

வி.ராம்ஜி
மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு ஐப்பசி சதய விழா இன்று தஞ்சை பெரிய கோயிலில் சிறப்புற நடைபெறுகிறது.
மன்னர்களில் தனித்துவத்துடன் திகழ்ந்தவன் ராஜராஜ சோழன். ஊரை நிர்மாணித்தான். குளங்களை வெட்டினான். சாலை வசதிகள் மேம்படுத்தினான். மக்களை கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்தான். ஆன்மிகம் செழிக்க, ஆலயங்கள் பலவும் கட்டினான்.
இன்னும் முக்கியமாக, செங்கல் கட்டுமானக் கோயில்கள் பலவற்றையும் கற்றளிக் கோயிலாக்கினான். சோழ தேசத்தை விஸ்தரித்த பெருமைக்கு உரிய மன்னன். எல்லாவற்றையும் விட முக்கியமாக, தஞ்சைத் தலைநகரில், பெருவுடையார் கோயிலை எழுப்பினான். கிட்டத்தட்ட, ஆறு வருடங்களில் பெரியகோயிலைக் கட்டிமுடித்தான்.
இன்றைக்கும்... ஆயிரம் வருடங்களைக் கடந்தும் அழகும் கலையும் ஒருங்கிணைந்து கம்பீரமாகக் காட்சி தந்துகொண்டிருக்கிறது தஞ்சைப் பெரியகோயில். கோயிலுக்கு ஒரு செப்புக்காசு கொடுத்தவர்களைக் கூட விடாமல், அவர்களின் பெயர்களையெல்லாம் கல்வெட்டில் பொறித்த மன்னன், ராஜராஜனாகத்தான் இருக்கும்.
விவசாயம் செழிக்கவும் வியாபாரம் மேம்படவும் என நாலாவிதமாகவும் சிந்தித்து, செயல்பட்ட மன்னன் என்று ராஜராஜனைக் கொண்டாடுகிறார்கள் கல்வெட்டு ஆய்வாளர்கள்.
ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில் பிறந்த ராஜராஜ சோழன், ஓர் ஐப்பசி சதயத்தில்தான் முடிசூடிக்கொண்டான். இன்று ஐப்பசி சதயம். தஞ்சைத் தரணியில் கோலாகலமாக நடந்துகொண்டிருக்கிறது ஐப்பசி சதய விழா.
ராஜராஜ சோழப் பெருந்தகையைப் போற்றுவோம். தரணியில் சூரிய சந்திரர்கள் உள்ளவரை அவனின் புகழும் நிலைத்திருக்கும்... அந்தத் தஞ்சை பெரியகோயிலைப் போலவே!