நபிகள் வாழ்வில்: மகளுக்கு அளித்த சீதனம்
வயிறார உண்ண உணவு இல்லை. ஆனாலும் ராஜா! ஏழையாகவே வாழ்ந்து, ஏழைகளுடன் மரணித்து, ஏழைகளுடன் மறுமை நாளில் உயிர்தெழ பிரார்த்தித்தவர் நபிகளார் நாயகம். அவர் தமது வாழ்வை ஒரு முன்மாதிரியாக விட்டுச் சென்றவர். பசிப்பிணி, துன்பம், துயரங்கள் யாவற்றையும் அனுபவித்தவர்.
மக்காவின் செல்வச் சீமாட்டி கதீஜா நாச்சியார். வணிகம் நிமித்தமாக மக்காவிலிருந்து அயலகம் செல்லும் ஒட்டகங்கள் ஒரு நூறு என்றால் இந்த அம்மையாரின் ஒட்டகங்கள் ஏறக்குறைய எழுபது! இன்றைய வழக்கில் சொல்ல வேண்டும் என்றால், அவர் பெரும் கோடீஸ்வரி!
அத்தகைய செல்வச் சீமாட்டியின் துணைவரான நபி பெருமானார் தொடர்ந்து மூன்று நாட்கள்கூட வயிறார உண்டதில்லை என்கிறது வரலாறு.
ஏழை, எளியோரின் வறுமையைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது நோன்பு நோற்பார்கள்.
பசிப்பிணியின் கொடுமையை உணர்ந்தவ ராய் ஏழைகளின் துன்பம் துயர் நீக்க இறைவனிடம் நெஞ்சுருகப் பிரார்த்திப்பார்கள்.
இல்லற வாழ்வில் இருந்தவாறே உலக வாழ்வில் பற்றற்றவராய், அதிகாரப் பீடத்தில் அமர்ந்திருந்தவாறே சாமானியராய், செல்வச் சீமாட்டியின் கணவராக இருந்தும் ஏழையாய் மிக மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார் நபிகள். வாழ்வதற்கு அவசியமான குறைந்த அளவு உணவே உண்டார்.
நபிகளாருக்குப் பிடித்தமான உணவு, பார்லியால் செய்யப்பட்ட ரொட்டி!
நபிகளார் வீட்டில் பல நாட்கள் அடுப்பே எரியாது. அத்தகைய நாட்களில் வெறும் பேரீச்சம் பழங்கள்தான் அவரது உணவு. தமது பசியின் வேதனையை அடுத்தவர் அறியா வண்ணம் புன்னகைத்தவாறு இருப்பார்.
தோழர், இம்ரான் பின் ஹஸீனை அழைத்துக் கொண்டு நபிகளார் தமது அருமை மகள் ஃபாத்திமாவின் இல்லத்துக்குச் சென்றார்.
மறுமையில் அக்கறை
வீட்டில் உண்ண உணவு ஏதுமில்லை. அருமை மகள் பசியால் வாடுவதை அறிந்ததும் நபிகளாரின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது. அந்த வறுமை நிலையைப் போக்க நபிகளார் இறைவனிடம் பிரார்த்தித்திருக்க முடியும். ஆனால், இம்மை வாழ்வின் நிலையாமையை உணர்ந்தவராய், நிலையான மறுமை வாழ்வைக் குறித்தே அவர் அதிக அக்கறை கொண்டிருந்தார். தம்மைச் சுற்றி இருந்தோரிடமும் அதைத்தான் போதித்தார்.
அந்த இறுக்கமான சூழலிலும் அன்பு மகளை அணைத்தவாறு, “மகளே, உன்னை சுவனத்துப் பெண்களின் அரசியாக்கி இறைவன் அருள்புரிவான். கவலைப்படாதே!” என்று சொன்னார்.
ஃபாத்திமா அம்மையார், ஏழ்மையில் வாடினார். தமது உணவுக்கான மாவை தாமே அரைத்துக்கொள்வார். வீட்டுக்கான குடிநீரைத் தாமே சுமந்து வருவார்.
ஒரு சராசரி மனிதர்கூடப் பணியாளரை வைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் இவை எல்லாம் நடந்தன.
அரபு நாட்டின் மாமன்னராக விளங்கிய நபிகள் நாயகம், தமது அன்பு மகள், இதயத்துண்டு ஃபாத்திமாவின் திருமணத்தின்போது, கொடுத்த சீர்-செனத்திகள் ஒரு பாய், ஒரு தோலாலான தலையணை, இரண்டு மண் பாத்திரங்கள்,ஒரு ஜாடி மற்றும் மாவரைக்கும் ஒரு கல் எந்திரம் ஆகியவை மட்டுமே!
