

வி.ராம்ஜி
கல்வியை வழங்கும் சரஸ்வதிதேவிக்கான பூஜையை எப்படிக் கொண்டாடுவது, ஐஸ்வரியம் அருளும் மகாலக்ஷ்மியை எப்படி ஆராதிப்பது என்றெல்லாம் குழம்புகிறீர்களா. எதைச் சொல்லி எப்படி வழிபடுவது என்று சந்தேகமா.
கவலையே வேண்டாம். மகா சக்தியை வழிபட மிக எளிதான வழி இருக்கிறது.
‘எனக்கு ஸ்லோகமும் தெரியாது, மந்திரமும் புரியாது’ என்று சிலர் வருந்தலாம்.‘அம்பாளை வழிபட எனக்கு எந்த ஜபமும் தெரியாதே...’ என்று புலம்பலாம்.
கவலையை விடுங்கள். இதோ... இந்த ஒற்றை வார்த்தையை ஸ்லோகம் போல், ஜபம் போல் பாராயணம் செய்யுங்கள்.
வீட்டில் விளக்கேற்றி, அம்பாள் படங்களுக்கு செவ்வரளி மலர் சார்த்தி, முதுகு நிமிர்த்தி, கண்கள் மூடி அமர்ந்துகொள்ளுங்கள்.
‘ஓம் லலிதாதேவியே நமஹ’ என்று பூஜையில் அமர்ந்து, 108 முறை சொல்லுங்கள்.
அம்பிகையை வழிபடுங்கள். அனைத்து நலன்களையும் தந்தருள்வாள் தேவி.
இப்படி 108 முறை சொல்லும் போது, அம்பாள் படத்துக்கோ அல்லது விக்கிரகத் திருமேனிக்கோ செவ்வரளி மலர்களோ அல்லது செந்நிற மலர்களோ கொண்டு அர்ச்சித்து ஆத்மார்த்தமாக வழிபடுவது கூடுதல் பலன்களை வாரி வழங்கும். இல்லத்தில் சுபிட்சம் நிலவும். சந்தோஷம் பெருகும்.
இதை நவராத்திரி நாளில் மட்டுமின்றி, செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் காலையில் விளக்கேற்றி, அன்னையை மனதில் நினைத்து, மனதார வழிபடுங்கள். மங்கல காரியங்கள் இல்லத்தில் நிகழும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.
இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளியேற்றி அருள்வாள் மகாலக்ஷ்மி.