Last Updated : 27 Aug, 2015 12:54 PM

 

Published : 27 Aug 2015 12:54 PM
Last Updated : 27 Aug 2015 12:54 PM

மீண்டு வந்த விநாயகர்

கடற்கரைப் பட்டினமான புதுச்சேரி, பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த காலம் அது. அப்போது புதுச்சேரியின் கவர்னராய் இருந்த பிரான்சுவா மர்த்தேன் (1674 1693), மணற்குளத்து விநாயகரை உள்ளூர் மக்கள் வழிபடுவதை தடுத்து நிறுத்த முயன்றார்.

இதனால் மனம் சலிப்புற்ற உள்ளூர் நெசவாளர்களும், பிறரும் தெய்வத்தைத் தொழ அனுமதியில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று முடிவெடுத்து, ஊரைக் காலிசெய்துவிட்டு வெளியேற திட்டமிட்டனர். இதனைக் கேள்விப்பட்ட குவர்னர் பிரான்சுவா மர்த்தேன், இந்த நெசவாளர்கள் இல்லாவிட்டால், கிழக்கு இந்திய கம்பெனியின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்று உணர்ந்து, மணற்குளத்து விநாயகரை வழிபடுவதற்கு விதித்திருந்த தடையை விலக்கிக்கொண்டார். இப்படியான ஒரு கர்ணபரம்பரைக் கதை புதுச்சேரியில் உண்டு.

காலைப் பிடித்தேன் கணபதி நின்பதங் கண்ணிலொற்றி

நூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பொழு(தும்)

வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள்செய்துன்

கோலை மனமெனு நாட்டி னிறுத்தல் குறியெனக்கே

என்று மகாகவி சுப்ரமணிய பாரதியாரால் பாடப்பெற்ற அரிய திருத்தலம் இது.

உலகமெலாம் படைத்தளித்தே ஒடுக்குநிலைக் களமாகி

இலகுபிர ணவவடிவாம் எழிலானை முகத்தவனே !

அலகிலருட் சித்தியெலாம் அளித்தருளும் ஐங்கரனே !

மலமகற்றும் புதுவைநகர் மணக்குளத்து விநாயகனே !

என்று யாழ்ப்பாணம் எஸ்.கந்தையா பிள்ளையாலும், இன்னும், தமிழிசைக்கு இலக்கணம் கண்ட வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளாலும் போற்றிப் பாடப்பெற்ற, வினைகள் தீர்க்கும் இந்த மணக்குளத்து விநாயகப் பெருமானைப் பற்றி புதுச்சேரி வரலாறும், புதுச்சேரி நாட்டுப்புறக் கதைகளும் பலவாறான செய்திகளை நமக்குச் சொல்லுகின்றன.

மணக்குள விநாயகர் முன்னர் வெள்ளைக்கார விநாயகர் என்றே அழைக்கப்பட்டுள்ளார். இந்த ஆலயத்தின் தல புராணத்தின்படி, பிரெஞ்சு கவர்னர்களின் ஆட்சியிலிருந்தபோது, மணக்குள விநாயகரை அகற்றும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. விநாயகரின் சிலை ஒருமுறை கடலில் தூக்கியெறியப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன. எல்லா நெருக்கடிகளிலிருந்தும் மீண்டு, விநாயகர் எங்கும் நகராமல் இங்கே குடிகொண்டுள்ளார்.

“மணக்குள” என்னும் சொல்லுக்கு இரண்டு வகையான பொருள் சொல்லப்படுகிறது. ஒன்று, மனம்+குளம் என்பது. அதாவது, இலைச்சருகு ஒன்று காற்றின் வேகத்திற்கு தக்கவாறு அசைந்து அசைந்து குளத்தில் வீழ்ந்து சிறு சலனத்தைத் தோற்றுவித்து பின் அமைதியைப் பரப்புவது போல, விநாயகப் பெருமானின் அருள், மனமாகிய குளத்தில் ஒரு ஞானச் சிலிர்ப்பைத் தோற்றுவித்து, அமைதியை நிலைப்படுத்தும் என்பதுவாம்.

இன்னொன்று, மணல்+குளம் என்பது. பழைய புதுச்சேரியில் மணலால் சூழப்பட்ட குளங்கள் நிறைய இருந்தன. அத்தகைய குளங்களில் ஒன்றின் கரையில் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டதால் “மணற்குளத்து விநாயகர்” மணக்குள விநாயகர் என்று மறுவி வழங்கப்பட்டு வருவதாகவும் கருத்து உள்ளது. அந்தக் காலத்தில் மக்கள், அந்த குளத்தில் நீராடிய பின்னரே இந்த ஆனைமுகக் கடவுளை வழிபட்டுள்ளனர்.

12 ஆண்டுகள் கும்பாபிஷேகம் காணாத இந்த ஆலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. புதுவை மக்களின் காவல் அரணாக மணக்குள விநாயகர் அருள்பாலிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x