

ஒரு மகான், அறிஞன், தலைவன் போன்றவர்களின் பிறப்பினால் அவர்கள் தோன்றிய மண்ணும் பெருமையடைகிறது. வீரை நகர் எனும் பெருமண்டூர் சமணத் தலமும் அவ்வாறே.
தமிழுக்கு முதலில் சூடாமணி நிகண்டு படைத்துச் சிறப்பித்தவர் மண்டல புருடர் எனும் மகான். இவர் இவ்வூரைச் சேர்ந்தவர். சமண ஆகமங்களில் ஒன்றான புராணத்தை சமைத்ததும், மல்லிசேனர் என்கிற மாமுனிவர் வாழ்ந்த ஊரும் இதுதான். திண்டிவனம் அருகில் பெருமண்டூரில் பெரிய கோயில் சின்னக்கோயில் என இரண்டு சமணாலயங்கள் இருக்கின்றன. இவை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை கொண்டவை.
சுதையில் வடிக்கப்பட்ட சந்திரநாதர்
பெரிய கோயில் மூலவர் சந்திரநாதர் ஆவார். இவர் கருவறையில் பிரமாண்டமான சிம்மாசனத்தில் முக்குடையின் கீழ் வீற்றுள்ளார். சுதையால் வடிக்கப்பட்டுள்ளார். இவர் அருகிலேயே தரணேந்திரர், பத்மாவதிதேவி சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அன்பும் அறனும் காட்டிய ஆதிநாதரும் பல்வினை வென்ற பாரீசநாதரும் கோவிலுள் இருக்கின்றனர். விஸ்வேஷ்சாகர் மாமுனிவரின் பாத கமலங்கள் கோயில் வளாகத்தில் செதுக்கப்பட்டுள்ளன.
இக்கோயிலை ‘இரவி குல சுந்தரப் பெரும்பள்ளி’ எனச் சோழர் நினைவாகப் பெயரிட்டுள்ளனர். கோயிலின் யட்சியை அரசியின் பெயரான ‘முன்கை வளைகொண்ட மங்கையர் நாயகி வரசுந்தரி’ என அழைத்தனர்.
பல்லவ நந்திவர்மன் நிலக்கொடைப் பற்றிய கி.பி 866 -ம் ஆண்டின் கல்வெட்டு இங்கு காணப்படுகிறது. மூன்றாம் குலோத்துங்கனின் சிற்றரசன் கண்டர சூரிய சம்புவராயன் கால கி.பி 1192-ன் பள்ளிச்சந்தம் கல்வெட்டும் காணப்படுகிறது. மற்றோர் கல்வெட்டு கோயிலின் நிலங்களைப் பற்றியது.
சின்னக்கோயில் என்று சொல்லப்படுவது ஆதீஸ்வர சுவாமி வசிக்கும் ஆலயமாகும். ஆதி பகவனே கருவறையில் அமர்ந்துள்ளார். தினசரி பூசைக்காக ஆதிபகவன் உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. இச்சிலையின் முதுகுப்புறம் சுருதஸ்கந்தம் வடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு அரிய காட்சி. இந்த சுவாமியின் மீது ஆண்டுதோறும்
மாசி 16, 17, 18-ம் தேதிகளில் சூரியன் தன்னொளியைப் பரப்பும். ரோகிணிதேவிக்கு இக்கோயிலில் சிலை உள்ளது. நவக்கிரக தீர்த்தங்கரர்களும் நிறுவப்பட்டுள்ளனர்.
இக்கோயிலில் குடிகொண்டுள்ள தருமதேவி சிலை சென்னை மயிலாப்பூர் நேமிநாதர் ஆலயத்திலிருந்து கொண்டுவரப்பட்டதாகும். தனிக்கருவறை உள்ளது. அழகிய அம்மன் வலது காலை மடக்கியும் இடது காலைத் தொங்கவிட்டும் பீடத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறார்.