

வி.ராம்ஜி
தில்லை என்றதும் நடராஜர் நினைவுக்கு வருவார். திருவாதிரை என்றதும் தில்லை சிதம்பரத்தில் நடராஜருக்கு படைக்கப்படும் களியமுது நினைவுக்கு வரும். மார்கழி திருவாதிரையில், ஆருத்ரா தரிசனம், சிவாலயங்களில் விமரிசையாக நடந்தேறும்.
சிதம்பரம், திருவாலங்காடு, மதுரை, திருவொற்றியூர், நெல்லை, தண்டந்தோட்டம், கோனேரிராஜபுரம், உத்திரகோசமங்கை, குற்றாலம் முதலான தலங்கள் மட்டுமில்லாமல் அனைத்து சிவாலயங்களிலும் பூஜைகளும் வழிபாடுகளும் அமர்க்களமாக நடைபெறும்.
வைகுண்ட ஏகாதசிக்கு விரதம் இருப்பது போல், திருவாதிரைக்கும் விரதம் இருந்து சிவதரிசனம் செய்வார்கள் பக்தர்கள். இன்றில் இருந்து விரதம் தொடங்கி, நாளைய தினம் திருவாதிரையின் போது, சிவதரிசனம் செய்து, களியமுது படைத்து, விரதத்தை நிறைவு செய்வார்கள்.
திருவாதிரையில் விரதம் இருந்து, ஆருத்ரா தரிசனம் செய்து, சிவனாரை வேண்டிக்கொண்டால், சகல செளபாக்கியங்களும் பெறலாம். வீட்டில் உள்ள தரித்திர நிலையை மாற்றி அருள்வார் சிவனார். குழந்தைகள் கலைகளில் சிறந்துவிளங்குவார்கள் என்பது ஐதீகம்.
நாளைய தினம் 10.1.2020 வெள்ளிக்கிழமை ஆருத்ரா தரிசனம். மார்கழி திருவாதிரைத் திருநாள். இந்தநாளில், அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்லுங்கள். தென்னாடுடைய சிவனாரை தரிசியுங்கள். வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுவீர்கள் என்பது உறுதி!