Published : 08 Nov 2019 09:45 AM
Last Updated : 08 Nov 2019 09:45 AM

சகல பாவமும் போக்கும் சனிப் பிரதோஷம்; மறக்காமல் செய்யுங்கள் சிவ தரிசனம்

வி.ராம்ஜி


சனிப்பிரதோஷத்தன்று சிவனாரை தரிசனம் செய்து வணங்கினால், சகல பாவங்களும் நீங்கும். தடைகள் அனைத்தும் விலகும். வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும் என்பது ஐதீகம். நாளை சனிக்கிழமை 9.11.19 பிரதோஷம். மறக்காமல் சிவதரிசனம் செய்யுங்கள்.
சிவ வழிபாட்டில், மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது பிரதோஷ வழிபாடு. ஒவ்வொரு அமாவாசைக்கு முன்னதான மூன்றாம் நாளும் பெளர்ணமிக்கு முன்னதான மூன்றாம் நாளும் பிரதோஷம் என்பது வரும். ஆக, மாதத்துக்கு இரண்டு பிரதோஷங்கள் உண்டு.
பிரதோஷ வேளை என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த வேளையில், சிவாலயங்களில், சிறப்பு வழிபாடுகளும் அபிஷேகங்களும் ஆராதனைகளும் விமரிசையாக நடைபெறும். அப்போது சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷ பூஜைகளும் அலங்காரங்களும் நடைபெறும்.
ஒவ்வொரு கிழமையில் பிரதோஷம் வருவதும் அந்தக் கிழமையில் வருகிற பிரதோஷத்தாலான நன்மைகளும் கணக்கிலடங்காதவை. இதுகுறித்து சிவாச்சார்யர்கள், சிலாகித்துச் சொல்லியிருக்கிறார்கள்.
திங்கட்கிழமையன்று வரும் பிரதோஷத்தை சோம வார பிரதோஷம் என்பார்கள். திங்கள் என்றால் சந்திரன். சந்திரனைப் பிறையென சூடியவன் சிவபெருமான். சந்திரனுக்கு சோமன் என்றொரு பெயரும் உண்டு. அதனால்தான் திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். சிவனாருக்கு சோமநாதன் என்றெல்லாம் பெயர் அமைந்தன.
இதேபோல் ஒவ்வொரு கிழமையன்று வரும் பிரதோஷமும் மகத்துவம் வாய்ந்தவை. அந்த வகையில், சனிக்கிழமை அன்று வருகிற பிரதோஷம் ரொம்பவே உன்னதமானது. ஒரேயொரு சனிக்கிழமையன்று வருகிற பிரதோஷத்தின் போது, சிவனாரைத் தரிசனம் செய்தாலே, நம் இந்த ஜென்மத்துப் பாவங்களெல்லாம் தொலைந்துவிடும் என்பது ஐதீகம். ஐந்து சனிப் பிரதோஷ தரிசனம் முந்தைய பிறவியில் செய்த பாவங்களையும் போக்கவல்லது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
நாளை 9.11.19 சனிக்கிழமை. பிரதோஷமும் கூட. சனிப்பிரதோஷ வேளையில், மாலையில் அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் செல்லுங்கள். சிவனாருக்கும் நந்திதேவருக்கும் அபிஷேகப் பொருட்கள் வாங்கிக் கொடுங்கள். செவ்வரளி, அருகம்புல், வில்வம் முதலானவற்றை வழங்குங்கள். அப்போது நடைபெறும் அபிஷேகத்தையும் அதன் பின்னர் சுவாமிக்கும் நந்திதேவருக்கும் செய்யப்படும் அலங்காரத்தையும் கண்ணாரத் தரிசியுங்கள். மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
முடிந்தால், எலுமிச்சை சாதம் அல்லது தயிர்சாதம் அன்னதானம் செய்யலாம். அல்லது ஒரு நான்குபேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்கலாம். சனிப் பிரதோஷ தரிசனத்தால், சகல பாவங்களும் நீங்கிவிடும். வீட்டின் தரித்திர நிலை விலகும். சுபிட்சம் குடிகொள்ளும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நடந்தேறும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x