Published : 19 Nov 2019 16:20 pm

Updated : 19 Nov 2019 16:20 pm

 

Published : 19 Nov 2019 04:20 PM
Last Updated : 19 Nov 2019 04:20 PM

சிக்கல் தீர்ப்பார் செல்லூர் திருவாப்புடையார்! 

thiruvappudaiyar

வி.ராம்ஜி

கார்த்திகையில், திருவாப்புடையாரை தரிசித்து மனதாரப் பிரார்த்தனை செய்தால், சகல செல்வங்களும் கிடைக்கப் பெறலாம். வீட்டின் தரித்திரம் விலகும். தடைப்பட்ட மங்கல காரியங்கள் நடந்தேறும் என்பது ஐதீகம்.


மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலுக்கு வடக்கே செல்லூர் எனும் பகுதியில், வைகைக் கரைக்கு அருகில் கோயில் கொண்டு, தன்னை நாடி வருவோர்க்கு அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் திருவாப்புடையார்.


பாண்டிய மன்னர் ஒருவர், தீவிர சிவபக்தர். ஒருநாள்கூட, சிவபூஜை செய்யாமல் உணவு எடுத்துக்கொள்ளமாட்டார்.


ஒருநாள், வேட்டையாட வனத்துக்குச் சென்றவர், அங்கே ஒரு மானைக் கண்டார். அதன்மீது அம்பு தொடுத்தார். ஆனால், அந்த மான்... அம்பு தப்பி ஓடியது. மானை விரட்டியபடி பின்தொடர்ந்தார் மன்னர். ஆனாலும் அவரால் மானைப் பிடிக்கமுடியவில்லை. பிறகு, ஓடி வந்த களைப்பில் மூச்சு வாங்கத் தவித்த மன்னரை, உணவு எடுத்துக் கொள்ளும்படி அமைச்சர்கள் தெரிவித்தனர்.


ஆனால் மன்னரோ, ‘சிவ பூஜை செய்யாமல் சாப்பிடமாட்டேன்’ என உறுதியுடன் தெரிவித்தார். பசியின் காரணமாக களைப்பும் மயக்கமும் அடைந்தார். செய்வதறியாது அமைச்சர்கள் தவித்தார்கள்.


தளபதிக்குச் சட்டென்று ஒரு யோசனை... மரத்துண்டு ஒன்றை எடுத்து தரையில் ஊன்றினார். அது நிலத்தில் அழுத்தமாக பதிந்து நின்றது. ‘அரசே! அதோ பாருங்கள், சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார் ஈசன்!’ என்று சொல்ல... அதைக் கண்டு பரவசமான மன்னர், அந்த மரத்துண்டை லிங்கமூர்த்தம் என்று நினைத்து, மனம் ஒன்றிப் பூஜைகள் செய்தார். பிறகு, திருப்தியுடன் சாப்பிட்டார்.


அதையடுத்து, சகஜ நிலைக்கு வந்த மன்னர், அவர் பூஜை செய்த இடத்தைப் பார்த்துவிட்டு, ‘என்ன இது... மரத்துண்டு போல் அல்லவா இருக்கிறது?’ என்று அதிர்ந்து போனார். பின்னர், ‘மரத்துண்டாக இருந்தால் என்ன... என் சிவன் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறான். இத்தனை காலமும் நான் செய்த பூஜைகள் மிகுந்த பக்தி சிரத்தையுடன் செய்யப்பட்டதாக நீ கருதினால், இதோ... இந்த மரத்துண்டில் எழுந்தருளி, காட்சி தருவாயாக!’ என்று பிரார்த்தித்தார். பிரார்த்தனை பலித்தது. மரத்துண்டில் லிங்க மூர்த்தமாகக் காட்சி தந்தார் இறைவன்.


அந்த இடத்தில், அழகிய ஆலயம் கட்டப்பட்டது. அதையடுத்து, கோயிலைச் சுற்றி மக்களும் குடியேறினர். மண்ணில் ஆப்பு அடித்ததுபோல் அழுத்தமாக நின்ற மரத் துண்டு லிங்க மூர்த்தமாகக் காட்சியளித்த இடம்... ஆப்பனூர் என்று அழைக்கப்பட்டது. சிவனின் பெயர் திருவாப்புடையார் ஆனது.


மதுரையம்பதியின் பஞ்சபூத தலங்களில் நீர் ஸ்தலம் என்றும், மதுரையில் சம்பந்தர் பெருமான் பாடிய 2-வது தலம் என்றும், பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட 4-வது கோயில் என்றும் போற்றப்படுகிறது திருவாப்புடையார் கோயில். மலைகளில் மேரு, பசுக்களில் காமதேனு, கொடையில் மேகம் என இருப்பதைவிட அளவிற் பெரிய திருவுளம் கொண்டவர் திருவாப்புடையார் என்பர். இவரைத் தரிசித்தால், மற்ற புண்ணிய தலங்களின் மூர்த்திகளைத் தரிசித்த பலன் உண்டு என்கிறது ஸ்தல புராணம். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீசுகந்த குந்தளாம்பிகை. ஸ்ரீஅனுக்ஞை விநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீகாசி விஸ்வநாதர், ஸ்ரீநடராஜர் ஆகியோரும் தனிச் சந்நிதிகளில் அருள்கின்றனர். ஸ்தல தீர்த்தம் இடப தீர்த்தம். ஸ்தல விருட்சம்- கொன்றைஎன்கிறது ஸ்தல புராணம்.


ஐப்பசி அன்னாபிஷேகம் இங்கே விசேஷம். விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பச்சரிசி சாதத்தை வடித்து, அதனை லிங்கத் திருமேனியில் சார்த்துவர். கருகுமணியால் காதணி, கழுத்தில் புடலங்காய் மாலை என அணிந்தபடி காட்சி தரும் லிங்கத் திருமேனியை தரிசிக்கலாம். பூஜை முடிந்ததும் லிங்கத் திருமேனியின் சிரசில் உள்ள சாதத்தை எடுத்து வைகையில் கரைப்பார்கள். இதனால், அந்த நதி இன்னும் புண்ணியம் பெறுவதாக ஐதீகம். மீதமுள்ள சாதத்தைப் பிரசாதமாக வழங்குவர். இந்தப் பிரசாதத்தைச் சாப்பிட, வியாபாரம், விளைச்சல் பெருகும். குபேர யோகம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


அதேபோல், கார்த்திகை மாதத்தில் திருவாப்புடையார் கோயிலில் சிறப்பு பூஜைகளும் விசேஷ வழிபாடுகளும் நடைபெறும். கார்த்திகை சோம வாரத்தில் (திங்கட்கிழமை) சிவனாருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். கார்த்திகையில் திருவாப்புடையாரை வணங்கினால், சகல செல்வங்களும் வந்துசேரும். வீட்டின் தரித்திரம் விலகும். தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும். சிக்கல்களையெல்லாம் தீர்த்தருள்வார் திருவாப்புடையார்!


சிக்கல் தீர்ப்பார் செல்லூர் திருவாப்புடையார்!திருவாப்புடையார்மதுரை திருவாப்புடையார்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author