Published : 11 Nov 2019 05:04 PM
Last Updated : 11 Nov 2019 05:04 PM

அன்னமிடும் சிவனுக்கு அன்னாபிஷேகம்! 

வி.ராம்ஜி

ஐப்பசி மாத முழுநிலவு நாளில் முதலில் ஐந்து வகைப் பொருட்களால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, பின்னர் நன்கு வடித்து ஆறவைத்த அன்னத்தைக் கொண்டு அன்னாபிஷேகம் செய்யப்படும். ஐப்பசி பெளர்ணமியில் நடைபெறும் இந்த அன்னாபிஷேகம் பல கோயில்களில் இன்றைக்கும் (11.11.19) சில கோயில்களில் நாளைய தினமும் (12.11.19) நடைபெறுகிறது.

பொதுவாகவே, சிவலிங்கத் திருமேனிக்கு அன்னாபிஷேகமும் அன்னத்தால் அலங்காரமும் செய்வது வழக்கம். அதேசமயம் அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும் காய்கறி, கனி வகைகளையும் கொண்டு அலங்காரம் செய்வதும் சில கோயில்களில் உள்ளது இப்போது!
சிவலிங்கத் திருமேனியின் மேலிருந்து அன்னத்தை வைத்துக் கொண்டே வருவார்கள். சிவலிங்கத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். கீழ்ப்பகுதி - பிரம்ம பாகம். நடுப்பகுதி - விஷ்ணு பாகம். இதுவே ஆவுடை. மேற்பகுதி பாணம் - சிவபாகம். அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியின் எல்லா பாகங்களுக்குமாக முழுமையாகவே செய்யப்படுகிறது. .
இந்த அபிஷேகம் மட்டும்தான் இரண்டு நாழிகை நேரம், அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் யஜுர் வேத பாராயணம், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும். நாழிகை நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள். பின்னர் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு வழக்கம் போல் அபிஷேகம் நடைபெறும்.
ஒவ்வொரு அன்னப் பருக்கையும் சிவலிங்கம் என்கிறது சிவபுராண நூல்கள். இந்த அன்னப் பருக்கையின் ஒன்றை மட்டும் உட்கொண்டாலே போதும்... இந்த சிவப்பிரசாதத்தை உட்கொண்டால், தீராத நோயும் தீரும். ஆரோக்கியம் கூடும். குழந்தை இல்லையே என ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
எப்போதும் மனிதனை மட்டுமே முன்னிறுத்தி எதையும் இறைவனிடம் வேண்டுவதில்லை. எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதனுக்குத் தேவையான உணவு தடையின்றிக் கிடைக்கும் என்பதை சாஸ்திரம் வலியுறுத்துகிறது.
அதனால்தான் அன்னாபிஷேகப் பிரசாதம் நீரில் வாம் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அபிஷேக சாதத்தின் ஒரு பகுதியை, கோயில் குளத்தில் முதலில் போடுவது வழக்கம். அதன் பிறகுதான் பக்தர்களுக்கு!
சாஸ்திரப் படி, வெறும் அன்னத்தை சாப்பிடக்கூடாது என்பதால், அந்த சாதத்துடன் சாம்பார் அல்லது தயிர் சேர்த்து பிரசாதமாக எல்லோருக்கும் வழங்கப்படுகிறது.
அன்னாபிஷேகத்தில் கலந்துகொள்ளுங்கள். அன்ன அலங்காரத்தில் அன்னமிடும் சிவபெருமானைத் தரிசியுங்கள். அன்னப் பிரசாதம் பெற்று, சிவனருளைப் பெறுங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x