கார்த்திகை தீபத்தில் சொல்லவேண்டிய ஸ்லோகம்

கார்த்திகை தீபத்தில் சொல்லவேண்டிய ஸ்லோகம்
Updated on
1 min read

வி.ராம்ஜி


கார்த்திகை தீபத் திருநாளின் போது விரதம் மேற்கொள்வது மகிமை மிக்கது. இந்த விரதம் மேற்கொள்வது எதனால் வந்தது என்பது குறித்து புராணம் விவரிக்கும் கதையைப் பார்ப்போம்.


சதாசர்வ காலமும் சதாசிவத்தையே நினைத்துக் கொண்டிருக்கும் உமையவள், நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை என்று இன்றைக்குப் போற்றப்படுகிற திருத்தலத்துக்கு வந்தாள். ஒவ்வொரு அடியெங்கும் சிவலிங்கத் திருமேனி கொண்ட புண்ணிய பூமி என்று திருவண்ணாமலையைச் சொல்லுவார்கள்.


மலையும் அழகு. மலையே அக்னி. மலையே சிவம். பார்வதிதேவி மலையைச் சுற்றி வலம் வந்து ஒவ்வொரு சிவலிங்கத்தையும் தரிசித்தபடியே வந்தாள். அப்போது அறியாதபடி சிவலிங்கத் திருமேனியை மிதித்துவிட்டாள். லேசாக பின்னம் அடைந்துவிட்டது எனத் தெரிவிக்கிறது தேவி புராணம்.


இதனால் சிவ தோஷத்துக்கு ஆளானாள் தேவி. கார்த்திகை சோமவாரத்தில் விரதம் தொடங்கி, கார்த்திகை நட்சத்திர நாளில், தீபங்களேற்றி வழிபட்டாள். இப்படியாக 12 வருடங்கள் கார்த்திகை தீபம் ஏற்றி, விரதம் அனுஷ்டித்து, சிவத்தையே நினைத்து தவமிருந்தாள்.


இதனால் சிவனார் மகிழ்ந்தார். சாப விமோசனம் அளித்தார். அம்மையும் அப்பனுமாக, ரிஷாபாரூடராக, அர்த்தநாரீஸ்வரராக, தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் திருக்காட்சி தந்தருளினார்கள் என்கிறது புராணம்.


இதேபோல், புராண காலத்திலேயே 12 வருடங்கள் கார்த்திகை தீப விரதம் மேற்கொண்டு நாரதர் அருள் பெற்றார் என்றும் சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியையும் கெளரவத்தையும் பெற்றார் என்றும் விவரிக்கின்றன ஞானநூல்கள்.


எனவே, கார்த்திகை தீபத்திருநாளில் சிவ வழிபாடு செய்வோம். இன்று 10.12.19 கார்த்திகை தீபத்திருநாள். இந்தநாளில் இல்லத்தையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, வீடு முழுக்க தீபங்கள் ஏற்றி வைப்பது வழக்கம். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம்.
அப்போது விளக்கேற்றிய பிறகு, பூஜையறையில் சுவாமி படங்களுக்கு எதிரே அமர்ந்து கொண்டு, இந்த ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும்.


தீபம் ஜோதி பரப்பிரம்மம்
தீபம் சர்வ தமோபஹம்
தீபனே சாத்யத சர்வம்
சந்த்யா தீப நமோஸ்துதே!


இந்த ஸ்லோகத்தை 108 முறை ஜபிப்பது விசேஷம். இயலாதவர்கள் 11 முறை அல்லது 9 முறை அல்லது மூன்று முறை எனச் சொல்லலாம்.
கார்த்திகை தீபத் திருநாளைக் கொண்டாடுங்கள். சிவபார்வதியை தம்பதி சமேதராக வணங்குங்கள். வாழ்வில் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். வீடு மனை யோகம் கிடைக்கும். இழந்ததையெல்லாம் கிடைக்கப் பெறுவீர்கள். இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள் என்பது உறுதி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in