Published : 05 Dec 2019 10:29 AM
Last Updated : 05 Dec 2019 10:29 AM

கலைமகள், திருமகள், மலைமகள்... தீப மகிமை!   - இரண்டு திரி சேர்த்து விளக்கேற்றினால் தம்பதி ஒற்றுமை

வி.ராம்ஜி

தீபத்தில், கலைமகள், அலைமகள், மலைமகள் மூவரும் குடிகொண்டிருப்பதாக ஐதீகம். விளக்கேற்றும் போது,இரண்டு திரிகளையும் சேர்த்து விளக்கேற்றினால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவர் என்கிறார்கள் ஆச்சார்யப்பெருமக்கள்.

சித்திரையில் வெயிலடித்து ஆடியில் காற்று வந்து ஐப்பசியில் மழை பெய்யும் என்பார்கள். முன்னதாக, ஆடியிலும் மழை பெய்யும். மண்ணை ஈரப்பதத்துக்குக் கொண்டு வரும் அற்புதமான மாதம்.


அதேவேளையில், சூடு குறைந்து, காற்றடித்து நோய்கள் பரவும் காலமும் இதுவே என்கிறார்கள். இப்படியான தொற்றுநோய்களை பரவ விடாமல் தடுக்கும் சக்தி, சில எண்ணெய் வகைகளுக்கும் தீபத்துக்கும் உண்டு. அதனால்தான் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுங்கள் என சொல்லிவைத்தார்கள்.


அதுமட்டுமா. தீப ஒளியில் கலைமகள் சரஸ்வதிதேவி வந்து அமர்கிறாள். தீபத்தின் சுடரில் திருமகளான லக்ஷ்மியும் தீபத்தின் வெப்பத்தில் மலைமகளான பார்வதிதேவியும் வந்து குடியிருப்பதாக ஐதீகம். ஆகவே வீட்டில் காலையும் மாலையும் ஏற்றி வைக்கும் தீபத்தில், முப்பெருந்தேவியரும் எழுந்தருளி கடாட்சம் தருவதாக நம்பிக்கை. அதிலும் அம்பிகைக்கு உகந்த ஆடி மாதத்தில், தினமும் விளக்கேற்றுவது நற்பலன்கள் அனைத்தையும் வாரி வழங்கும்.


இல்லங்களில், தினமும் பிரம்மமுகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் விளக்கேற்றுவது விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


அதேபோல், மாலையில் 4.30 முதல் 6 மணிக்குள் விளக்கேற்றவேண்டும். இந்த நேரம்... பிரதோஷத்தின் வேளை என்பது நாம் அறிந்த ஒன்றுதான் அல்லவா.


முதலில், விளக்கை நன்றாக சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு முறை விளக்கேற்றும் போதும், விளக்கில் மஞ்சள் குங்குமம் இடுவது கூடுதல் பலன்களைத் தரும். சின்னதாக, பூவையும் விளக்குக்கு அணிவிக்கலாம்.


நெய் அல்லது எண்ணெயை விளக்கில் பயன்படுத்தும் போது, பூரணமாக, அதாவது வழிய வழிய ஊற்றுங்கள். பிறகு திரியை வைத்து ஏற்றுங்கள். எத்தனை திரிகள் விளக்கில் வைத்திருக்கிறோமோ... அவை அனைத்தையும் ஏற்றலாம்.


குறிப்பாக, இரண்டு திரிகளை ஒன்றாக்கி விளக்கேற்றுவது மிகவும் விசேஷம். கணவன் ஒரு திரி, மனைவி மற்றொரு திரி. இப்படி இரண்டு திரி இணைத்து விளக்கேற்றினால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது உறுதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x