

ஆடிக் கிருத்திகை ஆகஸ்ட் 8
தந்தை சிவனுக்குப் பிரணவ மந்திரத்தை முருகன் போதித்த இடம் சுவாமிமலை. இந்த புராணச் செய்தியினை மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் கும்பகோணம் தல புராணம் நூலில் சுவாமிமலைப் படலத்தில் எழுதியுள்ளார்.
மலை மீது முருகன்
சுவாமிமலைத் தலத்தில் முருகன் குருவாக இருப்பதால் மலை மீது அமர்ந்து அருள்கிறார். மலைகளே இல்லாத தஞ்சாவூர் பகுதியில் ஆறுபடை வீடுகளுள் ஒன்றான சுவாமிமலை அமைந்துள்ளது. இங்குள்ள மலை செயற்கையானது. பாறைகளை அடுக்கி அமைக்கப்பட்டிருக்கும் கட்டுமலை. மலையின் கீழ்ப் பகுதியில் ஈசனும் பார்வதியும் பக்தர்களுக்குக் காட்சி அருள்கிறார்கள். சுவாமிநாதனைத் தரிசிக்க 60 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
60 தமிழ் வருடங்களின் பெயரில் படிகள் அமைந்துள்ளன. பிரபவ முதல் அட்சய ஈராக உள்ள தேவர்களே படிகளாக உறைவதாகத் தல புராணம் சொல்கிறது. உச்சிப் பிரகாரத்தில் உறையும் நேத்திர விநாயகர் சிறப்புப் பெற்றவர். நேத்திரம் என்றால் கண். பார்வை இழந்த ஒருவர் இந்த விநாயகரை வழிபட்டுப் பார்வை பெற்றதனால் இந்தப் பெயர் பெற்றதாகப் புராணம் சொல்கிறது.
சுவாமிமலை முருகனுக்கு மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை விழா சிறப்பாக நடைபெறுகிறது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் விசேஷமானது.
அலங்கார அற்புதம்
மூலவரான ஆறுமுகப் பெருமான் ஆபரண அலங்காரத்தின் போது ராஜகோலத்தினராகவும், சந்தன அலங்காரத்தின்போது பால குமாரனாகவும், விபூதி அலங்காரத்தின்போது முதியவர் கோலத்திலும் காட்சி தருவது கண்கொள்ளாக் காட்சி. பரமனுக்குப் பிரணவத்தின் பொருள் உரைத்த பாலகனாகிய முருகனை வழிபட்டால் ஞானம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.