Published : 19 Dec 2019 02:43 PM
Last Updated : 19 Dec 2019 02:43 PM

மார்கழி தொடங்கி பொங்கல் வரை... காஞ்சி காமாட்சிக்கு கோலாகல பூஜை! 

வி.ராம்ஜி


மார்கழி மாதம் தொடங்கியதில் இருந்து தை மாதம் பொங்கல் வரை காஞ்சி காமாட்சி அன்னைக்கு பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரங்கள், திருவீதியுலா என அமர்க்களப்படும்.


காலையில் அம்பாள் நான்கு ராஜவீதிகளிலும் புறப்பாடாகி, வீதியுலா வருவாள். அப்போது, சர்வ அலங்காரத்தில் ஜொலிக்கும் அம்பாளைத் தரிசனம் செய்தாலே, நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும். பிறகு, கோயிலின் காவிரி மண்டபத்தில் எழுந்தருள்வாள் அம்பிகை. அப்போது களி நைவேத்தியம் படைத்து வழிபடுவார்கள்.

அடுத்து, பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில், கணு உத்ஸவ விழா நடைபெறும். பிள்ளையார் புறப்பாடாகி வருவார். அதைத் தொடர்ந்து, அன்னை காமாட்சி அம்பாள் வீதியுலா வருவாள். பிறகு, கோயிலின் கணுமண்டபத்தில், ஆறு நாள் மண்டகப்படி அமர்க்களப்படும்.

மாட்டுப்பொங்கல் அன்று, கணு உத்ஸவம் பூர்த்தியடையும். அன்று மாலை 4.30 மணிக்கு மேல் காமாட்சி அம்பாள் திருவீதியுலா வருவாள். சுக்கிர வார மண்டபத்தில் கோ பூஜை நடைபெறும். கீழ ராஜவீதி வரை வீதியுலா வரும் அம்பாள், திரும்பவும் கணு மண்டபத்தில் எழுந்தருள்வாள். அங்கே உத்ஸவக் காமாட்சிக்கு அபிஷேக ஆராதனைகள் அமர்க்களப்படும். உத்ஸவ அம்பாளின் அபிஷேக தரிசனம் என்பது அந்த ஒருநாள் மட்டுமே காணக் கிடைக்கும் என்பதுதான் விசேஷம்.

மார்கழியில், உடலும் மனமும் குளிர்ந்திருக்கிற அந்த நாட்களில், முனிவர்களும் ஞானிகளும் தவத்துக்கு உகந்த காலம் எனப் போற்றும் தனுர் மாத காலத்தில், அன்னை காமாட்சி அம்பாளை கண் குளிரத் தரிசித்து, மனம் ஒருமித்து வேண்டிக் கொள்ளுங்கள்.

. பிரிந்தவர்களை ஒன்று சேர்த்து வைக்கும் காமாட்சித் தாயை மார்கழியில் தரிசிப்போம். பிரிந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம். நம்மை கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுத்து, நல் வாழ்க்கை அருளுவாள் காமாட்சி அன்னை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x