

வி.ராம்ஜி
சென்னைக்கு அருகே பெளர்ணமி தோறும் கிரிவலம் வரும் திருத்தலம்... சித்தர்கள் இன்றைக்கும் சூட்சுமமாக இருந்து அருள் வழங்கும் புண்ணிய பூமி... திருக்கச்சூர்.
சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் செல்லும் வழியில் உள்ளது மறைமலைநகர். இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கச்சூர். சிங்கபெருமாள் கோயிலில் இருந்தும் இந்தக் கோயிலுக்கு வரலாம். அங்கிருந்தும் 3 கி.மீ.தான்!
திருக்கச்சூர். அற்புதமான திருத்தலம். ஊருக்கு நடுநாயகமாக குளமும் கோயிலுமாகத் திகழ்வதே அழகு. கூடவே மொட்டையாய் நிற்கும் கோபுரம் கூட கொள்ளை அழகு. இங்கே உள்ள சிவனின் பெயர் கச்சபேஸ்வரர். தியாகராஜ சுவாமி என்றும் பெயர் உண்டு.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் நால்வரில் ஒருவருமான சுந்தரர்தான், சிவபெருமானின் இனிய தோழனாயிற்றே! அந்த சுந்தரர், திருவாரூரில் இருந்து புறப்பட்டு வழிநெடுக உள்ள சிவாலயங்களைத் தரிசித்தார். அயர்ச்சியும் பசியுமாக இங்கே வந்தார். மரத்தடியில் சாய்ந்து கொண்டார்.
அப்போது சிவபெருமானே பாத்திரத்தை ஏந்திக்கொண்டு, ‘சுந்தரர் வந்திருக்கார், சாதம் போடுங்க’ என்று வயதான கிழவராகச் சென்று யாசகம் கேட்டார். அந்த அன்னத்தை சுந்தரருக்கு அளித்து, திருக்காட்சி தந்தார். அதனால் இங்கே, இந்தக் கோயிலில், விருந்திட்ட ஈஸ்வரன் என்றொரு சந்நிதியே இருக்கிறது.
பிரதோஷம் முதலான வைபவங்கள் வெகு விமரிசையாக நடக்கின்றன. இங்கு வந்து, பக்தர்களுக்கு அன்னதானம் செய்தால், தனம் தானியம் பெருகும். வீட்டில் சுபிட்சமும் ஐஸ்வரியமும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்.
திருக்கச்சூர் தலத்தின் இன்னொரு மகிமை... மருந்தீஸ்வரர். ஆமாம்... ஊருக்குள்ளேயே இருக்கிறார் கச்சபேஸ்வரர். ஊரையொட்டி இருக்கும் மலையடிவாரத்தில் அருளாட்சி நடத்துகிறார் மருந்தீஸ்வரர்.
ஒருகாலத்தில், எண்ணற்ற சித்தர்கள் இந்த மலையிலும் மலையடிவாரத்திலும் தவமிருந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். இன்றைக்கும் சித்தர்கள் சிவபூஜை செய்ய, சூட்சுமமாக உலவுகிறார்கள் என்றும் பெளர்ணமியன்று நல்ல நல்ல அதிர்வுகளை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்றும் ஓர் ஐதீகம்.
அதனால்தான், பெளர்ணமி தோறும், இந்தச் சிறிய மலையைச் சுற்றி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வலம் வருகின்றனர். திருவள்ளூர், திருச்சி, புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் என பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள், திருக்கச்சூரில் பெளர்ணமியின் போது வந்து கிரிவலம் வந்து மருந்தீஸ்வரரையும் கச்சபேஸ்வரரையும் தரிசித்துச் செல்கின்றனர்.
இங்கே... இன்னொரு சிறப்பு... மருந்தீஸ்வரர் கோயிலில் மண்ணே பிரசாதம். மண்ணே மருந்து. இந்த மண்ணை எடுத்து தண்ணீரில் கலந்து தினமும் அருந்தி வந்தால், தீராத நோயும் தீரும். ஆரோக்கியமும் ஆயுளும் அதிகரிக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
அதேபோல், மருந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்த விபூதியும் மகத்துவம் மிக்கது.
திருக்கச்சூர் வாருங்கள்... கச்சபேஸ்வரரின் அருளும் மருந்தீஸ்வரரின் அருளும் முக்கியமாக சித்தபுருஷர்களும் ஆசியும் கிடைத்து இனிதே வாழ்வது உறுதி!