Published : 19 Dec 2019 11:00 AM
Last Updated : 19 Dec 2019 11:00 AM

காஞ்சி காமாட்சி கோயிலில் கள்வர் பெருமாள்; பிரிந்த தம்பதியை சேர்த்து வைப்பார்! 

வி.ராம்ஜி

மார்கழி மாதம் வந்துவிட்டாலே, அனைத்து ஆலயங்களிலும் அதிகாலையிலேயே சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் அமர்க்களப்படும். அதேபோல் வைஷ்ணவ ஆலயங்களில் பூஜைகளும் வழிபாடுகளும் விமரிசையாக நடந்தேறும்.

காஞ்சி மாநகரில் அருள்பாலிக்கும் காமாட்சி அம்பாள் கோயிலில், பெருமாளும் சேவை சாதிக்கிறார். இங்கே, இவரின் திருநாமம்- ஸ்ரீகள்வர் பெருமாள். தாயாரின் திருநாமம் ஸ்ரீசௌந்தர்ய லட்சுமித் தாயார்.


108 திவ்விய தேசங்களில், காஞ்சிபுரத்தில் 18 திவ்விய தேசங்கள் அமைந்துள்ளன. அவற்றில், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கள்வர் பெருமாள் ஆலயமும் ஒன்று.

காமாட்சி அம்மன் கோயிலில், காயத்ரி மண்டபத்தில் அழகே உருவெனக் கொண்டு சேவை சாதிக்கிறார் ஸ்ரீகள்வர்பெருமாள். இவரை வணங்கினால், கணவன் மனைவிக்கு இடையிலான விரிசல்கள் குறைந்து, கருத்தொருமித்து வாழலாம் என்பது ஐதீகம்! பிரிந்த தம்பதி ஒன்றிணைவார்கள் என்கிறார்கள் பக்தர்கள்.

மனைவிக்கு ஏதேனும் ஒன்று என்றால், துடித்துப் போய்விடுவதில் கடவுளுக்கும் நமக்கும் வேறுபாடு இல்லை. தன் மார்பிலேயே இடம் கொடுத்து மகாலட்சுமியை வைத்திருக்கும் பெருமாளுக்கு, சாபத்தால் மனைவி அரூபமாகிவிட்டதைக் கண்டு எப்படிப் பொறுத்துக் கொள்ளமுடியும்?

சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவதற்காக, காயத்ரி மண்டபத்துக்கு வந்த மகாலட்சுமி, தவத்தைச் சரிவர செய்கிறாளா, அந்தத் தவத்துக்கு இடையூறுகள் ஏதும் நிகழ்கிறதா, அப்படி ஏதேனும் ஏற்பட்டால் அதிலிருந்து மனைவியையும் அவளின் தவத்தையும் காப்பது எப்படி... என்பதற்காகவே பெருமாளும் காயத்ரி மண்டபத்துக்கு வந்திருந்து, அதையெல்லாம் நோட்டமிட்டுக்கொண்டிருந்தார் என்கிறது புராணம்.

எனவே, மார்கழி மாதத்தில் காமாட்சி அம்பாள் கோயிலுக்கு வந்து, கள்வர்பெருமாளை மனதாரத் தொழுதால், கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை கூடும்; பிரிந்த தம்பதியர் ஒன்றுசேருவார்கள் என்பது ஐதீகம்.

ஆதிசங்கரர் ஸ்தாபித்த காஞ்சி சங்கர மடம், தனுர் மாத ஜபத்தையும் பூஜையையும் சிறப்புறச் செய்யக் கூடிய மடமாகத் திகழ்கிறது. காஞ்சி மகாபெரியவாள், தனுர் மாத ஜபத்தை மேற்கொண்டதையும் சந்திரசேகர பூஜையைச் சிறப்புறச் செய்தததையும் நாம் அறிந்திருப்போம்.

குறிப்பாக, திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி என மொத்தம் உள்ள அறுபது பாடல்களையும் அச்சிட்டு, காஞ்சி காமாட்சி அம்பாள் கோயிலுக்கும், தமிழகத்தில் உள்ள ஆலயங்களுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும் வழங்கி, அந்த 60 பாடல்களையும் மனப்பாடமாகச் சொல்லும் குழந்தைகளுக்கு தங்கக் காசுகளும், 30 பாடல்களை மனனமாகச் சொல்லும் குழந்தைகளுக்கு வெள்ளிக் காசுகளும் வழங்கி, தனுர் மாதத்தில் அம்பிகையை வழிபடுவதற்கான வழிமுறைகளை சொல்லித் தந்தருளியிருக்கிறார் காஞ்சி மகா பெரியவா.

காஞ்சியின் மகாராணி, அகில உலகுக்கே அன்னை என நாமெல்லாம் சிலாகிக்கும் காமாட்சி அம்பாளுக்கு, மார்கழி பிறக்கும் நாளில் இருந்து தினமும் நான்கு காலங்களிலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

சிவனாருக்கு உரிய திருவாதிரை நன்னாளில், ஆருத்ரா தரிசனம் எனும் புண்ணிய நாளில், காமாட்சி அம்பாளுக்கு நெய்க்காப்பு செய்யப்படும். குளிர்ந்த மார்கழி அல்லவா. ஆகவே, அம்பாளுக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x