

நாரதரும் கருடாழ்வாரும் எதிரெதிராக ஒருநாள் சந்தித்தனர்.
“எப்படி இருக்கிறீர்கள் நாரதரே…” என்று மரியாதை நிமித்தமாக கருடாழ்வார் கேட்டார்.
நாரதரோ திரிலோக சஞ்சாரியான தன்னைப் போய் ஒரு கருடன் குசலம் விசாரிப்பதா? என்ன தலைக்கனம் இந்தப் பறவைக்கு!’ என்று மனம் புழுங்கினார்.
கோபத்தை முகத்தில் காட்டாமல், “என்னுடைய நலம் இருக்கட்டும். நீர் எப்படி இருக்கிறீர் கருடாழ்வாரே” என்றார் நாரதர்.
“எனக்கென்ன குறை? அகிலத்தையே காக்கும் நாராயணனைச் சுமக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. வேறென்ன வேண்டும்?” என்றார் கருடாழ்வார்.
கருடாழ்வாரின் இயல்பான பதில் நாரதரை என்னவோ செய்தது.
“நாராயணனை சுகமான சுமை என்கிறீர்கள் அப்படித்தானே…” என்றார் மந்தகாசமான ஒரு புன்னகையை இதழில் தேக்கியபடி நாரதர்.
“ஐய்யய்யோ…. நாரதரே உங்களின் வேலையை ஆரம்பிக்காதீர்கள். நான் எங்கே சுமை என்று சொன்னேன்? சுகம் என்று வேண்டுமானால் சொல்வேன்…” என்றார் பதற்றத்துடன் கருடாழ்வார்.
“எப்போதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாராயணன் பயணிக்கும் வாகனமான உனக்கே இவ்வளவு சுகம் கிடைக்கிறது என்றால் நொடிக்கு ஒருமுறை நாராயணனின் பெயரை ஜபித்துக் கொண்டே வலம் வரும் என்னுடைய சுகத்தைப் பற்றி நீ சந்தேகப்படலாமா?” என்றார் நாரதர் கோபத்துடன்.
“ஐயத்தோடு கேட்கவில்லை. தங்களின் நலனை விரும்பியே கேட்டேன். பிழை இருந்தால் அடியேனை மன்னித்து விடுங்கள்..” என்று கருடாழ்வார் பணிந்தார்.
“உன்னுடைய மன்னிப்பை ஏற்றுக் கொண்டேன்.”
மமதையோடு நாரதரின் உதட்டிலிருந்து வார்த்தைகள் உதிர்ந்தன.
இந்த காட்சியைப் பார்த்தார் நாராயணன். பக்தியால்கூட ஒருவருக்கு கர்வம் வருவது தவறுதான் என்பதை நாரதனுக்குப் புரியவைக்க வேண்டும் என முடிவுசெய்தார் நாராயணன்.
“நாராயணா… நாராயணா…” என்றபடி நாரதர் தேவலோகத்திற்கு வருகைதந்தார். நாராயணனோ அவரை ஏறெடுத்தும் பார்க்காமல் பூலோகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். சில நாழிகைப் பொழுதுக்குப் பின், “வா… நாரதா எப்போது வந்தாய்?” என்றார் நாரதரிடம்.
கண்டுகொள்ளாத நாராயணர்
“நான் வந்து நீண்ட நேரம் ஆகிவிட்டது… நீங்கள்தான் பூலோகத்தையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள்” என்றார் நாரதர்.
“பூலோகத்தில்தான் எவ்வளவு மகத்தான பக்தர்கள் எனக்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தேன்” என்றார் நாராயணன்.
“என்னது பூலோகத்தில் மகத்தான பக்தர்களா? சதா சர்வ காலமும் உங்களையே துதித்துக்கொண்டிருக்கும் என்னைவிடச் சிறந்த பக்தன் உங்களுக்கு யார் இருக்கிறார்கள்?” என்றார் நாரதர்.
“உதாரணத்துக்கு அந்தக் குடியானவனையே எடுத்துக்கொள். காலையில் எழுந்ததும் நாராயணா என்று என்னைக் கூப்பிடுகிறான். அதன் பின் வயலுக்குச் சென்று கடுமையாக உழைக்கிறான். மாலையில் வீட்டுக்கு வந்ததும் மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளைப் பராமரிக்கிறான். அடுத்தநாள் உழவுக்குத் தேவையானவற்றை செய்து முடிக்கிறான். இரவு உறங்குவதற்கு முன் நாராயணா என்றபடி கண்ணயர்கிறான். எவ்வளவு சிறந்த பக்திமான் அவன்..”
இதைக் கேட்ட நாரதருக்கோ எரிச்சல் மேலிடுகிறது.
“ஒரு நாளைக்கு இரண்டு முறை உமது பேரை உச்சரிக்கிறான் ஒரு குடியானவன். அவன் என்னைவிடச் சிறந்த பக்தனா?”
“கோபம் வேண்டாம் நாரதனே… அப்படியானால் நீதான் சிறந்த பக்தன் என்பதை நிரூபி..”
“நான் என்ன செய்ய வேண்டும்…”
“இதோ இந்த எண்ணெய்ப் பாத்திரத்திலிருந்து ஒரு சொட்டு எண்ணெய்கூட கீழே சிந்தாமல் இந்தப் பூலோகத்தை மூன்று முறை நீ வலம் வா… பார்க்கலாம்” என்கிறார் நாராயணன்.
“இதென்ன பிரமாதம்… இதோ இப்போது செய்து காட்டுகிறேன்” என எண்ணெய்ப் பாத்திரத்துடன் கிளம்புகிறார் நாரதர்.
மூன்று நொடியில் பூலோகத்தை மூன்று முறை வலம் வந்துவிடும் திறன்படைத்த நாரதரால் அன்றைக்கு பூலோகத்தை ஒருமுறைகூட முழுதாகச் சுற்ற முடியவில்லை. தூரம் வளர்ந்து கொண்டே போகிறது. எதிர்படுபவர்கள் மோதிவிடக் கூடாதே என்பதற்காக மிகவும் எச்சரிக்கையாக போகிறார் நாரதர். ஒருவழியாக பூலோகத்தைச் சுற்றி முடிக்க மூன்று நாட்கள் ஆகிவிடுகின்றன.
குடியானவனே சிறந்த பக்தன்
“ஒரு சொட்டு எண்ணெய்கூடக் கீழே சிந்தாமல் பூமியை சுற்றிவந்துவிட்டேன். நான்தானே உங்களின் சிறந்த பக்தன்” என்கிறார் நாராயணனிடம் நாரதர்.
“நாரதனே, ஒரு சிறிய பொறுப்பை உன் கையில் கொடுத்ததுமே என் பெயரைச் சொல்ல இந்த மூன்று நாளும் மறந்துவிட்டாயே நாரதா… அன்றாடம் மனிதர்களுக்கு எவ்வளவு பிரச்சினைகள். இவ்வளவு பிரச்சினைகளோடு என்னை இரண்டு முறையாவது நினைக்கும் அந்தக் குடியானவன்தானே உன்னைவிட சிறந்த பக்தனாக இருக்க முடியும்?” என்றார் நாராயணன்.
பதில் சொல்லமுடியாத நாரதனும், பக்தி செலுத்துவதில்கூட கர்வம் இருக்கக் கூடாது என்பதை உணர்ந்தார்.