Published : 04 Oct 2019 12:37 PM
Last Updated : 04 Oct 2019 12:37 PM

வெற்றி தரும் விஜய தசமி!

வி.ராம்ஜி

நவக்கிரகங்கள், நவரத்தினங்கள், நவதானியங்கள், நவயோகங்கள், நவரசங்கள், நவபாஷாணங்கள், நவகற்பங்கள், நவமேகங்கள், நவநிதிகள் என ஒன்பதின் முக்கியத்துவத்தை விசேஷமாக கூறுவார்கள். அந்த வகையில், நாடு முழுவதும் ஒன்பது நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது நவராத்திரி!

சிவராத்திரி சிவனுக்கு உகந்தது; தேவியருக்கு உகந்தது நவராத்திரி! ‘நவம்’ என்ற சொல்லுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ‘நவ நவமாய் பெருகும்’ என்று ஆச்சார்யர்கள் விவரிக்கிறார்கள்.

புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி.

நவராத்திரி பண்டிகை முடிந்து வரும் தசமி திதியை ‘விஜயதசமி’ என்று கொண்டாடுகிறோம். பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய திதிகளை சுபகாரியங்கள் செய்ய விலக்கி வைக்கிறோம். அந்த திதிகளையும் சிறப்பிப்பதற்காகவும், எல்லா திதிகளிலும் இறைவன் அம்சம் உளளது என்பதை உணர வைப்பதற்காகவும், நவராத்திரியில் இந்த திதிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

நவராத்திரியில் வரும் நவமி நாள் ஆயுத பூஜை. சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. மாணவர்கள் புத்தகங்கள், நோட்டு, பேனா, பென்சில் போன்றவற்றை வைத்து வணங்குவது வழக்கம். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று எல்லா துறைகளில் இருப்பவர்களும் ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடுவார்கள்.

பத்தாவது நாள் விஜயதசமி! இந்த நாளில் தொடங்கப்படுகிற எந்தச் செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். இந்த நாளில் ஞானம், வித்தை மற்றும் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும், நலமும் கிடைத்து சகல கலைகளிலும் சிறந்து விளங்கலாம். சிறக்க வாழலாம்!

மேலும் இந்தநாளில் கல்வி கற்கவும், புது கணக்கு ஆரம்பிக்கவும், முக்கிய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போடுவதற்கும் இயல், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடையவும் வழிபடுவது மிகவும் சிறந்தது.

சரஸ்வதி பூஜையைக் கொண்டாடுவோம். விஜய தசமியை கொண்டாடி மகிழ்வோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x