Published : 05 Jan 2020 11:11 AM
Last Updated : 05 Jan 2020 11:11 AM

வைகுண்ட ஏகாதசி - ரங்கா... ஸ்ரீரங்கா!  


வி.ராம்ஜி


இந்த வைகுண்ட ஏகாதசிக்குச் சொல்லத் தொடங்கினால், அடுத்த வைகுண்ட ஏகாதசி வரைக்கும் சொல்லிக்கொண்டிருக்கலாம் ஸ்ரீரங்கத்தின் பெருமைகளை!


பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் என இத்தனை ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட அற்புதமான க்ஷேத்திரம் ஸ்ரீரங்கம். மூலவர் & ஸ்ரீரங்கநாதர். தாயாரின் திருநாமம் & ஸ்ரீரங்கநாயகி. ஒன்பது தீர்த்தங்களைக் கொண்ட தலம்.


வருடம் 365 நாட்களில் முக்கால்வாசி நாட்கள் திருவிழா நடைபெறும் பிரமாண்டமான ஆலயம், ஸ்ரீரங்கமாகத்தான் இருக்கும். அதில் முக்கியமானது வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா. பகல்பத்து, ராப்பத்து எனும் இத்திருவிழா நாட்களில், சுவாமியின் திருமுன்னிலையில் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் முழுவதும் பாடப்படும். பிரம்மாண்டமான இந்த திருவிழாவில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் திரண்டு பெருமாளை வணங்குவார்கள்.


அதோடு இந்தத் தலத்தில் நடக்கும் 3 பிரம்மோற்சவ விழாக்களிலும் (10 நாட்கள்) லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர். மாசி மாத தெப்பத்திருவிழா 10 நாள் விழாவிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோயிலே விழாக்கோலம் பூண்டிருக்கும். தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்தவண்ணம் இருக்கும்.


நாளை 6.1.2020 வைகுண்ட ஏகாதசி, பரமபத வாசல் திறப்புவிழா. இந்தநாளில், எம்பெருமாளை ஸேவியுங்கள். வீட்டில் தடைப்பட்டிருந்த சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பெண்கள் வாழ்வில் சுபிட்சம் நிலவும். குழந்தைகள் கல்விகேள்விகளில் சிறந்துவிளங்குவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x