

வி.ராம்ஜி
வராஹியைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால், தோஷங்கள் அனைத்தையும் விலக்கி, காரியத்தில் வெற்றியை த் தந்தருள்வாள். தீயசக்திகளை விரட்டுவாள் என்கின்றனர் பக்தர்கள்.
வெள்ளிக்கிழமைகளில் வாராஹியை வழிபடுவதால் மாங்கல்ய பலம் பெருகும். வியாபாரம் லாபம் தரும் என்பது ஐதீகம். நோயுற்றவர்கள் தங்களின் நோய் நீங்கி நலம் பெற ஞாயிற்றுக்கிழமைகளில் வாராஹியை வழிபட்டால், ஆரோக்கிய வாழ்வு நிச்சயம். மனநலம் குன்றியவர்கள், வீண் கவலை, பயம், குழப்பம் என ஆளானவர்கள் திங்கட்கிழமைகளில் வழிபட்டால் பலன்கள் கிடைக்கப் பெறலாம்.
நிலம், வீடு, வழக்கு தொடர்பான பிரச்சினைகளில் இருப்பவர்கள், செவ்வாய்க்கிழமையில் வழிபட்டு பிரார்த்தனை செய்வது சிறப்பு மிக்கது. கடன் தொல்லையால் கலங்கித் தவிப்பவர்கள் புதன் கிழமைகளில் வழிபட்டால், கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். குழந்தைப்பேறு மற்றும் கல்வியில் தேர்ச்சி பெற வியாழக்கிழமைகளில் வாராஹி தேவியை வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.
சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடியில் அமைந்துள்ள தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் அம்பாள் சந்நிதி எதிரிலுள்ள தூண் ஒன்றில், சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹியின் புடைப்புச் சிற்பம் அமைந்திருக்கிறது. இங்கு வந்து, தூணில் உள்ள வாராஹியை வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள்.
மிக எளிய முறையில் வழிபாடு செய்தாலே மனமிரங்கி வரங்கள் அளித்திடும் தன்மை கொண்டவள் வாராஹி தேவி.
வாராஹியின் பனிரெண்டு திருநாமங்களைச் சொன்னாலே அம்பிகை சகல காரியத்திலும் துணை நின்று அருளுவாள். அளவற்ற பொருளையும் ஞானத்தையும் வழங்குவாள் என்கிறார்கள் ஸாக்த உபாஸகர்கள்.
வராஹியின் 12 திருநாமங்கள்:
1. பஞ்சமீ 2. தண்டநாதேஸ்வரி 3. ஸங்கேதா 4. ஸமயேஸ்வரி 5. ஸமயஸங்கேதா 6. வாராஹி 7. போத்ரிணி 8. சிவா 9.வார்த்தாளி 10. மஹாசேனா 11. ஆக்ஞா சக்ரேஸ்வரி 12. அரிக்னி.
ஸ்ரீ நவாவரண பூஜையில் வராஹி தேவியின் மேற்கண்ட பனிரெண்டு நாமாவளிகள் கொண்ட அர்ச்சனையை செய்யவேண்டும். அப்போது செவ்வரளி முதலான செந்நிற மலர்களை அன்னைக்குச் சூட்டுவது கூடுதல் மகத்துவம் கொண்டது.
பில்லி, சூனியம், கண் திருஷ்டி முதலான தீயசக்திகளை நெருங்கவிடாமல் விரட்டியடிப்பவள் என வாராஹி மாலா எனும் நூல் போற்றுகிறது.
சாரதா (புரட்டாசி) நவராத்திரி என்றால் கொலு எனும் சிறப்பு அமைப்பு கொண்டு அம்பிகையை வழிபடுவது போல, ஆஷாட நவராத்திரியில் தானியங்கள் கொண்டு பூமியில் கோலங்கள் (ரங்கோலி) இட்டு வழிபடுவது சிறப்பு.
கோலம் போடுவது என்பது அம்பிகையைஆத்மார்த்தமாக வரவேற்கும் வடிவம். லக்ஷ்மியின் வருகை தினமும் நிகழ வேண்டும், நித்யம் வீட்டில் வாசம் செய்யவேண்டும் என்பதற்காகத்தான் அதிகாலையில் வாசலில் கோலமிட்ட வீட்டில் அம்பிகை மிகுந்த கனிவுடனும் சுபிட்சத்தை நல்கவும் எழுந்தருள்கிறாள் என்பது ஐதீகம்!