Published : 06 Aug 2015 12:24 PM
Last Updated : 06 Aug 2015 12:24 PM

அபய முத்திரை காட்டும் அம்பிகை

ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்று சொல்வார்கள். அதற்கேற்ப மயூரநாதர் திருக்கோவிலின் அமைப்பும் அம்மையப்பரின் திருவழகும் காணக் கண் கொள்ளாதது.

இந்தத் திருத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் உடைய சிறப் புடையது. சைவக் குரவர்களாகிய அப்பர் மற்றும் சம்பந்தர் பாடிய தலமாகும். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் இவ்வூர் கோவிலின் அம்பாள் மேல் நவாவர்ணக் கீர்த்தனைகள் பாடியுள்ளார். இக்காலத்தில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, உ.வே.சா. மற்றும் வேதநாயகம் பிள்ளை போன்ற தமிழ் அறிஞர்களும் இங்கு வாழ்ந்து இத்தளத்தை போற்றியுள்ளார்கள்.

இத்தலத்தில் துலா மாதத்தில் காவிரியில் நீராடி வழிபடுவது பெரும்பேறு தரும். அன்னை மயிலுருக் கொண்டு வழிபட்டது இரண்டு இடங்கள். ஒன்று மயிலை. இரண்டாவது மாயூரம். அருள்மிகு மாயூரநாதர் ஆண்மயிலாக உருக்கொண்டு எழுந்தருளி இங்கு அம்மைக்கு அருள் புரிந்தார். இத்தளத்தில் ஈசன் ஆடிய தாண்டவம் கௌரி தாண்டவமாகும். இவர் வீற்றிருக்கும் கோவில்தான் ஊருக்கே பிரதானமாக விளங்கும் ஆதி மாயூரநாதர்கோவிலாகும். இத்தலத்தில் தேவர்கள், முனிவர்கள் மற்றும் சித்தர்கள்கூட வழிபட்டுள்ளனர். இந்தக் கோவில் தரிசனம் பிணி நீக்கும்.

தமிழிசை மூவரான மாரிமுத்தாப் பிள்ளை, முத்து தாண்டவர், அருணாச்சலக் கவிராயர் ஆகியோர் இத்தலம் குறித்துப் பாடியுள்ளனர்.

மயில் உருவத்தில் இறைவனும் இறைவியும்

செங்கலினாலான மிகப் பழமையான கோவில் இது. 8-ம் நூற்றாண்டுக்கு முன்னால் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பின்னால் வந்த சோழ மன்னர்கள், மேலும் பல சந்நிதிகள் கூட்டி விஸ்தீரணம் செய்ததாகக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கோவிலின் குளம் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் சுயம்பு மூர்த்தி. அருகில் இறைவி மயில் உருவமாக அபயாம்பிகை என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார். சுவாமியையும் அம்பாளையும் மூலஸ்தானத்தில் மயில் உருவமாக ஒருசேரத் தரிசிப்பது இந்தக் கோவிலில் மட்டுமே.

பதினாறு கால் மண்டபம்

ஐந்து பிராகாரங்களைக் கொண்ட இந்த கோவில் 164 அடி உயர ராஜ கோபுரத்தைக் கொண்டது. ஒன்பது தளங்களும் ஒன்பது கலசங்களும் கொண்டது. இந்தக் கோபுரத்தைத் தாண்டிய உடனேயே இடது பக்கத்தில் வரும் குளம் பிரம்ம தீர்த்தம். இதுதான் தல தீர்த்தம். இங்குதான் குட முழுக்கு மற்றும் தெப்ப விழா நடை பெறும். மிகவும் அமைதியான சூழ்நிலை. பெரிய பெரிய தூண்களுடன் கூடிய அகன்ற மண்டபங்கள். அதில் இரு மருங்கிலும் மேடைகள்.

