Published : 06 Dec 2019 10:05 AM
Last Updated : 06 Dec 2019 10:05 AM

கார்த்திகையில்... எலுமிச்சை தீப வழிபாடு!  

வி.ராம்ஜி

எலுமிச்சை தீப வழிபாடு என்பது ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. கார்த்திகையில் எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


அம்மனுக்கு செவ்வாய், வெள்ளியில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம்தான். குறிப்பாக, எலுமிச்சையில் தீபமேற்று வழிபடுவது இன்னும் விசேஷம்.


எலுமிச்சைப் பழத்துக்கு தீய சக்திகளை விரட்டுகிற சக்தி உண்டு என்பது ஐதீகம். கண் திருஷ்டி முதலானவை நீங்குவதற்கும் எலுமிச்சையின் சக்தி அளப்பரியது. அதனால்தான் சில வீடுகளில், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எலுமிச்சைப் பழம் கொண்டு, திருஷ்டி சுற்றிப் போடுவார்கள்.


வீட்டில் சிலருக்கு அடிக்கடி நோய் வந்து அல்லல்பட்டாலும் வயிறு முதலான உபாதைகளில் தவித்து மருகினாலும் எலுமிச்சையே முதல் முழு நிவாரணமாகத் திகழ்கிறது. இதன் ஒரு துளியே அமிர்தம் என்று போற்றுகிறார்கள் சான்றோர்கள்.

ஸ்ரீதுர்கை வழிபாட்டில், மிக முக்கியமானது எலுமிச்சை தீப வழிபாடுதான் என்பது அறிந்ததுதான். ஞாயிற்றுக் கிழமை ராகு கால வேளையான 4.30 முதல் 6 மணிக்குள் எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால், தீராத நோயும் தீரும். செவ்வாய்க்கிழமை ராகுகாலவேளையான மதியம் 3 முதல் மாலை 4.30க்குள் எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால், குடும்பப் பிரச்சினை நீங்கும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். கவலைகளும் கஷ்டங்களும் காணாமல் போகும்.


வெள்ளிக்கிழமை ராகுகால வேளையான காலை 10.30 முதல் 12க்குள் எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால், சிக்கல்கள் யாவும் தீரும். ஐஸ்வரியம் பெருகும். வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


திருக்கார்த்திகை தீபநாளில், எலுமிச்சை தீபத்தை எப்போதும் ஏற்றலாம். வழிபடலாம். கடன் தொல்லையில் இருந்து மீளலாம். வீட்டில் சுபிட்சம் நிலவும். இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x