைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
அப்போது, ஆதித்ய ஹ்ருதயம் முதலான ஸ்லோகங்கள் படிப்பது மகா புண்ணியம். கூடுதல் பலத்தையும் பலனையும் வழங்கும்.
எனவே ரத சப்தமி நன்னாளில், ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வது விசேஷம். அப்படிப் பாராயணம் செய்து சூரிய பகவானை வணங்கினால், நம் ஏழேழு ஜென்ம பாவங்களும் விலகும். நம் சந்ததியினர் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் என்பது ஐதீகம். நாளை 1.2.2020 சனிக்கிழமை ரத சப்தமி.
இந்தவேளையில், சூரியன் தொடர்பான ஸ்லோகங்கள் சொல்லி முடித்ததும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை முதலானவற்றை நைவேத்தியம் செய்து பூஜிக்கலாம். கோதுமை கலந்த உணவு மற்றும் அன்னம் ஆகியவற்றை பசுவுக்கு வழங்கலாம். வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். கடன் உள்ளிட்ட தரித்திர நிலை விலகும்!எனவே, முடிந்த அளவுக்கு தானம் செய்யுங்கள்.
ரத சப்தமி நன்னாளில் துவங்குகிற தொழில் மற்றும் பணிகள் எதுவாயினும் தடையின்றி நடந்தேறும். லாபம் சிறந்து விளங்கும். அந்த நாளில் செய்யப்படுகிற தான தருமங்கள், நூறு மடங்கு புண்ணியங்களைச் சேர்த்து, நம் பாவங்களையெல்லாம் போக்கும் என விவரிக்கின்றன ஞான நூல்கள்!
முக்கியமாக, நாம் ஆத்மார்த்தமாக வழங்குகிற தானங்களை, சூரிய பகவான் அந்த ரதத்தில் எடுத்துச் சென்று, நம் முன்னோர்களுக்கு வழங்குகிறார் என ஐதீகம். இதனால் பித்ருக்களின் ஆசியும் நமக்கு கிடைத்து நம்மை மேன்மைப்படுத்தும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!
*************************************************