Published : 27 Aug 2015 12:11 PM
Last Updated : 27 Aug 2015 12:11 PM

தெய்வத்தின் குரல்: பொன்மழை பொழிந்தாள் மகாலட்சுமி

ஒரு நாள் காலம்பற, அன்றைக்கு துவாதசி என்று சொல்வார்கள், ஒரு வீட்டுக்குப்போய், முறைப்படி, “பவதி பிக்க்ஷாம் தேஹி” என்று கேட்டார்.

அது பரம தாரித்திரிய தசையிலிருந்த ஒரு பிராம்மணனின் வீடு. அவனுக்கு அநுக்கிரகம் பண்ணவே பால பிரம்மசாரி அங்கே போனார் போலிருக்கிறது.

மலையாளத்தில் எல்லாரும் சுபிக்க்ஷமாயிருந்தார்கள். 'அத்ருதி'க்குள்ளேயே குடித்தனத்துக்கு வேண்டிய ஆகார சாமான்கள் கிடைத்துவிடும் என்றெல்லாம் சொன்னால்கூட, கர்மா என்று ஒன்று இருக்கோல்லியோ? அப்படியிருந்தால் கற்பக விருட்சத்திற்குக் கீழேயே இருந்தால்கூட தரித்திரம்தான் பிடுங்கித் தின்னும். ஜன்மாந்தர கர்மாவினால் இந்த பிராம்மணன் ரொம்பவும் ஏழ்மை நிலையிலிருந்தான்.

உஞ்ச விருத்திக்கு, வீடு வீடாக அரிசி தானத்துக்கு, அந்த பிராம்மணன் போவான். சாதாரணமாக உஞ்ச விருத்தி பிராம்மணன் வந்தால் போடாமல் இருக்க மாட்டார்கள். ஆனாலும் கர்மா ப்ரதிகூலமாக இருந்தால் எங்கேயும் பழி வாங்காமல் விடாது. இவன் போகிற வேளை அசந்தர்ப்பமாயிருந்து காலிப் பாத்திரமாகவே திரும்ப வேண்டிவரும்.

ஆசார்யாள் பிட்சைக்குப் போயிருந்த அன்றைக்கு வீட்டுக்கார பிராம்மணன் வீட்டிலில்லை. அவனுடைய சம்சாரம் மட்டுமே இருந்தாள்.

பிட்சை போடுவதற்கு அந்த வீட்டில் எதுவுமில்லை. ஆசார்யாளைப் பார்த்த மாத்திரத்தில், “அடடா, எப்படிப்பட்ட தேஜஸ்வியான பிரம்மசாரி. இவருக்கு பிட்சை போட்டால் சகல புண்யமும் உண்டாகும்!” என்று நினைத்தாள். ஆனால் போடத்தான் மணி அரிசி இல்லை. அவள் நல்ல உள்ளம் படைத்தவள். ‘இருக்கிறவர்களை'விட 'இல்லாதவர்'களுக்கே கொடுக்கிற எண்ணம் இருப்பதுண்டு. இவளுக்கு அப்படி இருந்தது. ‘அபர சூரியனாக நிற்கிற குழந்தைக்குக் கொடுக்கிறதற்கு இல்லையே. இப்படியொரு தெய்வக் குழந்தை நம் ஆத்து வாசலில் வந்து நிற்கிறபோது 'இல்லை போ!'ன்னு சொல்லுவாளா?' என்று மிகவும் வேதனைப்பட்டாள். என்னவாவது கிடைக்குமா என்று தேடித் தேடிப் பார்த்தாள்.

ஒரு புரையில் அழுகிப்போன நெல்லிக்காய் ஒன்று அகப்பட்டது. அந்தப் பிராம்மணன் பரம சாது. தோப்பில், உதிர்ந்து கிடக்கிறதுகளில் கூட நல்லதாக உள்ளதை எடுத்தால், “ஏண்டா, எடுத்தே?” என்று யார் சண்டைக்கு வருவார்களோ என்று இந்த அழுகலைப் பொறுக்கிக் கொண்டு வந்து வைத்திருந்தான். அதுவும் அவளுக்குத் தெரியாது. இப்போது தேடியதில் அகப்பட்டது. துவாதசியன்று போஜனத்தில் நெல்லி அவசியம் சேர்க்க வேண்டும். அதற்காக அவன் ‘சேமித்து' வைத்திருந்த நெல்லி.

“போயும் போயும் இதையா தெய்வக் குழந்தைக்குப் போடுவது?” என்று மனசு குமுறி வேதனைப்பட்டாள். ஆனாலும் “பவதி பிக்க்ஷாம் தேஹி” கேட்டுவிட்ட பிரம்மசாரியை வெறுமே அனுப்பப்படாதே என்பதால் வாசலுக்குப் போனாள். அங்கே மகாதேஜஸ்வியாக நிற்கிற பால சங்கரரைப் பார்த்துச் சொல்லி முடியாத வெட்கத்தோடும் அழுகையோடும் திரும்ப உள்ளே வந்தாள். வந்த பிறகு, ஐயோ, தெய்வக் குழந்தைக்கு ஒன்றும் போடாமலிருப்பதா?” என்று நினைத்து வாசலுக்குப் போனாள்.

இப்படி வாசலுக்கும் உள்ளுக்குமாகத் தவித்துத் தடமாடி விட்டு, கடைசியில், ‘அழுகலோ, மட்டமோ? நம்மிடம் இருப்பதைத் தானே நாம் கொடுக்க முடியும்?' என்று ஒரு மாதிரி மனசைத் தேற்றிக்கொண்டு அழுகல் நெல்லிக்கனியை ஆசார்யாளுக்குப் போட்டாள். தாரை தாரையாகக் கண்ணால் ஜலத்தைக் கொட்டிக்கொண்டு போட்டாள்.