அப்பரும் சம்பந்தரும் பாடிய பாடல்களைத் தன் காதாரக் கேட்டவர் ஆதிமயூரநாதரே. தலவிருட்சம் மாமரம். அதற்கு கிழக்கே திருக்கோவில் உள்ளது. பிரம்ம தீர்த்தத்தை கடந்தால் அழகிய 16 கால் மண்டபம். திருக்கல்யாண வைபவங்கள் இங்குதான் நடைபெறும்.

மூன்றாவது கோபுரம் வழியாக திருக்கோவிலை அடைகிறோம். முதலில் செங்கல் கற்றளியாக இருந்த இது பிற்காலத்தில் கருங்கல் தூண்களை கொண்டு மிகப் பெரிய பிராகரமாக அம்பாள் சுவாமி உள்பட அனைத்து மூர்த்திகளையும் கொண்டு விளங்குகிறது.

மிகச் சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடிய உள்பிராகரத்தில் கருவறை அமைந்துள்ளது. இடது புறம் சபா மண்டபமும் வலது புறம் விமான மண்டபமும் உற்சவ மற்றும் உப தெய்வங்களுடன் அணி செய்கின்றன. இந்தச் சிவாலயத்தின் மிகப் பெரிய சிறப்பு என்னவென்றால் சூரியன், சந்திரன், மகாவிஷ்ணு, பைரவி, சனீஸ்வரர் ஆகியோர் ஈஸ்வரனைப் பூஜை செய்பவர்களாக எழுந்தருளியுள்ளனர். இதுபோன்று தமிழ் நாட்டில் பிற கோவில்களில் காண முடியாது.

குதம்பை சித்தர்

தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு அருகே உள்ளது குதம்பை சித்தர் ஜீவ சமாதி. அருகிலேயே அவருடைய நேர்த்தியான சிலையும். எந்த நேரத்திலும் இந்தச் சித்தர், சமாதியில் எழுந்தருளி இறைவனை வழிபடுவதாகக் கூறப்படுகிறது . காலை மாலை பூஜை வேளையில் முதலில் நடராஜருக்கும் பின்னர் இச்சித்தருக்கும் பூஜை செய்த பின்னர் அனைத்து தெய்வங்களுக்கும் பூஜை நடைபெறுகிறது. சுவாமி முதலான தெய்வங்களை தரிசித்த பின்னர் வெளி வாசல் வழியே இடப்புறம் வந்து கீழ்ப் புறம் நோக்கினால் எதிரே நாத சர்மா என்ற சித்தர் சந்நிதி. திருவையாற்றுக் கோவிலையே மாயூரத்திற்குக் கொண்டுவந்தவர் இவர்தான். அது இப்போது ஐயாரப்பன் கோவிலாகத் திகழ்கிறது.

அபய முத்திரை காட்டும் அம்பிகை

அம்பாள் கருவறைச் சுவர் பளபளக்கும் கருங்கற்களால் சித்திர வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. அம்பாள் ஐந்தடி உயரத்தில் அபய முத்திரை காட்டி எழுந்தருளியுள்ளார். மிகவும் சக்தி வாய்ந்தவள் இந்த அபயாம்பிகை. அம்மனுக்கு வலப் புறத்தில் நாத சர்மாவின் மனைவி அனவித்யாம்பிகை இறைவன் காட்டிய இடத்தில் ஐக்கியமாகி லிங்க வடிவில் காட்சி தருகிறார். இந்த லிங்கத்திற்கு சிவப்பு புடவையே சாத்தி வழி படப்பெறுகிறது . இந்த வழிபாடும் இக்கோவிலின் தனித்துவம்தான்.

ஐப்பசி (துலா) மாதம் முப்பது நாட்களும் கார்த்திகை மாதம் முதல் தேதி வரை திருவிழாக் கோலமாக இருக்கும். அப்போது இங்கு ஓடும் காவிரியில் கங்கை சங்கமிப்பதாக ஐதீகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x