Published : 03 Jan 2020 15:02 pm

Updated : 03 Jan 2020 15:02 pm

 

Published : 03 Jan 2020 03:02 PM
Last Updated : 03 Jan 2020 03:02 PM

வைகுண்ட ஏகாதசி ஏன்... எப்படி?

vaikunda-egadasi

வி.ராம்ஜி

வைகுண்ட ஏகாதசி என்று சொல்லும்போதே, நினைவுக்கு வருவது ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர்தான்! இந்தநாளில் விரதமிருந்து பெருமாளைத் தரிசித்து, பரமபதவாசலை அடைந்தால், நம் ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


ஒரு வைகுண்ட ஏகாதசி நாளில்தான், நம்மாழ்வார் பரமபதம் அடைந்தார். வைணவத்தின் தலைநகரம் என்று போற்றப்படும் திருவரங்கம் மிகப் பிரமாண்டமான கோயில். சொல்லப் போனால் ஏழுப் பிராகாரங்களைக் கொண்ட அற்புதமான திருத்தலம்!


இங்கு ஆண்டுதோறும் இருபது நாட்கள் ‘அத்யயன உற்ஸவம்’ நடைபெறுகிறது. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை செவிமடுக்கவே திருமங்கை ஆழ்வாரால் இந்த அத்யயன உற்ஸவம் ஏற்படுத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள்.


வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் நம்மாழ்வார், ஆழ்வார்களுள் தலைவராகத் திகழ்ந்தார். நம்மாழ்வாரது நான்கு மறை நூல்களுக்கு ஆறு அங்கமாக, தமிழில் ஆறு நூல்களை இயற்றி வேத -வேதாங்க நெறிமுறைகளை ஒழுங்குபடுத்தினார் திருமங்கையாழ்வார்.


ஆழ்வார்கள் காலத்துக்கு முன் வேதப் பயிற்சிக்கு ‘அத்யயன காலம்’ என்றும் ஓய்வு காலத்துக்கு ‘அநத்யாயன காலம்’ என்றும் வடமொழியில் வழங்கி வந்துள்ளனர். வேத நெறியையொட்டி தென்மொழி மறைவாணர்களும் வேதப்பயிற்சி, விடுமுறை (ஓய்வு கால) வழக்கங்களைப் பின்பற்றத் தொடங்கினார்கள்.


ஆழ்வார்கள் காலத்துக்கு முன்னர் திருவரங்கம் பெரிய கோயிலில், வைகுண்ட ஏகாதசியன்று வடமொழியில் மறைகளை செவிமடுத்து, பரமபத வாயில் திறப்பு விழாவை நடத்தி வந்ததாகவும் நாளடைவில் அந்த வழக்கம் நலிவுற்றதாகவும், அதை ஈடு செய்ய தமிழ் வேதங்களை அரங்கன் செவிமடுக்க... இப்போதைய ‘அரையர் சேவை’ ஏற்பட்டதாகவும் சொல்கிறார்கள்.


திருமங்கை மன்னன் காலத்துக்குப் பின் இந்த அத்யயனத் திருவிழா வழக்கொழிந்தது. நாலாயிரமும் இடைக் காலத்தில் மறைந்தது. பின்னர் ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் காட்டுமன்னார் கோவிலில் தோன்றிய நாதமுனிகள் பெரும் தவமியற்றி, யோக நெறியில் நின்று நம்மாழ்வாரிடமிருந்து மறைந்த நாலாயிர திவ்விய பிரபந்தத்தைப் பெற்று, இசையமைத்து, தாளம் வழங்கி ‘முத்தமிழ்’ ஆக்கி நாடெங்கும் பரவச் செய்தார். வைணவர்கள் அறிய வேண்டிய முக்கிய மந்திரங்களை மனதில் கொண்டு நாலாயிர திவ்விய பிரபந்தத்தை முறைப்படுத்தி, தொகுத்து அளித்தார்.


நாதமுனியின் பேரன் ஆளவந்தார். இவருக்கு ஐந்து சிஷ்யர்கள். அவர்களில் ஒப்பற்ற சிஷ்யராகவும், புகழ்பெற்ற ஆசிரியராகவும் விளங்கிய பகவத் ராமானுஜரோடு இணைந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் பல்லாயிரம் மக்கள் அரங்கனோடு இணைந்து அனுபவிக்கும் வகையில் இந்த ‘அத்யயன’ உற்ஸவத்தை ஸ்ரீரங்கத்தில் மீண்டும் அமைத்தனர். அப்போது திருமங்கையாழ்வாரை நினைவுகூர்ந்து சிறப்பிக்க அவரது திருநெடுந்தாண்டகத்தை முதன்மைப்படுத்தினார்கள்.


திருமங்கையாழ்வார் காலத்தில், நம்மாழ்வார் திருவாய்மொழிப் பாடல்களை இசையுடன் ஓதி பத்து நாட்கள் மட்டுமே விழா எடுத்தனர். அதற்காக திருமங்கையாழ்வார் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரில் கோயில் கொண்டுள்ள நம்மாழ்வார் திருமேனியை ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளச் செய்து மிகப் பெரிய விழாவாகக் கொண்டாடினார். பின்னர் ஸ்ரீரங்கத்திலேயே ஆழ்வார்களுக்கு விக்கிரகங்கள் அமைத்துக் கோயில் எழுப்பி, எழுந்தருளச் செய்தனர்.


திருவிழாவின்போது அவர்களது பாடல்களை ‘அரையர் சேவை’யாக நடத்தினர். ‘அரையர்’ என்ற சொல் முத்தமிழ் வித்தகரைக் குறிக்கும். ‘அத்யயன உத்ஸவம்’ என்பதை ‘முத்தமிழ் விழா’ என்றே சொல்லலாம்!


இப்போது - திருநெடுந்தாண்டகம் தொடங்கி பத்து நாட்கள் பகல்பத்து எனவும், நம்மாழ்வாரின் திருவாய்மொழித் திருநாள் ராப்பத்து எனவும் கொண்டாடப்படுகிறது.


பகல் பத்துக்கும் இராப் பத்துக்கும் இடையே உள்ள நாளே வைகுண்ட ஏகாதசியாக போற்றப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி தொடங்கி பத்து நாட்கள் திருவாய்மொழி ஓதி இறுதி நாளில் நம்மாழ்வார் பரமபதம் எய்தும் காட்சி நடைபெறும். ஆக, திருவரங்கத்தில் திவ்வியப் பிரபந்த அத்யயனத் திருவிழாவின் நடுநாயக நாளாக அமைவதே வைகுண்ட ஏகாதசி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.


வைகுண்ட ஏகாதசி ஏன்... எப்படி?பெருமாள் வழிபாடுவைகுண்ட ஏகாதசி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author