

வி.ராம்ஜி
தை மாதத்தின் பிரதோஷம் வரும் 23.1.2020 புதன்கிழமை அன்று வருகிறது. புண்ணியம் நிறைந்த தை மாதத்தில், பொன் கிடைத்தாலும் கிடைக்காத புதன்கிழமையில் வருகிற பிரதோஷத்தில் மறக்காமல் சிவ தரிசனம் செய்வோம். வாழ்வில் சுபிட்சம் நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
தை மாதம் பிறந்துவிட்டது. இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மிக மிக முக்கியமானது. பொதுவாகவே, பிரதோஷம் என்பது ஞானத்தையும் யோகத்தையும் வழங்கக்கூடியது. இந்தநாளில், பிரதோஷ காலமான மாலை 4.30 முதல் 6 மணிக்குள் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று, சிவ தரிசனம் செய்து பிரார்த்தனை செய்வது மிகுந்த பலனைத் தந்தருளும்.
மேலும், அன்றைய நாளில், சிவனாருக்கு எப்படி அபிஷேக ஆராதனைகள் அமர்க்களப்படுமோ, அதேபோல் நந்தி வழிபாடும் விமரிசையாக நடைபெறும். நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெறும்.
வருகிற 22.1.2020 புதன்கிழமை பிரதோஷம். தை பிரதோஷம். இந்தநாளில், பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு, தென்னாடுடைய சிவனை வணங்குங்கள். நந்திதேவரிடம் உங்கள் பிரார்த்தனைகளைச் சொல்லி முறையிடுங்கள்.
பால், தயிர், திரவியப்பொடி, தேன், அரிசி மாவு முதலான அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சார்த்துங்கள். செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். அதேபோல், சிவனாருக்கு வில்வம் சார்த்துங்கள்.
அன்றைய பிரதோஷநாளில், முடிந்தால், தயிர்சாதமோ எலுமிச்சை சாதமோ நான்குபேருக்கேனும் வழங்குங்கள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை பிரதோஷ தரிசனமும் நல்லதொரு வழியைக் கொடுக்கவல்லது. தடைப்பட்ட சுபகாரியங்களை நடத்திக்கொடுப்பார் சிவனார். திருமணம் தடைப்பட்டவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும். இழந்த பதவியையும் கெளரவத்தையும் மீட்டெடுப்பீர்கள். வீட்டில் சுபிட்சத்தைத் தந்தருள்வார் ஈசன்.