

திருவோணம் ஆகஸ்ட் 28
ஸ்ரீ விஷ்ணுவால் மோட்ச சாம்ராஜ்யம் பெற்ற மகாபலி சக்கரவர்த்தி, திருவோணத்தன்று, தான் ஆண்ட கேரள தேசம் வருவதாக மக்கள் நம்புகின்றனர். அம்மன்னனை வரவேற்கவே வீதிதோறும் உள்ள இல்லங்களின் உள்ளும், புறமும் அத்தப்பூ கோலமிடுகின்றனர்.
அத்தப்பூ என்றால் பூக்களின் களம் என்று பொருள். பூக்கள் மொத்தமாகக் குவிக்கப்பட்டிருக்கும் இடம் எனலாம். புள்ளிக் கோலம், கம்பிக் கோலம் உட்படப் பல வகைக் கோலங்கள் உண்டு. இதில் வெளிக்கோடுகள் வரைந்து அதில் பூக்களை இட்டு நிரப்புதலே அத்தப்பூ கோலம்.
இக்கோலங்களை வரைந்து தங்களது முன்னாள் மன்னனை வரவேற்பது கேரள மக்களின் வழக்கம். மகாஷ்ணுவால் சுதல லோகத்தை அடையும் பாக்கியம் பெற்ற மகாபலி சக்கரவர்த்தியை அத்தப்பூ கோலமிட்டு வரவேற்பதன் மூலம் அவர், தன்னை நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை என நினைத்து மனம் மகிழ்ந்து ஆசிகள் பல அருளுவார் என்பது ஐதீகம்.
நர்மதா நதி ஆற்றங்கரையில் உள்ள பிறகுமுச்சம் என்ற தலத்தில், மன்னர்கள் வளர்க்கின்ற அசுவமேத யாகத்தைத் தொடங்கினான் மகாபலி சக்கரவர்த்தி. அசுவம் என்பது குதிரை. இதனை அலங்கரித்து அரசர்களுக்கு எல்லாம் அரசனாக விரும்பும் மன்னன் பல நாடுகளுக்கும் சில படை வீரர்கள் சூழ தனது வெண்குதிரையை அனுப்புவான். எதிர்ப்பார் இன்றி குதிரை திரும்பி வந்தால் யாகம் நடத்தி, மிகப் பெரிய தானங்களை அம்மன்னன் செய்ய வேண்டும் என்பது நியதி. மேலும் பிராம்மணர்கள் கேட்டதை எல்லாம் வழங்க வேண்டும் என்பதும் நியதி.
யாசகம் கேட்ட வாமனன்
இந்த நியதிகளின்படி பிராமண வாமனராக அவதரித்திருந்த மகாவிஷ்ணு அவரிடம் யாசகம் கோரச் சென்றார். மன்னனும் அழகிய, ஒளி பொருந்திய குள்ள வடிவ வாமனனைக் கண்டு உளம் மகிழ்ந்தான். வேண்டுவன கேட்கச் சொன்னான் மன்னன்.
தான் வசிக்க மூன்றடி மண் கேட்டார் வாமனர். அவரது வடிவமே மன்னனை நம்ப வைத்தது. போதுமா இன்னும் வேண்டுமா என்று கேட்டபடியே, கமண்டலத்தை எடுத்து நீர் வார்க்க முயன்றான் மன்னன் மகாபலி.
இதற்குள் அருகில் இருந்த அசுர குல குரு சுக்கிராச்சாரியார் ஞான திருஷ்டியில் விஷ்ணுவின் நோக்கத்தை அறிந்தார். விபரீதம் நேராமல் தடுக்க மன்னனை தானம் அளிக்க வேண்டாம் என்று எச்சரித்தார்.
ஆனால் மன்னன் கொடுத்த வாக்கை நிறைவேற்றக் கமண்டலத்தை எடுத்தான். நீர் வீழ்ந்தால் மட்டுமே, தானம் கொடுக்கப்பட்டதாக அர்த்தம் என்று சாஸ்திரம் சொல்கிறது. சொம்பில் இருந்து நீர் வெளிவரும் பாதையை அடைத்துவிட்டால், தானம் அளிக்க இயலாது என்று எண்ணி ஒரு வண்டாக உருமாறிய சுக்கிராச்சாரியார் நீர் வெளி வராமல் தடுத்துவிட்டார்.
ஆனால் ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து நீர் வழிப் பாதையில் குத்தினார் வாமனர். அங்கு வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்ணைத் தர்ப்பைப் புல் குத்தியது. இதனால் அவருக்கு ஒரு கண் பார்வை போனது.
தடை நீங்கியதால் நீர் வார்க்கத் தொடங்கினான் மன்னன். வாமனனிடம் மூன்று அடிகளை அளந்து எடுத்துக்கொள்ளச் சொன்னான். வாமன மூர்த்தி விஸ்வரூபம் எடுத்தார். பெருமாளின் ஒரு அடிக்குள் பூமி அடங்கியது. இரண்டாம் அடியில் வானம் அடங்கியது. ஓங்கி உலகளந்த பெருமாள், மூன்றாம் அடியினை எங்கு வைக்க எனக் கேட்க, தனது தலையைத் தாழ்த்தி அடங்கினான் மகாபலி சக்கரவர்த்தி.
மகாபலி, பக்தன் பிரகலாதனின் குல வழிப் பேரன். பக்தப் பிரகலாதன் அரக்க குலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் பெருமாளைச் சரணடைந்ததால், அவரது குலத்தைக் காப்பதாக பெருமாள் ஏற்கனவே வாக்களித்திருந்தார்.
மாயைகளைக் கடந்த மகாபலி
இந்த நிலையில், மகாபலியின் பெருமைகளைப் பெருமாளே எடுத்துக் கூறினார். மகாபலி மாயையைக் கடந்தவன். துன்பம் கண்டு கலங்காதவன். தர்ம நெறியில் நிற்பவன். அவனே பிற்காலத்தில் மீண்டும் இந்திரனாவான். மக்கள் நலத்தை முன்னிறுத்திய மாமன்னன். மோட்ச காலம் வரும் வரை அவன் சுதல லோகத்தில் சுகமாக வாழ்ந்து வரட்டும் என்று கூறி தனது காலை மகாபலி தலையில் வைத்து அழுத்தினார் பெருமாள். மகாபலி மகிழ்ச்சி அடைந்தான்.
அம்மகாபலியே திருவோணத்தன்று தான் ஆண்ட ராஜ்ஜியப் பகுதிகளில் மக்கள் சுகமாக வாழ்வதைக் காண வருகிறார் என்ற நம்பிக்கையில் ஆண்டுதோறும் அத்தப்பூ கோலமிட்டு கேரள மக்கள் அவரை வரவேற்கின்றனர்.