

வி.ராம்ஜி
சாபவிமோசனம் பெற்ற குரு பகவான், நம் சாபங்களையும் போக்கி, பாவங்களையெல்லாம் நீக்கி அருளுகிறார்.
சென்னைக்கு அருகில் திருவலிதாயம் என்ற ஊர் உள்ளது என்று சொன்னால் எவருக்கும் சட்டென்று தெரிந்துவிடாது. ஆனால் பாடி என்று சொன்னால், ஆமாம் பாடி என்று ரூட் சொல்லுவார்கள். அந்த பாடி எனும் இப்போதைய பகுதிதான் திருவலிதாயம் என்று அழைக்கப்படுகிறது.
பாடி என்கிற திருவலிதாயத்தில்தான் அமைந்திருக்கிறது அற்புதமான திருத்தலம்.
சென்னை பாடி பகுதியில், டி.வி.எஸ். லூகாஸ் பஸ் ஸ்டாப்புக்கு அருகில் அமைந்துள்ளது திருவலிதாயம் எனும் திருத்தலம். இந்தக் கோயிலில், மேற்கு நோக்கியபடி, தனிச்சந்நிதியில் இருந்தபடி காட்சி தந்து, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார் குரு பகவான்.
ஓர் தவறு செய்துவிட்டு, தன் சகோதரரின் மனைவியான மேனகையிடம் சாபம் வாங்கி நொந்துபோனார் குரு பகவான். சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவதற்காக, சிவனாரின் உத்தரவுக்கு இணங்க, இந்தத் தலத்துக்கு வந்து சிவனாரை நோக்கி கடும் தவமிருந்தார் குரு பகவான். பின்னர், சிவனருளைப் பெற்றார். சாப விமோசனம் பெற்றார்.
இங்கேயே தங்கி, ஆலயத்துக்கு வருவோருக்கெல்லாம் தன் பார்வையால் அருள் வழங்க திருவுளம் கொண்டார் குரு பகவான். இன்றளவும் அருள்பாலித்து வருகிறார்.
திருஞானசம்பந்தர், வள்ளலார், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆகியோர் இங்கு வந்து பாடிப் போற்றியுள்ளனர்.
எந்த தோஷத்துடன் ஒருவர் தவித்து வந்தாலும் இங்கு வந்து, குருபகவானை தரிசித்தால் போதும்... அவர்களின் தோஷங்களையெல்லாம் போக்குவார். சந்தோஷம் பூக்கச் செய்வார் என்கிறார்கள் பக்தர்கள்.
வியாழக்கிழமைகளிலும் குருப்பெயர்ச்சியின் போதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் லட்சக்கணக்கான பக்தர்களும் இங்கு வந்து குரு பகவானை தரிசித்துச் செல்கின்றனர். தனிச்சந்நிதியில் குடிகொண்டிருக்கும் குரு பகவான் மேற்குப் பார்த்து காட்சி தருகிறார். இதுவும் விசேஷம் என்கின்றனர்.
பாடி திருவலிதாயம் வாருங்கள். குரு பகவானைத் தரிசியுங்கள். இறையருளும் குருவருளும் பெற்று வாழுங்கள்!