Published : 12 Jan 2020 03:30 PM
Last Updated : 12 Jan 2020 03:30 PM

ஆடுவோம்... பாடுவோம்... நன்றி சொல்லுவோம்! 

வி.ராம்ஜி

மாட்டுப் பொங்கல் அன்று மஞ்சள் நீரை மாமன் மகன், முறைப்பிள்ளைகள் மேல் தெளித்து சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வார்கள். பொங்கலன்று கிராமங்களில் கடைபிடிக்கப்படும் மரபுகள், பண்பாட்டு சிறப்புகளை, அனுபவங்களை இன்றைய முன்னோர்கள், பகிர்ந்து கொள்வார்கள்.

சூரியனில்லாத பூமி இருண்டு விடும். மழையோ, நீரோ இருக்காது. உயிர்கள் எதுவும் உற்பத்தியாகாது. வாழவும் முடியாது. பூமியின் ஜீவாதாரமாக சூரியனின் இயக்கம் இருந்து வருகிறது.

பொங்கல் என்பது லட்சுமிதேவியானவள், நம் வீட்டுக்கு வரும் நாள் என்பதால், அவளை நம் இல்லத்திலேயே தங்க வைப்பதற்காக வீட்டை விட்டு எதையும் வெளியேற்றக் கூடாது என்பது ஐதீகம்..அதனால்தான், போகி எனப்படும் முதல்நாளிலேயே அனைத்தையும் கழித்துவிடுகிறோம்.

கரும்பு... உழைப்பின் அருமையை நமக்குக் கற்றுத்தருகிறது. அதன் மேல்பகுதி உப்புத்தன்மையுடனும், அடிக்கரும்பு இனிமை மிக்கதாகவும் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான். இளமையில் கஷ்டப்பட்டு உழைக்க எந்த வித தயக்கமும் கொள்ளக்கூடாது. அப்படி இளமையில் உழைத்தால் முதுமையில் சிரமமில்லாமல் இனிய வாழ்வு வாழ முடியும். இந்த உண்மையை உணர்ந்து கரும்பைச் சுவைக்க வேண்டும்.


பூமிப்பந்தின் ஆதாரமான சூரியன், உலகின் பசி போக்கும் உழவர்கள், படைப்புக் கருவிகளாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவே தைத்திருநாள். வீடுகள், மாட்டுத் தொழுவங்களுக்கு வண்ணம் தீட்டி, பச்சரிசி, புது வெல்லம், செங்கரும்பு, மஞ்சள், மாக்கோலம், புத்தாடையுடன் பாரம்பரியம், பண்பாட்டை பறைசாற்றும் பண்டிகை இது. கால்நடைகளை நீராடச் செய்து, தான் உண்ட பொங்கலை அவற்றிற்கு பரிவுடன் அளிப்பார்கள்.

பிழைப்புக்காக திசைகள் எட்டும் சென்ற பந்தங்கள் இந்நாளில் ஒன்றுகூடி மகிழும். மஞ்சுவிரட்டு, பாரம்பரிய விளையாட்டுகள் என செயற்கைத் தனம் இல்லாத குதூகலமாகத்தான் விவசாயிகள் தைத் திருநாளை இன்றைக்கும் கொண்டாடுகின்றனர்.

பொங்கல் விழாவின் நிறைவாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கி சந்தோஷத்துடன் பொங்கல் விழாவை முடிப்பதே காணும் பொங்கலின் சாராம்சம்.


பொங்கல் திருநாளை, கலாச்சாரமும் பண்பாடு மிக்க நன்னாளை கூடிக் கொண்டாடுவோம்! இயற்கைக்கு நன்றி சொல்லுவோம். காடுகழனிக்கு நன்றி சொல்லுவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x