Published : 15 Nov 2019 01:06 PM
Last Updated : 15 Nov 2019 01:06 PM

காவிரியில்... துலா ஸ்நானம் 

வி.ராம்ஜி


ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்பார்கள். எந்த மாதத்துக்கும் இல்லாத சிறப்பு, ஐப்பசிக்கு உண்டு. இந்த மாதத்தில் காவிரி நதி மிகவும் போற்றுதலுக்கு உரிய நதியாகச் சொல்லப்படுகிறது.


காவிரி நதியில், ஐப்பசி மாதத்தில் மூன்றரை கோடி புண்ணிய தீர்த்தங்கள் கலப்பதாகச் சொல்கின்றன ஞானநூல்கள். எனவே, ஐப்பசி மாதம் எனப்படும் துலா மாதத்தில், காவிரியில் நீராடுவது அத்தனைத் தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணியப் பலன்களைக் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


இந்த மாதத்தில், காவிரியில் நீராடினால், முகத்தில் தேஜஸ் கூடும். புத்தியில் தெளிவு பிறக்கும். பித்ருக்கள் சாபம் நீங்கப் பெறலாம். குடும்பத்தில் அதுவரை இருந்த குழப்பங்களும் பிரிவுகளும் நீங்கும். தம்பதி இடையே கருத்து ஒற்றுமை மேலோங்கும்.


மேலும் துலா ஸ்நானம் செய்யும் போது, தம்பதியாக நின்று காவிரியில் நீராடுவது இன்னும் பலன்களைத் தந்தருளும் என்பதாக ஐதீகம். வீட்டின் தரித்திரம் விலகும். ஐஸ்வரியம் பெருகும். கடன் தொல்லையில் இருந்து மீளலாம். வாரிசு இல்லாத தம்பதிக்கு, பிள்ளை பாக்கியம் ஸித்திக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


காவிரியில் நீராடும் போது, ஸ்நான சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும் வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள். மனதுக்குள் உங்கள் பெயரையும் கோத்திரத்தையும் சொல்லி நீராடுவது விசேஷம்.


காவிரியில் ஒரேயொரு நாள் நீராடினால், கங்கையில் ஆயிரம் முறை நீராடிய புண்ணியம் கிடைக்கும். தீராத நோயைத் தீர்க்கவல்லது இந்த புண்ணிய நீராடல் என சிலாகிக்கிறது சாஸ்திரம்.


மயிலாடுதுறையில் உள்ள காவிரிக்கரையில் துலா ஸ்நானக் கட்டம் என்றே படித்துறை உள்ளது. இங்கே வந்து நீராடுவது விசேஷம்தான் என்றாலும் காவிரி பாய்ந்தோடி வருகிற எந்த ஊரில் வேண்டுமானாலும் நீராடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x