Published : 13 Dec 2019 12:16 PM
Last Updated : 13 Dec 2019 12:16 PM

திருவொற்றியூர் சிவனாரின் கவசமில்லா தரிசனம்;  விட்டால் அடுத்த கார்த்திகை பெளர்ணமிக்குத்தான்! 

வி.ராம்ஜி


சென்னை திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரரை கவசமில்லாமல் இன்று தரிசிக்கலாம். இதைவிட்டுவிட்டால், அடுத்த கார்த்திகை பெளர்ணமியின் போதுதான் இந்தத் தரிசனம் கிடைக்கும்.


சென்னையில் உள்ளது திருவொற்றியூர். இந்த ஊரை, உலகுக்குப் பிரபலப்படுத்திய நாயகியாம் வடிவுடையம்மன் குடிகொண்டிருக்கும் பூமி இது. தியாகராஜ சுவாமி கோயில் என்று சொல்லப்பட்டாலும் ஆதிபுரீஸ்வரர் ஆலயம் என அழைக்கப்பட்டாலும் இங்கே, இந்தத் தலத்தின் நாயகியே முக்கியத்துவம் நிறைந்தவள். அம்பாளின் திருநாமம் - வடிவுடையம்மன். பேருக்கேற்றது போலவே, அழகு ததும்பக் காட்சி தருகிறாள். மிக முக்கிய சக்தி பீடங்களில், இந்தத் திருத்தலமும் ஒன்று.


அதேபோல் ஆதிபுரீஸ்வரர். இவரும் பேருக்கேற்றது போலானவர்தான். உலகின் முதல் சிவம் இவரே என்கிறது ஸ்தல புராணம். அதனால்தான் இந்தத் திருநாமம் அமைந்ததாகவும் விவரிக்கிறது.


புராண - புராதனப் பெருமை கொண்ட கோயில் இது. பிரளய காலத்தில் இந்த உலகை அழியாமல் காக்கும் பொருட்டு சிவனாரிடம் எல்லோரும் வேண்டிக் கலங்கினர். அப்போது தன் நெற்றிக் கண்ணிலிருந்து வெப்பத்தை உண்டாக்கினார். அந்த வெப்பத்தைக் கொண்டு சூழ்ந்திருந்த தண்ணீரை ஒற்றி ஒற்றி எடுத்தார் என்றும் அதனால் இந்த ஊருக்கு திரு ஒற்றியூர் என்றும் பின்னர் அதுவே திருவொற்றியூர் என மருவியதாகவும் சொல்கிறது ஸ்தல புராணம்.


தேவாரம் பாடிய மூவரும் இந்தத் தலத்துக்கு வந்து பதிகம் பாடிய பெருமைகொண்ட பூமி இது. அதேபோல் வள்ளலார், தன் பால்யத்தில் இங்கேயே கோயிலைச் சுற்றியே வந்துகொண்டிருந்தாராம். ஆலயத்தின் மீது அப்படியொரு ஈர்ப்பு உண்டாம். வள்ளலாரின் பசியைப் போக்க, அவரின் அண்ணியின் வடிவில், வடிவுடையம்மனே வந்து உணவளித்ததாக சிலாகிக்கிறது ஸ்தல புராணம்.


இங்கே வட்டப்பாறை அம்மன் சந்நிதியும் விசேஷம். இந்த வட்டப்பாறை அம்மன் வேறுயாருமில்லை... கண்ணகிதான். இந்த அம்மனின் உக்கிரத்தில் கிடுகிடுத்துப் போனார்கள் மக்கள். இதையறிந்த ஆதிசங்கரர், இங்கு வந்தார். ஸ்ரீசக்கரப் பிரதிஷ்டை செய்தார். அவளின் உக்கிரம் சட்டெனத் தணிந்தது. அன்று முதல், தன்னை நாடி வருவோருக்கெல்லாம் கருணையும் கனிவுமாக, அன்பும் அருளும் வழங்கிக் கொண்டிருக்கிறாள் வட்டப்பாறை அம்மன்.


அடுத்து... ஆதிபுரீஸ்வரர். சுயம்பு மூர்த்தம். சாந்நித்தியமான லிங்கம். பிரளயத்துக்குப் பின்னர் மண்ணில் இருந்து தோன்றிய லிங்க மூர்த்தம். புற்றுமண்ணாலான லிங்கம். அதனால்தான் வெள்ளிக்கவசமிட்டு எப்போதும் தரிசனம் தருகிறார் ஆதிபுரீஸ்வரர்.


ஆண்டுதோறும் கார்த்திகை மாத பெளர்ணமியில், வெள்ளிக்கவசம் எடுத்த நிலையில் புற்றீஸ்வரராக, புற்று லிங்கமாக இருப்பதை தரிசிக்க முடியும். பெளர்ணமியில் இருந்து மூன்று நாட்கள் வரை இந்த அற்புதத் தரிசனம் கிடைக்கும். அப்போது புனுகு, சாம்பிராணி தைலக்காப்பு நடத்தப்படும்.


இதோ... கார்த்திகை பெளர்ணமியில் தரத்தொடங்கியது புற்றுலிங்க தரிசனம். இன்று 13.12.19ம் தேதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவுறுகிறது. இதைவிட்டுவிட்டால், அடுத்த வருடம், கார்த்திகை பெளர்ணமியில்தான் தரிசிக்க முடியும்.


சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட திருவொற்றியூர் வடிவுடையம்மனையும் ஆதிபுரீஸ்வரரையும் கண்ணாரத் தரிசிப்போம். நம் கவலைகளையெல்லாம் தீரும். ஞானமும் யோகமும் பெற்று இனிதே வாழலாம் என்பது உறுதி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x