

வி.ராம்ஜி
சஷ்டியில் ஞானகுரு முருகப்பெருமானை வணங்குவோம். நம் கடன்கள் யாவும் தீரும். கஷ்டங்கள் அனைத்தும் விலகும். வழக்கில் வெற்றி கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மாதந்தோறும் வருகிற சஷ்டி திதி என்பது ரொம்பவே விசேஷம். சஷ்டி என்பது முருகக் கடவுளுக்கு உகந்த அற்புதமான நாள். இந்தநாளில், விரதம் இருந்து முருக வழிபாடுசெய்யும் பக்தர்கள் ஏராளம்.
விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள், அன்றைய தினம் அருகில் உள்ள முருகன் கோயிலுக்கோ அல்லது சிவாலயத்தில், அம்மன் கோயிலில் உள்ள முருகன் சந்நிதிக்கோ சென்று, முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சார்த்தியோ தரிசித்து வேண்டிக்கொள்வார்கள். இது, நம் வாழ்வில் பல ஏற்றங்களையும் மாற்றங்களையும் தந்தருளும் என்பது ஐதீகம்.
இன்று வியாழக்கிழமை, 30.1.2020 சஷ்டி. இந்தநாளில், குருவாரம் எனப்படும் வியாழக்கிழமையும் சேர்ந்து வந்திருப்பது கூடுதல் மகத்துவம் வாய்ந்தது. முருகப்பெருமானை, ஞானகுரு என்று போற்றுகிறோம்தானே. அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையன் ஆயிற்றே!
ஆகவே, சஷ்டியும் வியாழனும் இணைந்த வேளையில், சக்திவேலனை தரிசித்து வணங்குங்கள். செவ்வரளி மற்றும் செந்நிற மலர்களைச் சூட்டுங்கள். முடிந்தால், எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்யுங்கள்.
நம் கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். கஷ்டங்கள் யாவும் விலகும். வழக்கில் வெற்றி கிடைக்கும். வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.