Published : 23 Jul 2015 12:34 PM
Last Updated : 23 Jul 2015 12:34 PM

வார ராசி பலன் 23-07-2015 முதல் 29-07-2015 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும், 10-ல் சூரியனும் புதனும், 11-ல் குருவும் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். முக்கியமான எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சீராகும். வாழ்க்கை வசதிகள் பெருகும். மன உற்சாகம் பெருகும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும்.

பணப் புழக்கம் திருப்தி தரும். வர வேண்டிய பணம் வசூலாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். விருந்து உபசாரங்களில் ஈடுபாடு கூடும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். வியாபாரம் பெருகும். பிள்ளைகள், வாழ்க்கைத்துணை, தந்தையால் அனுகூலம் உண்டாகும். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் துறை லாபம் தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 23 (பிற்பகல்), 27 (முற்பகல்), 29 (பிற்பகல்).

திசைகள்: கிழக்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், பச்சை, இள நீலம், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 5, 6, 7.

பரிகாரம்: துர்கா கவசம் படிப்பது நல்லது.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 11-ல் ராகு உலவுவது விசேஷமாகும். இதர கிரகங்களின் சஞ்சாரம் கோச்சாரப்படி சிறப்பாக இல்லாததால் சிறுசிறு இடர்பாடுகள் அவ்வப்போது ஏற்படவே செய்யும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. எக்காரியத்திலும் வேகத்தைக் குறைத்துக்கொண்டு, விவேகத்தைக் கூட்டிக்கொள்வது அவசியம். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். ஆசை, அபிலாஷைகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.

பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை. உங்கள் நலனிலும், பிள்ளைகள் நலனிலும் கவனம் தேவை. மறைமுக நோய்நொடிகள் ஏற்படும். வேற்று மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உதவுவார்கள். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் வளர்ச்சி பெறும். தோல் பொருட்கள், பயணம் தொடர்பான பணிகள், கறுப்பு நிறப் பொருட்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 23 (முற்பகல்), 27 (முற்பகல்), 27 (பிற்பகல்).

திசைகள்: தென்மேற்கு, கிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 4.

பரிகாரம்:

செவ்வாய், முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசி அதிபதி குரு 9-ல் இருப்பது விசேஷமாகும். புதன், சுக்கிரன், சனி, ராகுவின் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் அதிகம் பயன்படும். தொழிலாளர்கள், உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.

பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். முக்கியமான எண்ணங்கள் வார முன்பகுதியில் நிறைவேறும். வாரப்பின்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை தேவை. அரசியல், நிர்வாகம், பொறியியல் சம்பந்தமான இனங்களைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் காரியமாற்றுவது நல்லது. வியாபாரிகள், கலைஞர்கள், மாதர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 23, 27 (முற்பகல்), 29 (பிற்பகல்).

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: புகை நிறம், வெண்மை, கறுப்பு, இளநீலம், பொன் நிறம்.

எண்கள்: 3, 4, 5, 6, 8.

பரிகாரம்:

சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. சிவ சக்தி வழிபாடு நலம் தரும்.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 6-ல் செவ்வாய், 8-ல் சுக்கிரன், 10-ல் சனி உலவுவதால் எடுத்த காரியங்கள் இனிது நிறைவேறும். எதிர்ப்புகளின் கரம் வலுக்குறையும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இன்ஜினீயர்களது நிலை உயரும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும்.

நிலபுலங்கள் லாபம் தரும். புதிய சொத்துகளும் சேரும். சமுதாய நல முன்னேற்றப் பணியாளர்களுக்கு நற்பெயர் கிட்டும். 7-ல் சூரியனும் புதனும் இருப்பதால் கணவன் மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் பழகுவது நல்லது. குரு 8-ல் இருப்பதால் பொருளாதாரம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். மக்கள் நலனில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்களால் சில இடர்பாடுகள் உண்டாகும். சனி பலம் இருப்பதால் உழைப்பு வீண்போகாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 23, 27 (முற்பகல்).

திசைகள்: மேற்கு, வடமேற்கு, தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, நீலம், மெரூன்.

எண்கள்: 6, 7, 8, 9.

பரிகாரம்:

குரு, தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் புதனும், 7-ல் குருவும் உலவுவது சிறப்பு. நிர்வாகத் திறமை வெளிப்படும். முக்கியஸ்தர்களது தொடர்பு பயன்படும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். அரசுப் பணியாளர்களது கோரிக்கைகள் நிறைவேறும். நவீன விஞ்ஞானத் துறைகள் ஆக்கம் தரும். மருத்துவர்களது நிலைமையில் வளர்ச்சி தெரியவரும்.

எழுத்து, கணிதம், பத்திரிகை துறை ஆக்கம் தரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். பெரியவர்கள், தனவந்தர்களின் தொடர்பு பயன்படும். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் ஏற்படும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்குப் பங்குதாரர்களால் அதிக நன்மைகள் உண்டாகும். 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் உலவுவதால் புதியவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். பேச்சிலும் உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு தேவை. பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது அவசியம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 27 (முற்பகல்), 29 (பிற்பகல்).

திசைகள்: வடக்கு, மேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 8.

பரிகாரம்:

ராகுவுக்காக துர்கை, கேதுவுக்காக விநாயகரை வழிபடவும்.

மீன ராசி வாசகர்களே

கோச்சாரப்படி எந்த ஒரு கிரகமும் சாதகமாக உலவவில்லை. இதனால் ஏமாற்றங்கள், இழப்புகள், துன்பங்கள், துயரங்கள் கூடவே செய்யும். மனதில் வெறுப்பும் விரக்தியும் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். பொருளாதாரப் பிரச்சினைகள் சூழும். சுப காரியங்கள் நிகழத் தடைகளும் குறுக்கீடுகளும் உண்டாகும். மன அமைதி குறையும். வீண் செலவுகள் கூடும். விரும்பதகாத இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும்.

பயணத்தால் சங்கடம் உண்டாகும். எதிர்ப்புகள் அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது. ஜனன கால ஜாதகப்படி தற்சமயம் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் கவலைப்படத் தேவையில்லை. மற்றவர்கள் இறைவழிபாட்டிலும் கிரக வழிபாட்டிலும் முழு நம்பிக்கையுடன் ஈடுபட்டால் சங்கடங்கள் குறையும். பெரியவர்கள், மகான்களை வணங்கி, அவர்களது ஆசிகளைப் பெறுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 23 (பகல்), 27 (முற்பகல்), 29 (பிற்பகல்).

திசைகள்: வடக்கு. வடமேற்கு.

நிறங்கள்: பச்சை, வெண்மை.

எண்கள்: 2, 5.

பரிகாரம்: நவக்கிரக ஜபம் செய்யவும். கோளறு திருப்பதிகம் வாசிப்பது சிறப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x