Published : 17 Nov 2019 12:04 pm

Updated : 17 Nov 2019 12:04 pm

 

Published : 17 Nov 2019 12:04 PM
Last Updated : 17 Nov 2019 12:04 PM

கார்த்திகை மாத சிறப்புகள்

karthigai-month

வி.ராம்ஜி

கார்த்திகை மாதத்தில், பல சிறப்புகளும் மகிமைகளும் நடந்திருக்கின்றன என்கிறது புராணம்.எனவே, கார்த்திகை மாதத்தில், ஆலயங்களுக்குச் செல்வதும் வீட்டில் தினமும் காலையும் மாலையும் விளக்கேற்றி வைத்து வழிபடுவதும் மிகுந்த நன்மைகளைத் தந்தருளும். இறை சக்திகளின் சாந்நித்யம் நம்மையும் நம் வீட்டையும் சூழ்ந்து நம்மைக் காக்கும் என்பது ஐதீகம்.


சரி... கார்த்திகை மாதச் சிறப்புகளைப் பார்ப்போமா?


* கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜை செய்ய வேண்டும். தீப தானம் செய்யலாம். கோயிலுக்கு விளக்கேற்ற எண்ணெய் வழங்கலாம். வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபடலாம். குறைவற்ற மகிழ்ச்சியும் செல்வமும் நிச்சயம் என்கின்றன புராணங்கள்.


* ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா இருவருக்கும் ஜோதிப் பிழம்பாய், சிவபெருமான் திருக்காட்சி அளித்த நாள்... கார்த்திகை பௌர்ணமி!
* கார்த்திகை மாத துவாதசி நாளில், அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். எனவேம், துவாதசி நாளில், முடிந்த அளவு உணவுப் பொட்டலம் வழங்குங்கள்.


* கடும் தவம் மேற்கொண்ட அன்னை உமையவள், கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் இறைவனது இடபாகத்தைப் பெற்றாள். அப்படி, ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த தலம் திருவண்ணாமலை என்கிறது அருணாசல புராணம்.


* கார்த்திகை மாத (பிருந்தாவன) துவாதசி நாளில், துளசிதேவி மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும், துளசியால் மகாவிஷ்ணுவை அர்ச்சித்து அவருக்கு துளசி மாலை சார்த்தி வழிபட்டு வருவது ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு துளசி தளத்துக்கும் அஸ்வமேத யாகம் செய்த பலன் உண்டு என்பர். கழுத்தில் துளசி மாலை அணிபவர்களிடம், மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.


* மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதிதேவர்கள் பெற முடியாத பாக்கியத்தையும் சாமானிய பக்தர்கள் பெறலாம் என்பதாக ஐதீகம்.


* மகாவிஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டு, பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.


* தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேருவதற்காக மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு, சிவபெருமானின் அருளைப் பெற்ற திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம். இங்கு உள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது.
* நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி 12 வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும் என்பது ஐதீகம்!


* கார்த்திகை மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் புண்ணிய நதிகளில் நீராடுவது மிகவும் மகத்துவம் வாய்ந்தது. அப்படி நீராடி, திருமாலை வணங்கினால், பிரம்மஹத்தி தோஷம், கள் உண்ட பாவம், திருடுவதால் உண்டான பாவம் மற்றும் பிறருக்கு மனச் சஞ்சலம் தந்ததால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் அறிவுறுத்துகிறது.கார்த்திகை மாத சிறப்புகள்கார்த்திகை மாதம்மகாவிஷ்ணுசிவ வழிபாடுஅர்த்தநாரீஸ்வரர்திருமால் வழிபாடுதுளசி மகிமை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author