Published : 19 Jan 2020 04:20 PM
Last Updated : 19 Jan 2020 04:20 PM

அக்கரைப்பட்டி தென் ஷீரடி சாயிபாபா கோயிலில் நாளை 20ம் தேதி கும்பாபிஷேகம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை

வி.ராம்ஜி

அக்கரைப்பட்டி தென்ஷீரடி சாயிபாபா கோயிலின் கும்பாபிஷேகம், நாளை 20ம் தேதி திங்கட்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.


திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அக்கரைப்பட்டியில், ஷீரடி சாயிபாபா கோயில் கட்டப்பட்டு வருகிறது. ரூ.7 கோடியில் புதிதாக பிரம்மாண்டமான அளவில் கட்டப்பட்டு வரும் ஷீரடி சாய்பாபா கோயிலின் கும்பாபிஷேக விழா நாளை திங்கட்கிழமை 20-ம் தேதி நடைபெறுகிறது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே உள்ளது அக்கரைப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில், கிராமத்தில் ஸ்ரீசாய் கற்பக விருட்சா அறக்கட்டளை சார்பில் ஏறத்தாழ 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சாயிபாபா கோயில் கட்டப்பட்டு வந்தது. அங்கிருந்த வேப்ப மரத்தின் அடியில் கடந்த 21.04.2014-ல் சாயிபாபாவின் சிலை முதல்கட்டமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

கோயில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை கடந்த 22.10.2015-ல் நடைபெற்றது. தொடர்ந்து, 12.2.2016 அன்று கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் தற்போது நிறைவுபெற்றுள்ளன.

இந்தப் புதிய கட்டிடத்தில் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட தரைதளத்தில் தியான மண்டபம், முதல் தளத்தில் பிரம்மாண்ட சாய்பாபாவின் பளிங்குச் சிலையுடன் கூடிய சந்நிதி ஆகியவை அழகிய வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ளன. இங்கு பாபாவின் சமாதி மந்திர், ஸ்ரீவிநாயகப் பெருமான், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீதத்தாத்ரேயர் முதலானோரின் சந்நிதிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.


கடந்த 17ம் தேதியில் இருந்து கும்பாபிஷேகத்துக்கு முன்னதான யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. காவிரியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த நீரை குடங்களில் ஊர்வலமாக எடுத்து வந்தார்கள்.


17ம் தேதி தொடங்கி காலையும் மாலையும் யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நாளை திங்கட்கிழமை 20ம் தேதி காலை 9.30 மணிக்கு அனைத்து கோபுரங்களுக்கும் கும்பாபிஷேக வைபவம் நடைபெறுகிறது.


இதைத் தொடர்ந்து காலை 10.15 மணிக்கு சாயிபாபா மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெறும்.


விழா ஏற்பாடுகளை ஸ்ரீசாயி கற்பகவிருட்சா டிரஸ்ட் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பக்தர்கள் செய்துவருகின்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் தென்ஷீரடி சாயிபாபா கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, இன்னிசைக் கச்சேரி, சாயி பஜன் பாடல்கள் முதலான நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x