ராஜராஜ சோழனும் வாராஹி வழிபாடும்!  

ராஜராஜ சோழனும் வாராஹி வழிபாடும்!  
Updated on
1 min read

வி.ராம்ஜி

ஸ்ரீவாராஹியின் அருள் பெற்றே ராஜராஜ சோழன் தனது ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார் என்கிறது வரலாறு.ஸ்ரீவாராஹிக்கு உகந்ததாக இரவு நேர வழிபாட்டைச் சொல்கின்றன நூல்கள். எனவே, மாலை வேளையில், தஞ்சை பெரிய கோயிலில் உள்ள வாராஹியை தரிசித்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும் என்கிறார்கள். இந்தத் தலம் தவிர, தமிழகத்தில் வாராஹியின் சந்நிதியைக் காண்பதுஅரிது!

வாராஹியின் சந்நிதியில் கண்ட அரிய காட்சி அன்னைக்கு பூமிக்குக் கீழ் விளையும் பனங்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்ற பலவகைக் கிழங்கு வகைகளை படைத்துப் பிரசாதமாக வாங்கிச் செல்வது விசேஷம் என்கிறார்கள் பக்தர்கள்.

திருவாணைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலை சக்தி பீடங்களுள் ஒன்றாகவும் ஸ்ரீ வாராஹி பீடமாவும் போற்றுகிறது ஸ்தல புராணம். திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுவோர், எதிரிகளால் பாதிப்படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராஹி அம்மனை வழிபட்டால் வெற்றி நிச்சயம். பலன் உண்டு என்பது உறுதி!

வராக (பன்றி) முகம், மூன்று கண்கள் மற்றும் எட்டு திருக்கரங்களுடன் திகழ்பவள் ஸ்ரீ வாராஹி. தன் திருக்கரங்களில் சங்கு, சக்கரம், கட்கம் (கத்தி), உலக்கை, கலப்பை, உடுக்கை மற்றும் அபய – வரத முத்திரைகளுடன் காட்சி தருபவள். நீல நிற மேனியளான இந்த தேவி சிவப்பு நிற ஆடை உடுத்தி, சந்திர கலை தரித்த நவரத்தினக் கிரீடம் அணிந்துகொண்டு, சிம்ம வாகனத்தில் வீற்றிருக்கிறாள் என புராணங்கள் விவரிக்கின்றன.


“நான்கு திருக்கரங்களும் இரண்டு கண்களும் கொண்டவளாக, கருப்பு நிற ஆடை உடுத்தி வராகச் சக்கரத்தில் வீற்றிருக்கிறாள். இவளின் திருக்கரங்களில் கலப்பை, உலக்கை ஆகிய ஆயுதங்கள் மற்றும் அபய – வரத முத்திரையுடன் திகழ்கிறாள்!’’ என்று இன்னும் சில நூல்கள் தெரிவிக்கின்றன.


காசியம்பதி என்று போற்றப்படும் நகரில் ஸ்ரீ வாராஹிக்கு மிகப் பெரிய கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பாகவே (5.30 மணிக்குள்) வாராஹிக்கு அபிஷேக ஆராதனைகளும் அலங்காரங்களும் சிறப்புற நடைபெறுகின்றன. அப்போது, வாராஹிக்கு மூன்று வித ஆரத்திகள் நடைபெறுகின்றன. அப்போது தரிசித்தால் நம் பாவமெல்லாம் பறந்தோடும். புண்ணியங்கள் பெருகி நன்மைகள் பல்வும் நடைபெறும் என்பது ஐதீகம்.

தவிர, இங்குள்ள ஸ்ரீ வாராஹி தேவியை துவாரங்களின் வழியாகத்தான் தரிசிக்கவேண்டும். சந்நிதிக்கு மேற்புறம் உள்ள துவாரத்தை (பாதாள அறையைத் திறப்பது போல்) திறந்து காண்பிக்கிறார்கள்.

இந்த இடத்தில் இருந்து அம்பாளின் பாதங்களை மட்டுமே தரிசிக்க முடியும். இதையடுத்து, மற்றொரு துவாரத்தின் வழியாகப் பார்த்தால், வாராஹியின் நின்ற திருக்கோலத்தை முழுவதுமாகத் தரிசிக்கலாம். இங்கு, ஸ்ரீ வாராஹி உக்கிரமாகத் திகழ்வதால்தான் இப்படியொரு விசேஷ ஏற்பாடு என்று காசியம்பதி ஸ்தல புராணம் விவரிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in