பொருளில் தரித்திரமாயிருந்தாலும் அவளுடைய மனசு எத்தனை பெரியது, அது ஆகாசம் மாதிரி விரித்து அதிலிருந்து தன்னிடம் எத்தனை அன்பு பொங்குகிறது என்பதை ஆசார்யாள் கண்டுகொண்டார். அவர் மனசு அவளுக்காக உருகிற்று.

உடனே அவளுக்காக மகாலட்சுமியை பிரார்த்தித்து ஸ்தோத்ரம் பாடினார். அதுதான் “கனகதாரா ஸ்தவம்” என்பது. அந்தப் பேர் ஏற்பட்டதற்குக் காரணம் பின்னால் தெரியும். ஆசார்யாளின் வாக்கிலிருந்து வந்த முதல் ஸ்துதி இதுதான். அந்த பிராம்மண குடும்பத்தின் தாரித்திரியத்தைப் போக்கி, சம்பத்தை அநுக்கிரகிப்பதற்காக லட்சுமியை ஸ்துதித்தார்.

ஆகாசத்திலிருந்து அசரீரி வாக்குக் கேட்டது. “இந்த தம்பதி பூர்வ ஜன்மத்தில் பாவம் செய்தவர்கள். அதற்கு தண்டனைதான் தாரித்திரியம். பாவம் தொலைகிற காலம் வருகிற வரையில் இவர்களுக்கு சம்பத்தைத் தருவதற்கில்லை” என்று லட்சுமி அசரீரியாகச் சொன்னாள்.

ஆகாசத்திலிருந்து அசரீரி வாக்குக் கேட்டது. “இந்த தம்பதி பூர்வ ஜன்மத்தில் பாவம் செய்தவர்கள். அதற்கு தண்டனைதான் தாரித்திரியம். பாவம் தொலைகிற காலம் வருகிற வரையில் இவர்களுக்கு சம்பத்தைத் தருவதற்கில்லை” என்று லட்சுமி அசரீரியாகச் சொன்னாள்.

உடனே ஆசார்யாள், “இவர்கள் இப்போதிருப்பதை விட ஜாஸ்தியாக வேண்டுமானாலும் ஜன்ம ஜன்மாந்தரங்களாகப் பாவம் பண்ணியிருக்கட்டும். அப்படியிருந்தால் கூட, இத்தனை அன்போடு அகத்திலிருந்த ஒரே பக்ஷ்யமான நெல்லிக்கனியை இவள் எனக்குப் போட்டிருக்கிறாளே, இந்த அன்பும் தியாகமும் எத்தனை புண்யமானவை? சாப்பாட்டுக்கே இல்லாதவள் எனக்கு பிட்சை போட்ட பலன் எத்தனை பாபத்தையும் சாப்பிட்டுவிடுமே. அதோடு, எத்தனை கர்மாவானாலும் நான் பிரார்த்தித்ததால் போய்விடாதா?” என்று கேட்டார்.

“அம்மா மகாலட்சுமி, இவளுக்கு இருக்கிற மாதிரி உனக்கும் அன்பு நிறைய உண்டாச்சே. அதனால், ரொம்பக் கண்டிப்போடு நியாயம் மட்டும் வழங்காமல், அன்பைக் காட்டி அநுக்கிரகம் பண்ணு!” என்று பிரார்த்தித்தார்.

காக்கும் மந்திரம் காயத்ரீ ஜபம்

காயத்ரீ என்றால், “எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது” என்பது அர்த்தம்.

கானம் பண்ணவதென்றன்றால் இங்கே பாடுவதில்லை. பிரேமையுடனும் பக்தியிடனும் உச்சரிப்பது என்று அர்த்தம். யார் தன்னை பயபக்தியுடனும் பிரேமையுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரீ மந்திரம் ரக்ஷிக்கும். அதனால் அந்தப் பெயர் அதற்கு வந்தது. வேதத்தில் காயத்ரீயைப் பற்றிச் சொல்லும் பொழுது,

காயத்ரீம் சந்தஸாம் மாதா

என்று இருக்கிறது. சந்தஸ் என்பது வேதம். வேத மந்திரங்களுக்கெல்லாம் தாயார் ஸ்தானம் காயத்ரீ என்று இங்கே வேதமே சொல்கிறது. 24 அக்ஷரம் கொண்ட காயத்ரீ மந்திரத்தில் ஒவ்வொன்றும் எட்டெழுத்துக் கொண்ட மூன்று பதங்கள் இருக்கின்றன. அதனால் அதற்கு ‘த்ரிபதா' காயத்ரீ என்றே ஒரு பெயர் இருக்கிறது. இந்த ஒவ்வொரு பதமும் ஒவ்வொரு வேதத்தின் சாரம். அதாவது, ரிக், யஜுர், சாமம் என்ற மூன்று வேதங்களையும் இறுக்கிப் பிழிந்து கொடுத்த essence (சாரம்) காயத்ரீ மகாமந்திரம்

காயத்ரீ மூன்று வேதத்திலிருந்து ஒவ்வொரு பதமாக எடுத்தது என்று மனுவே சொல்கிறார். வேதத்தின் மற்றதையெல்லாம் விட்டுவிட்ட நாம் இதையும் விட்டால் கதி ஏது?

சாஸ்திரப் பிரகாரம் செய்ய வேண்டிய காரியங்களுக்குள் எல்லாம் முக்கியமான காரியம் காயத்ரீ ஜபம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x