Published : 23 Jul 2015 11:59 AM
Last Updated : 23 Jul 2015 11:59 AM

சிவபெருமான்தான் அந்தப் பூ

வண்டைப் பார்த்து மாணிக்கவாசகர் கேட்கிறார். “என்ன செஞ்சுகிட்டிருக்கே?”

“தெரியலையா? பூவிலே தேன் குடிக்கிறேன்!”

‘‘ச்சே, தக்கனூண்டு இருக்கு, இதெல்லாம் ஒரு பூவா? இதெல்லாம் ஒரு தேனா?” என்று அலட்சியமாகச் சொல்கிறார் மாணிக்கவாசகர். “இதைவிட ரொம்பப் பெரிய ஒரு பூ இருக்கு. அதுல காலத்துக்கும் இனிமையான தேன் ஊறிக்கிட்டே இருக்கும். அந்தப் பூமேல நீ போய் உட்காரக்கூட வேண்டாம். அதைப் பார்த்தாலே, அதைப்பத்தி மனசுல நினைச்சாலே போதும், உனக்குள்ளேயே தானா தேன் சுரக்கும் தெரியுமா?”

“அப்படியா? நான் இதுவரைக்கும் ஏகப்பட்ட பூக்கள்ல தேன் குடிச்சிருக்கேன். ஆனால் நீ சொல்ற பூவைப் பார்த்ததே இல்லையே!” என்கிறது அந்த வண்டு. “அந்தப் பூ எங்கே இருக்குன்னு சொல்லு, உடனே அங்கே போய்ப் பார்க்கிறேன்.”

மாணிக்கவாசகர் சொல்லத் தொடங்குகிறார்:

தினைத்திணை உள்ளதோர் பூவினில் தேன் உண்ணாதே,

நினைத்தொறும், காண்தொறும், பேசும்தொறும், எப்போதும்

அனைத்து எலும்பு உள் நெக ஆனந்தத் தேன் சொரியும்

குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய், கோத்தும்பீ!

அந்த அரச வண்டு இப்போது தேன் அருந்திக்கொண்டிருக்கும் பூவைத் தினைத்திணை உள்ளது என்று அலட்சியமாகச் சொல்கிறார் மாணிக்கவாசகர். அதாவது, திணை போலச் சின்னஞ்சிறியதாக உள்ள பூ.

ஆனால், சோலையில் உள்ள எல்லாப் பூக்களும் இந்த மாதிரிதானே இருக்கின்றன? பிறகு அந்த வண்டு வேறு எந்தத் தேனை அருந்தும்? அதற்குப் பசிக்காதா?

“ வண்டே நான் சொல்லும் பூ மிகப் பெரியது. அதை நாம் நினைத்தாலே நம் எலும்புகள் நெகிழும், அதைப் பார்த்தாலோ, அதைப் பற்றிப் பேசினாலோ இன்னும் உருகிப்போய்விடுவோம், உள்ளே ஆனந்தத் தேன் தானாகப் பொழியும்.”

“அப்படிப்பட்ட அருமையான தேனைப் பொழிகிற அந்தப் பூ எங்கே இருக்கிறது தெரியுமா? கயிலாயத்தில்! ஆட்டப் பிரியனாகிய என் நாயகன் சிவபெருமான்தான் அந்தப் பூ! அரச வண்டே, நீ அந்தப் பெருமானுடைய காலடியைச் சென்று வணங்கு. அதன்மூலம் என்றைக்கும் குறையாத தேனைப் பெற்றுக்கொள்” என்கிறார் மாணிக்கவாசகர்.

பக்தித் தமிழ்

இறை இலக்கியங்களின் எளிய விளக்கம்

என். சொக்கன்

சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி ரோடு,

மயிலாப்பூர், சென்னை- 600 004

விலை: ரூ.160/-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x