ஆன்மிக நூலகம்: நோக்கம் சொல்லும் யோகம்

ஆன்மிக நூலகம்: நோக்கம் சொல்லும் யோகம்
Updated on
1 min read

“யோகத்தின் நோக்கம் என்ன?’’ என்கிற கேள்வியை முன் வைத்தார் மிரா. மிராவின் கண்களை ஆழ ஊடுருவிப் பார்த்த அரவிந்தர் புன்னகைத்தார். சிறிது நேர மௌனத்தைத் தொடர்ந்து மெல்லப் பேச ஆரம்பித்தார். ‘‘நம் யோகத்தின் நோக்கம் மனம், பிராணன், உடல் ஆகியவை உயரிய தெய்வ உண்மையை விளக்கும்படிக்கு அவற்றைத் திவ்ய மாற்றம் செய்வதாகும்.

அதாவது, முற்றிலும் புதிய உணர்வை அடைதல்; அவ்வுணர்வை அடையும்போது நீ மனதிலும் அகங்காரத்திலும் வாழாமல் இறைவனது உணர்வில் வாழ்வாய்; உடல், பிராணன், மனம் இவற்றிற்கு மேலே உனது உண்மையான ஜீவனில் வாழ்வாய். அப்பொழுது அகவாழ்வு மட்டுமல்லாமல் புறவாழ்வும் தெய்வ உண்மையின் வடிவமாகும். இது ஆன்ம நிலையை அடைந்து அதில் வாழ்வதைவிடவும் பன்மடங்கு உயர்வான லட்சியமாகும். இந்த திவ்ய மாற்றம் அடைந்தபின் பிற தர்மங்களையெல்லாம் விட்டுவிட்டு, அந்த உயர் உணர்வின்படி செயல்படுவது ஒன்றே வாழ்வின் விதியாக இருக்கும்.

தனது அகங்காரத்திற்கோ, பிறருடைய அகங்காரத்திற்கோ செய்வதன்று, தொண்டு. தெய்வ சக்திக்குத் தொண்டு செய்வதும் அவளுடைய வேலையில் அவள் கருவியாக இருப்பதுமே இந்த திவ்ய மாற்றமடைந்த வாழ்வின் தர்மமாக இருக்கும்’’ என்று கூறினார் அரவிந்தர்

‘‘இந்த யோக வாழ்வுக்கு அனைவரும் வருவது சாத்தியமா?’’ மிராவிடமிருந்து அடுத்த கேள்வி அம்பு பறந்தது. அரவிந்தர் அதை கவனமாக எதிர்கொண்டார்.

‘‘ஒருவன் இந்தப் பாதைக்கு வர வேண்டுமென்று விதிக்கப்பட்டிருந்தால், எல்லா சந்தர்ப்பங்களும், மனமும் உயிரும் எவ்வளவுதான் வழி விலகிச் சென்றபோதிலும், எப்படியோ அவனை அந்தப் பாதைக்குக் கொண்டுவந்து சேர்த்துவிடும். அவனுள் இருக்கும் அவனுடைய சைத்திய புருஷனும் மேலேயுள்ள தெய்வ சக்தியும் அவனுடைய மனதிலும், புறச்சூழ்நிலையிலும் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைப் பயன்படுத்தி அவனை யோகப் பாதைக்குக் கொண்டுவருகின்றன!’’ என்றார்.

நூல்: ஸ்ரீ அரவிந்த அன்னை

ஆசிரியர்: எஸ்.ஆர்.செந்தில்குமார்

விலை: ரூ. 150 பதிப்பகம்: சூரியன் பதிப்பகம்

முகவரி: 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-600 004

தொலைபேசி: 044-4220 9191

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in